பிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி?
April 8 , 2019 2090 days 1238 0
மீண்டும் விவாத மையம் நோக்கி நகர்கிறது பிரெக்ஸிட் விவகாரம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த மசோதா, மக்களவையில் மிகச் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, அதன் இறுதிக்கட்டத்தில் காத்துக்கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் அரசு
கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியை பிரிட்டிஷ் அரசு ஆட்சேபிக்கிறது. இந்நிலையில், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான தடைகளைக் களைவதற்கான முயற்சியில் தனக்கு உதவுமாறு தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரெமி கார்பைனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் பிரதமர் தெரசா மே.
உடன்பாடு இல்லாமல் ஒன்றியத்திலிருந்து வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தேசியவாதிகளால், தெரசா மே முன்னெடுத்த முயற்சிகள் தடைப்பட்டு நிற்கின்றன. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தைக் காட்டிலும் மோசமான விஷயம் எதுவும் இருக்க முடியாது’ என்று நீண்ட காலமாக வலியுறுத்திவந்த தெரசா மே, உடன்பாடு இல்லாமல் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறாது என்று கடந்த வாரத்தில் அறிவித்திருக்கிறார். ஏப்ரல் 12 என்ற இறுதிக்கெடுவை நீட்டிக்க விரும்புவதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் சுங்க ஒன்றியத்துக்கு எதிராக இருப்பதையும் தெரசா மே மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். தொழிலாளர் கட்சியோ, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களோடு சுங்க ஒன்றியத்தையும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. எனவே, பேச்சுவார்த்தையில் இவையெல்லாம் தவிர்க்க இயலாதவையாக இருக்கும். இந்தப் பேச்சுவார்த்தையை தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சியினரே தீவிரமாக எதிர்க்கின்றனர். மிகச் சிலர் மட்டுமே மே - கார்பைன் இருவரும் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று நம்புகிறார்கள்.
உடன்பாடு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உடன்பாடு நாடாளுமன்றத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையானது, மேலும் ஒரு தடவை நாடாளுமன்றத்திடம் கருத்து கேட்பதற்கான கட்டாயத்தை அரசுக்கு உருவாக்கும். மாற்று வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தையும் உருவாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகத் தொடர்வது குறித்து 2016-ல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாண்டுகளாக நிலவிவரும் குழப்பங்கள், வணிகர்களிடமும் பொதுமக்களிடமும் மிகப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தெரசா மேயின் பொறுப்புணர்வு, மிகவும் காலம் தாழ்த்திய நடவடிக்கை. எனினும், கடைசியில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் மீது அவர் காட்டியிருக்கும் அக்கறை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவால் பிரிட்டன் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.