பிளாஸ்டிக்கால் புவியைச் சிதைப்பதில் நமக்குப் பங்கு இல்லையா?
May 8 , 2019 2072 days 1257 0
பிளாஸ்டிக் தொடர்பாக நாம் பேசத் தொடங்கும்போது அது நம் உலகை எவ்வளவு மாசுபடுத்தியிருக்கிறது என்றோ, எத்தனை உயிரினங்கள் பலியாகியிருக்கின்றன என்றோ புள்ளிவிவரங்கள் தர வேண்டிய அவசியம் இருப்பதில்லை. குப்பைத்தொட்டிக்கு வெளியே சிதறிக் கிடக்கும் குட்டிக் குட்டி பிளாஸ்டிக் மூட்டைகளைக் கிழித்துத் தின்ன முயன்றுகொண்டிருக்கும் மாடுகளைக் காணும்போது கடுமையான குற்றவுணர்வு ஏற்படும் அளவுக்கு நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் குற்றவுணர்வோடு மட்டும் நம்மால் அங்கிருந்து கடந்துசென்றுவிட முடிகிறதே ஏன்? அரசு கொண்டுவந்த கட்டுப்பாடு தேர்தல் அறிவிப்பு வந்த வேகத்தில் பிசுபிசுக்க, கூடவே நாமும் பழையபடி பிளாஸ்டிக் யுகத்துக்குள் இயல்பாக நுழைந்துவிடுகிறோமே எப்படி?
ஊகித்திராத அளவுக்கு அசுர வேகத்தில் பிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் புகுந்துவிட்டது. இன்றைய காரும் விமானமும் 50% பிளாஸ்டிக்கால் ஆனது. உடுத்தும் உடைகளுக்குள் பிளாஸ்டிக் கலந்துவிட்டது. ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்ப்பது குறித்து நாம் யோசிக்கும்வேளையில் முதல் கட்டமாக நம்மிலிருந்து எப்படித் தொடங்குவது என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வோம்.
பிளாஸ்டிக் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம்
இதோ இந்த நிமிடத்திலிருந்து என்று உறுதிபூண்டு அடுத்த நொடியே கைவிட்டுவிடும் விஷயம் அல்ல இது. புகைப்பழக்கம்போல இந்த பிளாஸ்டிக் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறோம். ‘இனி இங்கே பிளாஸ்டிக் பைகள் கிடையாது’ என்று மூன்று மாதங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த அறிவிப்புப் பலகையை இப்போது அகற்றிவிட்ட கடைக்காரர்களிடம் பேசியபோது சொல்லி வைத்தாற்போல எல்லோரிடமிருந்தும் ஒரே மாதிரியான பதில்தான் வந்தது. “நிறைய பேர் பை எடுத்துவருவதில்லை. இல்லை என்று சொன்னால் யார் தருகிறார்களோ அங்கே சென்றுவிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்கிவைக்கத் தொடங்கிவிட்டோம்.”
பிளாஸ்டிக் தடை அறிவிக்கப்பட்டபோது உலகின் பல்வேறு நாடுகளும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டன. ‘வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே இருக்கும் உளவியல் ஒப்பந்தமே காரணம்’ என்று இந்தப் பிரச்சினையை வரையறுத்தார்கள். ‘நான் உன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்குகிறேன்; எனக்கு அதை இலவச பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடு’ என்பதுதான் அந்த ஒப்பந்தம். இந்தப் பல ஆண்டு காலப் பழக்கத்தை பிளாஸ்டிக் தடை தகர்க்கிறது. ‘நீ என் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கு; அதை எடுத்துச்செல்ல நீயே ஒரு பையைக் கொண்டுவந்துவிடு’ எனும் புதிய ஒப்பந்தத்துக்குப் பெரும்பாலானவர்களால் தயாராக முடியவில்லை. விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பழைய ஒப்பந்தத்தைக் கையிலெடுக்கிறார்கள்.
எங்கள் அடுத்த தலைமுறையினர் பிளாஸ்டிக் இல்லா உலகில் வாழ வேண்டும் எனும் உயரிய லட்சியத்தோடு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக்குக்கு எதிரான நடவடிக்கைகள் மிக மும்முரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசு தடை அறிவிப்பதற்கு முன்பே, பொதுமக்களே அரசுக்கு அறிவுறுத்தும் நிகழ்வுகளெல்லாம் நடந்தேறியிருக்கின்றன. நியூசிலாந்து பிரதமரிடம் பிளாஸ்டிக்கைத் தடைசெய்யக் கோரி 65 ஆயிரம் பேர் மனு கொடுத்திருக்கிறார்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக்கூடப் பயன்படுத்தாத குடும்பங்களின் வாழ்க்கை முறைகளைப் பிரதானக் கட்டுரைகளாக ஊடகங்கள் வெளியிட்டன. ஒருவரைப் பார்த்து இன்னொருவர் என இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
தார்மிக உணர்வே இலக்கை அடையும் வழி
அரசு மட்டுமல்லாது நாமும் இதற்குக் காரணம் என்ற இடத்திலிருந்துதான் இதுபற்றி நாம் பேசத் தொடங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு சில நாடுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தன. சில நாடுகள் லட்சக்கணக்கில் அபராதம் அறிவித்தன. மிக அதிக அளவில் வரி விதித்து அந்த வரிப்பணத்தைச் சுற்றுச்சூழல் பராமரிப்புக்குச் செலவிட்டன சில நாடுகள். ஆனால், எங்கெல்லாம் மக்களாகவே கைவிட முன்வந்தார்களோ, எங்கெல்லாம் மக்களே பிளாஸ்டிக்குக்கு எதிராகத் தன்னார்வத்தோடு பிரச்சாரம் செய்தார்களோ அங்குதான் சுமுகமாக பிளாஸ்டிக் தடை சாத்தியமானது.
பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்திசெய்வதில் சென்னை முதலிடத்தில் இருக்கும் சூழலில் தமிழகம் எப்போதோ பிளாஸ்டிக் தடைக்கு முகம் கொடுத்திருக்க வேண்டும். இது காலம் தாழ்த்திய நடவடிக்கைதான் எனினும் ஒருமித்த உணர்வோடு நாம் வரவேற்றிருக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்த மனதோடு பிளாஸ்டிக்கைக் கைவிடுவதுதான் நம் இலக்கு. அது தார்மிக உணர்விலிருந்து வரும்போதுதான் சாத்தியமாகும்.
எதிர்கால சந்ததிக்கு உருவாக்கும் இழுக்கு
கடவுள் படங்கள் வரைந்துவைத்தால் சிறுநீர் கழிக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையெல்லாம் பொய்த்துப்போய்விட்ட காலத்தில் நாம் தார்மிகம் பேசுவதெல்லாம் நகைப்புக்கு இடமளித்துவிடும். தார்மிகத்தும் யதார்த்தத்துக்கும் உள்ள தூரத்தையும் நாம் அறிந்திராதவர்கள் அல்ல. ஆனால், தார்மிகத்தைத் தன் வாழ்வின் பகுதியாகக் கடைப்பிடிக்கும் சொற்பமான கூட்டம் ஒரு நேர்மறையான முன்னுதாரணமாக மாறும்போது இன்னும் கொஞ்சம் பேர் நம் இலக்கை விஸ்தரிக்க முன்வரக்கூடும்.
‘தன்னுடைய கல்லைத் தான் வைக்கும்போது, இந்த உலகத்தைக் கட்டமைப்பதில் தன்னுடைய பங்கையும் அளிக்கிறோம் என்ற உணர்வுதான் மானுடம்’ என்கிறார் பிரெஞ்சு நாவலாசிரியர் எக்சுபெரி. ‘ஒரு சிறு பிளாஸ்டிக் துணுக்கை நான் பயன்படுத்தும்போது இந்த உலகுக்கும் என் எதிர்கால சந்ததிக்கும் மிகப் பெரும் இழுக்கை உண்டாக்குகிறேன்’ என்று உணரத் தொடங்குவதே நம் இலக்கை எட்டுவதற்கான வழி.