TNPSC Thervupettagam

பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு: பிளாஸ்டிக் - பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது?

October 22 , 2019 1860 days 984 0
  • ஒரு கடைக்குப் போகிறீர்கள்... தேவையான பொருட்களை வாங்கிவிட்டு அவற்றை எடுத்துச்செல்ல பை கேட்கிறீர்கள். ஒருபுறம், பிளாஸ்டிக் கவர்கள் குறைந்த விலையில் தொங்கவிடப்பட்டுள்ளன. இன்னொரு புறம் விலை அதிகமான துணி, சணல் பைகள். எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?

நெகிழிப் பொருள்கள்

  • பிளாஸ்டிக்கின் வருகை உலகப் பொருளாதாரத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கியது. குறைந்த எடை, நீடித்த ஆயுள், ஈரத்தை அனுமதிக்காத தன்மை, குறைவான விலை உள்ளிட்ட அம்சங்களுடன் தொழில் துறையும் தனிப்பட்ட பயன்பாடுகளும் மளமளவென அதிகரித்தன. இதனால், இயற்கையான பொருட்களுக்கான தேவை குறைந்தது. பயன்பாடும் இல்லாமல்போனது. ஆக, பிளாஸ்டிக் அல்லாத பொருள் உற்பத்தி கணிசமாகக் குறைந்ததால், அது சார்ந்த பொருளாதாரம் கடுமையாக அடிவாங்கியது.
  • பிளாஸ்டிக்கை அதீத அளவில் பயன்படுத்தத் தொடங்கியது, மறுசுழற்சியின் போதாமை உள்ளிட்ட காரணங்களால் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோலக் குவிந்துவருகின்றன. உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள அனைத்தும் கழிவுகளாகின்றன. இதில் 1% மட்டுமே நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. மீதம் அனைத்தும் கடலில் கலக்கின்றன.
  • இந்தக் கழிவுகளால் நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறும் வேதிப்பொருட்கள், ஆக்ஸிஜனை உருவாக்கும் நுண்ணுயிரிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.
  • அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் மட்டும் ரூ.71 லட்சம் கோடி அளவுக்குக் கடல்வாழ் உணவுத் துறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பவளப் பாறைகள் அரிப்பும் கடந்த 40 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • போலவே, பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் நோய்களும் எண்ணிலடங்காதவை. பிளாஸ்டிக்கை எரிப்பதால் மற்ற எந்தப் பொருட்களை எரிப்பதைவிடவும் அதிக அளவில் கேடு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 10 பேரில் 9 பேர் மாசுபட்ட காற்றையே சுவாசிக்கின்றனர். இதனால் ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
  • உலக சுகாதார அறிக்கையின்படி, காற்று மாசு ஆண்டுதோறும் 70 லட்சம் மக்களைக் காவுவாங்குகிறது. அல்சைமர் மற்றும் டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்களும் காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன.

காற்று மாசுபாடு

  • அதிகக் காற்று மாசுபாடு ஏற்படும் நாட்களில் சீனாவிலுள்ள கால் சென்டர்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சுணக்கம் காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
  • நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதாரச் சுணக்கத்தில் பிளாஸ்டிக் முக்கியமான பங்கு வகிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தாத வரை, மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளாத வரை அமலில் இருக்கும் பிளாஸ்டிக் தடையால் எந்தப் பயனும் இல்லை. பிளாஸ்டிக் தடையால் அதுசார்ந்த வணிகமும் வேலைவாய்ப்புகளும் பறிபோகும் அபாயம் இருப்பதாக ஒலிக்கும் குரல்களை நாம் புறக்கணித்துவிட முடியாது.
  • பிளாஸ்டிக் சார்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிர்க்கதியாக்கிவிடக் கூடாது.

கழிவுகள்

  • எனவே, ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக்குகளையும், எங்கெங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்வது தொடர்பாகத் தீவிரமாகச் செயலாற்றத் தொடங்க வேண்டும். இதற்கு அதே தொழிலாளர்களை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • தரக் கட்டுப்பாடுகளை நிர்ணயித்து, தொடர்ந்து கண்காணிப்பதும், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசு சார்பில் உருவாக்குவதும், மறுசுழற்சியினால் வெளியாகும் கழிவுநீரைச் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் முறையாக வெளியேற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டியது அரசின் கையில் இருக்கிறது.
  • பிளாஸ்டிக்கை 100% பயன்படுத்தாத நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்தோ, சலுகைகள் அளிப்பது குறித்தோ பரிசீலிக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (22-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories