TNPSC Thervupettagam

பிளாஸ்டிக்: முழுத் தடைவிதிப்பதில் என்ன தடை?

October 18 , 2019 1919 days 1002 0
  • மனித குலத்துக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், செடிகொடிகளுக்கும் என ஒட்டுமொத்த சூழலுக்குமே மிகப் பெரும் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் மாறிவருவது குறித்துப் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பேசிக்கொண்டும் இருக்கிறோம்.
  • ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாகத் தடைவிதிக்க முடியவில்லையே, ஏன்? அதிக அளவில் உற்பத்தியாகும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையைக்கூட நம்மால் நிறைவேற்ற முடியவில்லையே, எதனால்? 2018-ல் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சூழலியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு 2020-ல் தடைவிதிக்கப்படும் என்று அறிவித்தார். பிறகு, காலக்கெடு 2022 என மாற்றியமைக்கப்பட்டது.

காரணங்கள்

  • இதற்கு என்ன காரணம்? இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காந்தியின் பிறந்த நாளிலும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
  • நீண்ட காலமாகவே இதுகுறித்து அரசு பேசிவந்தாலும், அதில் எந்தவொரு கொள்கை முடிவும் தீர்க்கமாக இதுவரை எடுக்கப்படவில்லையே, ஏன்? குடிசைத் தொழிலில் ஈடுபடுவோர், சிறு-குறு வணிகர்கள், மளிகைக் கடைக்காரர்கள் பயன்படுத்திவரும் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளன.
  • ஆனால், கார்ப்பரேட்டுகள் விற்கும் பிஸ்கெட்டுகள், சாக்லேட்டுகள், நொறுக்குத் தீனிகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத்தான் பயன்படுத்துகின்றன. அவற்றுக்கு ஏன் இன்னும் தடைவிதிக்கப்படவில்லை?

தடை – மாநிலங்கள்

  • இந்தியாவில் முதன்முதலாக 2009-ல் இமாச்சல பிரதேசத்தில் பிளாஸ்டிக் உபயோகத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் 2016-லும், டெல்லியில் 2017-லும் சிலவகை பிளாஸ்டிக்குகளுக்குத் தடைவிதிக்கப்பட்டன. கோவா மற்றும் குஜராத்தில் வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுப் பகுதிகள் போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது.
  • பிஹார், மகாராஷ்டிரம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களும் சமீபத்தில் இணைந்துள்ளன. ஆனால், பிளாஸ்டிக் தடை முழுமையாகச் செயல்பாட்டில் இருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் யதார்த்தம்.
  • கார்ப்பரேட்டுகளின் வணிகத்துக்காகவும் லாபத்துக்காகவும் பிளாஸ்டிக் தடைக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது என்று ஒலிக்கும் குரல்களை நம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.
  • அதேவேளையில், பிளாஸ்டிக் உபயோகத்துக்கு அரசு தடைவிதித்தபோது, பெருந்திரளாக ஆதரவுதந்த பொதுமக்களால்கூட அதைத் தொடர முடியாததற்கு என்ன காரணம் என்றும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

அரசு – போது மக்கள்

  • பிளாஸ்டிக் ஒழிப்பு எப்படி அரசுத் தரப்பிலிருந்து முழுமையாகச் சாத்தியப்படவில்லையோ அதேபோல பிளாஸ்டிக்கைக் கைவிட நினைக்கும் பொதுமக்களால்கூட முழுமையாக அதிலிருந்து விடுபட முடியாததற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது; அது மாற்று ஏற்பாடுகளில் இருக்கும் போதாமைதான்.
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே இதை முழுமையாக ஒழிப்பது குறித்து நாம் யோசிக்க முடியும். அந்த மாற்றுப் பொருட்கள் விலை மலிவாகவும், பரவலாகக் கிடைக்கும்படியும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
  • அரசு இதையெல்லாம் கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாகத் தடைவிதிப்பதை நோக்கி நகர வேண்டும். ஒரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்த முடியும்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பைச் சாத்தியமாக்க முடியும்போது பிளாஸ்டிக் தடை மட்டும் முடியாதா என்ன?

நன்றி: இந்து தமிழ் திசை (18-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories