TNPSC Thervupettagam

பிஹார் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்

October 8 , 2023 408 days 612 0
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பது உண்மை என்றால், பிஹார் மாநிலத்தில் நடந்திருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேசம் முழுவதுமே நடத்தப்பட்டாக வேண்டும்.
  • எங்கே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதம் மேலும் அதிகமாகிவிடுமோ என்ற முற்பட்ட சாதியினரின் அச்சம் காரணமாகவே இந்தக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் தொடர்பில் தேசிய ஊடகங்கள் பேச மறுக்கின்றன. இந்தக் கணக்கெடுப்பில் வெளியாகியிருக்கும் தரவுகளைப் பற்றி கவனம் குவிபடாமலிருக்க, அதன் பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கங்கள் பற்றியே ஊடகங்கள் பெரிதாகப் பேசுகின்றன.

என்ன சொல்கிறது பிஹார் கணக்கெடுப்பு?

  • பிஹார் அரசு வெளியிட்டுள்ள முதல் தரவுகள் தொகுப்பு, மாநிலத்தில் உள்ள 209 சாதிகள் பெயர்களையும், ஒவ்வொரு சாதியிலும் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் தெரிவித்திருப்பதுடன் மத அடிப்படையிலான எண்ணிக்கையையும் தெரிவிக்கிறது.

ஐந்து அம்சங்கள்

  • 1. நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021இல் எடுக்கப்பட்டிருக்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. 2011இல் பிஹார் மக்கள்தொகை 10.41 கோடி. 2023இல் இந்த எண்ணிக்கை 12.53 கோடி என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதாவது, பிஹாரின் மொத்த மக்கள்தொகை 13.07 கோடி, அவர்களில் 53.7 லட்சம் பேர் மாநிலத்துக்கு வெளியே வாழ்கின்றனர்.
  • 2. இது மூன்று பெரிய சமூகக் குழுக்களின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு என்று தொகுத்துக் கூறுகிறது: அவர்கள் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், முஸ்லிம்கள். 2011 உடன் ஒப்பிட்டால் பட்டியல் இனத்தவர் எண்ணிக்கை 16.0%லிருந்து 19.65%ஆக உயர்ந்திருக்கிறது, பழங்குடிகள் 1.3%-லிருந்து 1.68% ஆகியுள்ளனர், முஸ்லிம்கள் 16.9%-லிருந்து 17.70% ஆக அதிகரித்துள்ளனர்.
  • 3. இதுதான் முக்கயமானது. பிஹாரில் ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ (ஓபிசி) எவ்வளவு என்ற கணக்கை இது தருகிறது. பிஹாரில் 63.14% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி); தேசிய அளவில் சொல்லப்படும் 52% என்ற மாயையான எண்ணிக்கையைவிட இது அதிகம். இந்த எண்ணிக்கை நிச்சயம் சூறாவளியைக் கிளப்பும்.
  • 4. பிற்படுத்தப்பட்டோருக்குள்ளும் உயர்நிலையில் இருப்பவர்கள், பின்தங்கிய நிலையிலேயே இருப்பவர்கள் என்ற பிரிவும் எவ்வளவு வலுவானவை என்பதை இந்தக் கணக்கெடுப்பு தருகிறது. நில உடைமையாளர்களான யாதவர்கள், குர்மிகள், குஷ்வாஹாக்கள் போன்றோர் இணைந்து 27.12% ஆக உள்ளனர். அடுத்து, மிகவும் பின்தள்ளப்பட்டோர் (இபிசி) என்ற பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் - 36.01% உள்ளனர். அவர்கள் சேவைத் துறைகளில் ஈடுபடுகிறவர்கள், கைவினைஞர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள்.
  • 5. ‘பொதுப் பிரிவினர்’ அதாவது இதுவரை ‘இடஒதுக்கீட்டுப் பலன்கள் அளிக்கப்படாதவர்கள்’ என்ற வட்டத்திலுள்ள முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை மாநில மக்கள்தொகையில் 15.52% மட்டுமே. (நான்கூட பொதுப் பிரிவினர், மக்கள்தொகையில் 18% முதல் 20% வரை இருக்கக்கூடும் என்றே கருதிவந்தேன்).

பங்களியுங்கள்

புரட்டுகளும் உண்மையும்

  • 1931க்குப் பிறகு இப்போதுதான் சாதிவாரியாக மக்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. பிஹார் அரசியலையும் சமூகத்தையும் தொடர்ந்து கவனித்துவருகிறவர்களுக்கு இதில் பல வியப்பான தரவுகள் இருக்கின்றன.
  • பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் எண்ணிக்கை முறையே 4%, 5% என்று கருதப்பட்டது. உண்மையில் அவர்கள் 3.67%, 3.45% என்பதை இந்தக் கணக்கீடு சொல்கிறது. இது போன்றே பூமிஹார் என்றழைக்கப்படும் நில உடைமையாளர்கள் எண்ணிக்கை 4% - 5% என்றே கருதப்பட்டது. அவர்கள் 2.89% மட்டுமே என்பதை கணக்கெடுப்பு சொல்கிறது.
  • ஆக, முற்பட்ட சாதியினர் அல்லது சவர்ணர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 10% என்பது உறுதியாகிறது. காயஸ்தர்கள் 0.6% இதோடு சேர்த்தால் துல்லியமாக 10.61%.
  • 1931 கணக்கெடுப்பில் முற்பட்ட சாதியார் எண்ணிக்கை 15.4% ஆக இருந்தது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் எண்ணிக்கை அதிகமாக மதிப்பிடப்பட்டுவந்தது. முற்பட்ட சாதியினரின் எண்ணிக்கைக் குறைவுக்கு ஒரு காரணம் சிறு குடும்ப நெறியை அவர்கள் கடைப்பிடித்தது, மற்றொரு காரணம் நல்ல வேலை கிடைத்து வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டது என்கிறார் சின்மய தும்பே.
  • அதாவது, சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவித்தவர்கள் மேலும் சுகபோகங்களுக்காக மாநிலத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்; சமூகநிலை அடுக்கில் கீழே அழுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கிவிட்டனர் என்று இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், முஸ்லிம்கள் மக்கள்தொகை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது.
  • பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் செல்வாக்கான சில சாதியினர் அதிகமாக மதிப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. யாதவர்கள் எண்ணிக்கை 15%-20% இருக்கலாம் என்றே கருதப்பட்டது; உண்மையில் அது 14.3%. முன்னதாக, 1931இல் 12.7%ஆக இருந்திருக்கிறது. அதேபோல, குர்மிக்கள் 4% அல்லது அதற்கும் மேல் என்று கருதப்பட்துடுவந்தது; ஆனால், அவர்கள் எண்ணிக்கை 2.9% மட்டுமே என்பது தெரியவந்திருக்கிறது; 1931இல் 3.3% ஆக அவர்கள் இருந்தார்கள்.
  • யாதவர்களுக்கு அடுத்து மிகப் பெரிய சாதிகள் இப்போது ரவிதாஸ் (5.3%), துஸாத் (5.3%), குஷ்வாஹா (4.2%), முஷாஹர் (3.1%), தேலி (2.8%) மல்லா (2.6%) பணியா (2.3%). பணியாக்கள் என்று அழைக்கப்படும் வாணியர்கள் (வர்த்தக சமூகம்) பிஹாரில் ஒபிசிக்களாகக் கருதப்படுகின்றனர். கானு (2.2%), தானுக் 92.1%), பிரஜாபதி (1.4%), பதாய் (1.5%), கஹார் (1.6%) பிற சிறிய சாதிகள்.

இந்துக்கள் மட்டுமல்ல!

  • சாதிவாரியான இந்தக் கணக்கெடுப்பு இந்துக்களோடு முடியவில்லை. ஏனைய மதத்தினரையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
  • முஸ்லிம்கள் சமூகக் கணக்கு இது. பிஹாரின் மொத்த மக்கள்தொகையில் 17% பேர் முஸ்லிம்கள். இவர்களில்  (3.8%), சையத் (0.2%), மாலிக் (0.1%), படான் (0.7%) இவர்கள் எல்லாம் அஷ்ரஃப் என்றழைக்கப்படும் பொதுப் பிரிவினர்.
  • முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பாஸ்மாண்டாக்கள் என்று அழைக்கப்படும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர். முஸ்லிம்களில் நான்கில் மூன்று பங்கினர் இவர்கள்தான். ஜுலாஹா, துனியா, தோபி, லால்பேகி, சுர்ஜாபுரி ஆகியோர் இந்தப் பிரிவில் வருகின்றனர் (பாஸ்மாண்டாக்கள் மீதான பாஜகவின் அரசியல் கவனக் குவிப்பை இங்கே நினைவூட்டிக்கொள்ளலாம்).
  • இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடுத்த தவணைக்காகக் காத்திருக்கிறோம், பிஹார் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடரின்போது வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்பில் ஒவ்வொருவரின் கல்வி, தொழில், நில உடைமை, மாதாந்திர வருமானம், கார் – ஸ்கூட்டர் போன்ற மோட்டார் வாகன உடைமை பற்றியும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுதான் மிகவும் மதிப்பு மிக்க தகவல்களைத் தரப் போகிறது. ஒவ்வொரு சாதியும் சமூக – பொருளாதார நிலையிலும் கல்வியிலும் எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும்; இதை இதுவரை நாம் தெரிந்துகொள்ளவில்லை.

கணக்கெடுப்பு சுட்டும் அநீதி

  • மொத்த மக்கள்தொகையில் 10.6% மட்டுமே இருக்கும் முற்பட்ட சாதியினர் 1985இல் சட்டப்பேரவையில் 42% பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். 2020இல் அது குறைந்திருக்கிறது என்றாலும், 26%ஆக இருக்கிறது. அதாவது மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு பிரதிநிதித்துவம். இதே போன்று பிற்படுத்தப்பட்டோரில் யாதவர்களும் தங்களுடைய 14% மக்கள்தொகைக்கும் அதிகமாக 21% தொகுதிகளுக்குப் பிரதிநிதிகளாக இருக்கின்றனர்.
  • பல சமூகங்கள் தங்கள் மக்கள்தொகைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறாததையும் இது காட்டுகிறது.

பின்பற்றுமா பிற மாநிலங்கள்?

  • ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருப்போர் எண்ணிக்கை, பிற்படுத்தப்பட்டோரில் இருப்பவர்களைவிட முற்பட்ட சாதி வகுப்பில் இரண்டு மடங்காக இருக்கிறது; அதேசமயம், முற்பட்ட சாதிகளில் 9.2% மட்டுமே விவசாயத் தொழிலாளர்கள்; பிற்படுத்தப்பட்டோரில் அது 29.4%, தலித்துகளில் 42.5%.
  • கல்வி பெறுவதிலும் இந்த வேறுபாடு அப்பட்டமாக பெரிதாகவே இருக்கிறது. பொதுப் பிரிவினரில் 10.5% பேர் பட்ட வகுப்பு அல்லது அதற்கும் மேலே படித்தவர்கள், ஒபிசியில் அவர்கள் 2.8%, பட்டியல் இனத்தவரில் 2.1%.
  • இந்தத் தரவுகள் பரவலானவை. அடுத்த தவணையில்தான் ஒவ்வொரு சாதியிலும் படித்தவர்கள், நில உடைமையாளர்கள் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவரும். ஆக, ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதற்காக மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லை; ஒவ்வொரு சாதியிலும் சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பவர்கள் எத்தனை பேர், அவையெல்லாம் மறுக்கப்படும் சமூகத்தவர் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்க இது உதவுகிறது.
  • நம்முடைய அரசியலையும் சமூக நீதிக் கொள்கைகளையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு மிக மிக அவசியம் என்பதை பிஹார் கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.
  • சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியம் இருப்பது உண்மையானால் சாதிகள் எண்ணிக்கை குறித்தும் சாதிவாரியான அசமத்துவம் குறித்தும் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. சாதிப் பிரிவினைகள் காரணமாக மக்களில் எத்தனை பேர் எத்தனை விதமாக அழுத்தப்பட்டுள்ளனர் என்பதை ஒப்புக்கொள்ளவும், அவர்களுடைய எண்ணிக்கையைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவும், எந்த அளவுக்கு பாதிப்புகளை இவை ஏற்படுத்திவிட்டன என்பதை மதிப்பிடவும் அவசியம். பிஹாரின் இந்த முன்னெடுப்பை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (08 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories