TNPSC Thervupettagam

புதிய குற்றவியல் சட்டங்கள்: அனைவருக்கும் நீதி கிடைக்கட்டும்!

July 4 , 2024 191 days 321 0
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன
  • இந்தப் புதிய சட்டங்கள் 2023 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு பாஜக எம்பி பிரிஜ் பூஷண் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவின் விவாதத்துக்கு விடப்பட்டன. இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். குழு பரிந்துரைத்த சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்தச் சட்டங்கள் 2023 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறின.
  • நிலைக் குழுவின் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அவையில் போதுமான விவாதங்களுக்கு இடம் அளிக்காமல் இந்த மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்தச் சட்டங்களுக்கு சம்ஸ்கிருத மொழியில் பெயர் வைத்திருப்பதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காவல் துறை, நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய சட்டங்களைக் கையாள்வதற்குப் போதுமான பயிற்சி வழங்காமல் அவற்றை நடைமுறைப்படுத்துவது புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் பழைய சட்டங்களின்படியே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது நீதித் துறையின் சுமையை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
  • புதிய சட்டங்களின் மூலம் ஓர் இந்தியர், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டதிலிருந்து அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் உச்ச நீதிமன்றத்திடம் இருந்துகூட நீதியைப் பெற்றுவிட முடியும் என்றும் இந்தச் சட்டங்கள் தண்டனையைக் காட்டிலும் நீதிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அட்டவணை மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மாநில அரசுகள் இந்தச் சட்டங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
  • புதிய சட்டங்களின்படி ஒரு குற்றம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம்; காவல் துறையினர் மேற்கொள்ளும் தேடுதல், பொருள்கள்/தடயங்களைக் கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் காணொளியில் பதிவு செய்யப்பட வேண்டும். இது போன்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. குற்றம்சாட்டப்பட்டவரைக் காவல் துறை 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 40-60 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது காவல் துறையினரால் தவறாகக் கையாளப்படும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தேசத் துரோகச் சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் அதற்கு இணையான குற்றங்கள் சேர்க்கப்பட்டிருப்பது, ஆண்கள், திருநர்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தண்டிப்பதற்கான சட்டப் பிரிவுகள் இல்லாதது போன்றவை தொடர்பான விமர்சனங்களும் புறக்கணிக்கத்தக்கவை அல்ல.
  • ஆனால், இவை அனைத்தும் விவாதித்துச் சரிசெய்யப்படக் கூடிய பிரச்சினைகள் என்றும் இவற்றுக்காக இந்தச் சட்டங்களை நிராகரிப்பது சரியல்ல என்றும் அமித் ஷா கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் பரிசீலிக்க வேண்டும். புதிய சட்டங்களின் மூலம் குற்றங்களால் பாதிக்கப்படும் அனைவருக்கும் விரைவாக நீதி கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அதற்கு ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள், நீதிமன்றங்கள், காவல் துறை என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories