- தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எதிர்பார்த்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடுதான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
- வெள்ளை அறிக்கைக்கும் நிதிநிலை அறிக்கைக்கும் இடைப்பட்ட நாட்களில், முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை, பொது நிதிநிலை அறிக்கைக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கும் இடையே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமனம் ஆகியவை மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான காரணிகளாக உதவியிருக்கின்றன.
- ஏற்கெனவே, நீடித்துவந்த நிதிப் பற்றாக்குறையுடன் கரோனா காரணமான வருவாய்ப் பற்றாக்குறையும் சேர்ந்து, புதிய திட்டங்கள் எதற்கும் பெருமளவிலான நிதி ஒதுக்க முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
- அதே சமயம், தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளெல்லாம் இந்தக் கவலை தரும் நிதி நிலைமை துளிகூடத் தெரியாமலா வெளியிடப்பட்டன என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்திருக்கிறது.
- தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெட்ரோலின் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதன் பயன் எத்தனை காலத்துக்கு உதவியாக இருக்கும் என்பது சந்தேகமே.
- ஆனால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது பெருந்தொற்றுக் காலத்தில் நுண்கடன் நிறுவனங்களால் பெண்கள் அனுபவித்துவந்த தொடர் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பது ஆறுதலானது. நிதிப் பற்றாக்குறையின் நெருக்கடியானது நிர்வாகச் சீர்திருத்தங்களை நோக்கித் தள்ளுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
- 1921-லிருந்து சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அறிவிப்பு. தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் அது ஒரு தரவுக்களஞ்சியமாக மாறும் என்பது உறுதி.
- தமிழ்நாட்டின் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் அத்துறைக்கெனப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றாலும் பயிர்வாரியாகக் கவனம் செலுத்தப்பட்டிருப்பது வருங்காலத்தில் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படவும் மேம்படுத்தப் படவும் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை விதைக்கின்றன.
- நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு சன்ன ரகத்துக்கு ரூ.2,060 என்றும், சாதாரண ரகத்துக்கு ரூ.2,015 என்றும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வாரக்கணக்கில் காத்துக் கிடப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
- நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படாத, நிர்வாகரீதியிலான இந்தப் பிரச்சினைகளைக் களைவதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.
- வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளுக்கென்று முதலாவது வரவு-செலவுத் திட்டத்தில் மொத்தம் ரூ.34,220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 - 08 – 2021)