TNPSC Thervupettagam

புதுக்கோட்டையின் முதல் நிலவரைபடம்

January 9 , 2025 9 days 51 0

புதுக்கோட்டையின் முதல் நிலவரைபடம்

  • புதுக்கோட்டையிலிருக்கிறது ஆவூர் எனும் சிற்றூர். 15ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் பெரம்பூர் கட்டளூர் பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை கிறிஸ்துவத் திருச் சபையின் தலைவராக இருந்தவர் ராபர்ட்-டி-நோபிலி. இவர் திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு இமானுவேல் மார்ட்டின்ஸ் எனும் பாதிரியார் தலைமையில் ஒரு திருச்சபையை உருவாக்கினார். அப்போது திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் வசமிருந்தது.
  • திருச்சியில் நாயக்கர்களுக்கும் முகமதியர் களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இதனால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை அமைதியான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள். அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமே ஆவூர். பெரம்பூர் கட்டளூர் பாளையக் காரர்களிடமிருந்து ஒரு பகுதி நிலத்தைப் பெற்று பொ.ஆ. (கி.பி.) 1686இல் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை அமைத்தார்கள்.
  • இந்தத் திருச்சபைக்கு முதல் பாதிரியாராக நியமிக்கப்பட்டவர் டி. வெனான்ஸியுஸ் புச்சே. இவர் பெரம்பூர் கட்டளூர் பாளையக்காரர்களிடமிருந்து மேலும் சில இடங்களைத் தானமாகப் பெற்று மாதாக் கோயிலும் தங்குவதற்கு விடுதியும் பொ.ஆ.1697இல் கட்டிமுடித்தார்.
  • இந்த ஆலயத்தின் பெயரை, ‘வீரமாமுனிவர் பெரியநாயகி மாதா தேவாலயம்’ என்று மாற்றினார். இந்தத் தேவாலயத்தைக் கட்டிய காலத்தில் தான் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட பல்லவ ராயர்களிடமிருந்து நிலப்பகுதியை மீட்டு ராம்நாடு சேதுபதி மன்னர் தொண்டைமானுக்குக் கொடுத்தார்.
  • டி.வெனான்ஸியுஸ் புச்சே ஆவூர் ரோம் கத்தோலிக்கத் தேவாலயத்தின் பாதிரியாராக நியமிக்கப்படுவதற்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றிலுமிருந்த ஆட்சி நிலப்பகுதிகளை ஆய்வு செய்து ஒரு நிலவரைபடத்தை வரைந்தார். இதுவே புதுக்கோட்டை ஊர்ப் பெயர் இடம்பெற்ற முதல் நிலவரைபடம். இது பொ.ஆ.1650இல் வரையப்பட்டது. இந்த நிலவரைபடம் அன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சிகளையும் அவர்களின் நிலப்பரப்பையும் காட்டுகிறது.
  • வெள்ளாற்றின் தென்பகுதியான ராம்நாடை சேதுபதியும் வடமேற்குப் பகுதியான திருச்சியை நாயக்கர்களும் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியான தஞ்சாவூரை நாயக்கர்களும் ஆண்டிருக்கிறார்கள். மேலும் புதுக்கோட்டை நிலப்பகுதியைச் சுற்றிலும் மருங்காபுரி ஜமீன், மணப்பாறை ஜமீன், இலுப்பூர் ஜமீன், பெரம்பூர் கட்டளூர் ஜமீன்களும் மையப்பகுதியான புதுக்கோட்டை நிலப்பகுதியைப் பல்லவராயர்களும் ஆண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிலவரைபடம் காட்டுகிறது.
  • இந்தப் படத்தில் குடுமியாமலை (குடுமியான்மலை), வாராப்பூர், பெருங்களூர் என மூன்று ஊர்கள் இடம்பெற்றுள்ளன. வரைபடம் வரையப்பட்ட காலத்தில் புதுக்கோட்டையில் தொண்டைமான் காலூன்றியிருக்கவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. புதுக்கோட்டை நிலப்பகுதி தொண்டைமான் களுக்கு முன்பு பல்லவராயர்களால் ஆளப்பட்டது என்பதைச் சொல்லும் ஒரே நிலவரைபடம் இது.
  • மேலும் இலுப்பூர், மணப்பாறை, மருங்காபுரி ஜமீன்கள் இருந்ததையும் இந்தப் படம் காட்டுகிறது. இந்த நிலவரைபடத்தில்தான் புதுக்கோட்டை எனும் பெயர் முதலில் இடம்பெற்றது. ஆகவே இது புதுக்கோட்டையின் முதல் நிலவரைபடம். இதற்குப் பின் புதுக்கோட்டை நிலவரைபடங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு நபர்களால் வரையப்பட்டன. இதற்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது ஆவூர் பாதிரியார் டி.வெனான்ஸியுஸ் புச்சே வரைந்த நிலவரைபடமே!

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories