TNPSC Thervupettagam

புதுப்பாதை போட வேண்டும்!

February 20 , 2021 1429 days 846 0
  • "அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று உலகத்துக்கு அறிவித்தது திருக்குறள். அறிவில்லாதவர் எத்தகைய செல்வம் பெற்றிருந்தாலும் பயன் இல்லை. எனவே அறியாமை என்னும் இருட்டிலிருந்து அறிவு என்னும் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் கல்வியைப் பெறுவது எப்படி? எல்லாவற்றிற்கும் புத்தகங்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன. அதனால்தான் மகாகவி பாரதி, "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்' என்று பாடினார். அவற்றை எங்கே சென்று தேடுவது?
  • ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. மனித வர்க்கமாகிய புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா? என்று கேட்டார் மகாத்மா காந்தியடிகள்.
  • பெருந்தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தை யொட்டி எல்லாம் மூடப்பட்டது போலவே நூல் நிலையங்களும் மூடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட நூலகங்கள் இப்போது பகுதிநேர அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. இது இன்னும் எவ்வளவு காலம் தொடர்வது?
  • பள்ளி, கல்லூரிகள் இயங்க தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு நூலகங்கள் முழு நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
  • அரசின் பொதுநூலகங்களில் பத்திரிகைகள் மற்றும் நாளிதழ் பிரிவு 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை. வாசகர்களுக்கு எப்படி இருக்கும்? இப்போது நூல் இரவல் கொடுக்கும் பிரிவுகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் நூலகங்களுக்கு பத்திரிகை வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.
  • ஒரு நாடு பொருள் வளத்தை மட்டுமே வைத்து மதிக்கப்படுவது இல்லை. அறிவு வளத்தைக் கொண்டே அந்த நாட்டின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அளந்து அறிகிறார்கள். அதனை வைத்தே அந்த நாடு மதிக்கப்படுகிறது. பாராட்டப்படுகிறது.
  • கடந்த கால வரலாற்றில் சிறந்த நாகரிகங்கள் எல்லாம் இப்படித்தான் வரலாற்றில் இடம் பெறுகின்றன. சுமேரியாவில் கி.மு. 2700-ஆம் ஆண்டில் நூலகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு நூலகத்தில் 30 ஆயிரம் மண் பலகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
  • அவற்றில் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் அக்கால மக்களின் சிந்தனை வளம், சிறந்த பண்பாட்டு வாழ்வு, கலை, இலக்கியப் பெருமைகளை அறியவும், அதனைக் கொண்டு அக்கால மக்களின் பண்பட்ட நாகரிகத்தை புரிந்துகொள்ளவும் முடிகிறது.
  • கி.மு. 500 முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை செழித்திருந்த கிரேக்க ரோமானிய நாகரிகம் அழிக்க முடியாத அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. தத்துவ வித்தகர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடிலின் சிந்தனை வளமே இதற்கு காரணமாகும்.
  • ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்காத, அறிவு ஓர் அறிவே அல்ல என்பது கிரேக்க அறிஞர்கள் உலகத்துக்கு அளித்த உபதேசம். "உன்னையே நீ அறிவாய்' என்பது சாக்ரடீஸ் மக்களுக்குத் தந்த தத்துவம். இவை காலம் கடந்தும் சிந்திக்கச் செய்கிறது.
  • சிந்தனையாளர்களின் தத்துவங்கள் இன்று வரை இருப்பதற்குப் புத்தகங்களே துணை செய்கின்றன. புத்தகங்கள் எல்லாம் வெறும் ஓலைச் சுவடிகளோ, காகிதங்களோ அல்ல. அவை அறிவைச் சுமந்த ஆயுதங்கள். உலகில் நடந்த எல்லாப் புரட்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் இந்த ஆயுதங்களே வெற்றிகளை நிர்ணயித்தன. சமாதானத்தையும், அகிம்சையையும் கொண்டு வந்து கொடுத்தன.
  • கிரேக்க நாட்டின் பெருங்கவிஞர் ஹோமர் எழுதிய "ஒடிசி', "இலியட்' என்னும் காவியங்கள் மூலம் அக்கால கிரேக்கர்கள் பற்றியும், கிரேக்க பண்பாட்டைப் பற்றியும் அறிய முடிகிறது.
  • கிரேக்கர் வரலாற்றில் பொற்காலம் படைத்தவர் பெரிக்கினிஸ். இவர் சிறந்த மேதை, ஆற்றல்மிக்கப் பேச்சாளர், அரசியல்வாதி, தளபதியாக இருந்து நிர்வாக அவையின் தலைவர் ஆனவர். மக்களாட்சியை நிறுவி சிறந்த ஆட்சியை அளித்தவர்.
  • மனித சமுதாயம் மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு வந்த வரலாறு சிந்தனையாளர்கள் போட்டு வைத்த பாதையாகும். உலகம் இந்தப் பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறது. நாமும் போய்க் கொண்டு இருக்கிறோம். தத்துவ மேதைகளின் சிந்தனைகள் எப்போதும் காலங்களைக் கடந்து நிற்கும். அதைக் கண்டறிந்து புத்தக வெளிச்சத்தில் புதுப்பாதை போட வேண்டும்.
  • மனித இனம் தன் உரிமைச் சாசனத்தை எங்கோ தொலைத்துவிட்டு தேடி அலைந்தது. அந்த உரிமைப் பட்டயங்களைத் தேடி கொடுத்தவர்களே சிந்தனையாளர்கள். அவர்களே அக்கால ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டனர். அன்றும், இன்றும் ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு சிறைக் கொட்டடியில் சித்திரவதைப்பட்டனர். அவர்கள் சிந்திய ரத்தமே புதிய வரலாறாக மலர்ந்து நிற்கிறது.
  • உலகத்தையே புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி 1789-ஆம் ஆண்டு பேரண்டத்தையே பிளக்கும் பேரோசையோடு பிறந்தது. அடக்குமுறைகள் நொறுக்கப்பட்டது. அரண்மனைக் கதவுகள் தகர்க்கப்பட்டன. தொழிலாளர்களின் போராட்ட முழக்கத்தின் முன் எல்லாம் அடிபணிந்தது. புதிய வரலாறு பிறந்த கதை இது. வால்டேரும், ரூசோவும் இந்த வரலாற்றை எழுதினர்.
  • பழைமையை அழிக்கப் பிறந்தான் வால்டேர். புதுமையைப் படைக்கப் பிறந்தான் ரூசோ. பாழான பழைய கட்டிடத்தை இடித்து விட்டால் மட்டும் போதுமா? புதிய கட்டிடத்தையும் கட்டிக் கொடுக்க திட்டம் வகுத்தான் ரூசோ.
  • பதினெட்டாம் நூற்றாண்டை "புரட்சி நூற்றாண்டு' என்று கூறலாம். "சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்' என்ற முழக்கம் அப்போது பிறந்தது. அந்தக் கருத்துகளின் விரிவாக்கமாக 'சமுதாய ஒப்பந்தம்' என்னும் புரட்சிகரமான நூல் வெளிவந்தது.
  • மனிதன் எப்போதும் சுதந்திரத்தோடுதான் பிறக்கிறான். ஆனால் எங்கு நோக்கினும் அவன் அடிமைத் தளைகளில் பிணைக்கப்பட்டே காட்சியளிக்கிறான் என்று சிந்தனையாளர் ரூசோ எழுதினான். வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பிரெஞ்சுப் புரட்சி ரூசோவின் மரணத்துக்குப் பிறகுதான் எழுச்சி கொண்டது.
  • தென்னாப்பிரிக்காவின் தேசியத் தலைவர் நெல்சன் மண்டேலா அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 1962-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ராபின் தீவில் உள்ள தனியறையில் 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் சிறைத் தலைவரிடம் கேட்டது என்ன தெரியுமா? எனக்கு வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறைச்சாலையில் புத்தக வாசிப்பை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • புத்தகங்கள் அறிவை வளர்க்கும் சிறந்த பொழுது போக்காகும். புத்தகம் வாங்குவது என்பது செலவினம் அல்ல. அவை மூலதனம் என்றே அறிஞர்கள் அறிவுறுத்தினர். உலகமும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனைச் சுற்றியே உலகமும் இயங்குகிறது. சமூக முன்னேற்றமும், தேச முன்னேற்றமும், உலக முன்னேற்றமும் இதில்தான் அடங்கியிருக்கிறது.
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவு கொள்ளுவதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு. ஆயினும் காலத்தின் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது. அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம் என்றார் டாக்டர் மு.வரதராசனார்.
  • இதனால்தான் ஒரு குழந்தைக்கு நாம் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு புத்தகமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறிச் சென்றனர். "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்று ஒüவைப் பிராட்டியும் அறிவுரை கூறினார்.
  • புத்தகங்கள் வாங்க வேண்டும். அதிலும் நல்ல நல்ல புத்தகங்களாகப் பார்த்து வாங்க வேண்டும். எல்லாவற்றிலும் தீயவை இருப்பது போல புத்தகங்களிலும் தீயவை ஒளிந்து இருக்கக் கூடும். தீமையை யாராவது காசு கொடுத்து வாங்குவார்களா?
  • நூல் நிலையத்திற்குள் பாம்பை நுழைய விட்டாலும் பரவாயில்லை. நமது பண்பாட்டை, ஒழுக்கத்தை, உணர்வைக் கெடுக்கிற நூல்களை நுழைய விடக் கூடாது என்று குன்றக்குடி அடிகளார் கூறுவதும் அதனால்தான். நமது இளைய தலைமுறைக்கு நல்லதை விடத் தீயதே விரைவில் சென்று சேரும். இதில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • இப்போது அறிவியல் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்பது அறிஞர்களின் கவலை. இந்த நியாயமான கவலை போக்கப்பட வேண்டும். ஆங்காங்கே நடக்கும் "புத்தகக் கண்காட்சிகள்' புதிய எழுச்சியை உருவாக்கி வருவது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த நம்பிக்கை யளிக்கும் போக்கு தொடர வேண்டும்.
  • புத்தக வெளியீட்டாளர்கள் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டுமானால் தமிழக அரசு இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது நூலகத்தின் மூலமாக புத்தகங்கள் வாங்குவதை ஒவ்வோர் ஆண்டும் தொடர வேண்டும். அப்போதுதான் புதிய புதிய புத்தகங்கள் வெளிவரும். எழுத்தாளர்களும் பயன் பெறுவர். வாசகர்களும் மகிழ்ச்சியடைவர். அறிவுலகம் வளர்ச்சி பெறும்.
  • வாசிக்கும் வழக்கம் உள்ள நாட்டில்தான் சக மனிதனை நேசிக்கும் மனிதநேயம் வளரும் என்பது பொதுவான விதி. நாடு முன்னேற வேண்டுமானால் சமுதாயம் முன்னேற வேண்டும். சமுதாயம் வளர வேண்டுமானால் பண்பாடு வளர வேண்டும். பண்பாடு வளர வேண்டுமானால் குடிக்கும் பழக்கம் குறைய வேண்டும். படிக்கும் பழக்கம் வளர வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 02 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories