- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ‘உலகப் புத்தக தின’மாகக் கொண்டாடப் படுகிறது. ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல எழுத்தாளுமைகளின் பிறந்த தினங்களும் நினைவு தினங்களும் அந்தத் தேதியில் வருவதால், 1995 முதல் யுனெஸ்கோ நிறுவனம் அத்தேதியை ‘உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தின’மாகக் கொண்டாடிவருகிறது. தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு சில பதிப்பகங்களும் வாசகர்களும் இணைந்து ஆண்டுதோறும் இந்தக் கொண்டாட்டத்தை நடத்திவருகிறார்கள்.
வாசிப்பின் உன்னதம்:
- அச்சிடப்பட்ட புத்தகங்களை வாசிப்பது மட்டுமே வாசிப்பு அல்ல. குழந்தையின் முக பாவங்களிலிருந்தும் அழுகையிலிருந்தும் குழந்தையின் தேவையை ஒரு தாய் வாசிக்கிறார். சாலைகளில் நிறுவப்பட்டுள்ள குறியீடுகளை வாசித்து ஓர் ஓட்டுநர் வண்டியை ஓட்டுகிறார்.
- ஒரு கடற்பயணி வரைபடத்தை வாசித்துக் கப்பலைத் திருப்புகிறார். ஒரு தொல்லியலறிஞர் ஒரு கல்வெட்டையோ ஒரு மட்பாண்டத்தையோ வாசித்து நம் முன்னோர்களின் வாழ்க்கைத் தடங்களைக் கண்டறிகிறார். ஒரு விவசாயி நெற்றியில் கை வைத்துக் கண்களைச் சுருக்கி வானத்தைப் பார்த்து வானிலையையும் மழைக்கூறையும் வாசிக்கிறார். இவை யாவற்றையும்விட உன்னதமான வாழ்வனுபவங்களைப் புத்தக வாசிப்பு தரும்.
- ‘எல்லா வாசிப்புகளுமே கண்களால் தொடங்குபவை; கண்களே இந்த உலகில் மனிதர் அடியெடுத்து வைப்பதற்கான நுழைவாசல்’ என்கிறார் ஆல்பர்ட்டோ மாங்குயேல் (’A History of Reading’, Alberto Manguel). எழுத்து எனப்படும் குறியீடுகளின்மீது கண்களை ஓட்டிப் பொருள் கொள்ளும் வித்தையை வாசிப்பு என்கிறோம். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், மரப்பட்டைகள் என எழுத்து வடிவில் தமிழர்கள் எழுதிவந்தார்கள்.
- பின்னரே அச்சுப் புத்தகம் வந்தது. இந்திய மொழிகளில் அச்சேறிய முதல் மொழி தமிழ் மொழிதான். ‘தம்பிரான் வணக்கம்’ என்கிற நூலே தமிழின் முதல் அச்சுப் புத்தகம் (‘தமிழ் அச்சுத்தந்தை அண்ட்ரிக் அடிகளார்’ - ஆ.சிவசுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு).
கொஞ்சம் வரலாறு:
- ஜெர்மனியைச் சேர்ந்த யோஹானஸ் கூட்டன்பர்க் என்பவர், சிறிய மரத்துண்டுகளில் தனித்தனி எழுத்துகளைச் செதுக்கி பொ.ஆ. (கி.பி.) 1439இல் அச்சுத் தொழிலுக்கு முதன்முதலில் அடிகோலினார். கூட்டன்பர்க்கின் ஏற்பாட்டுடனும் பாஸ்ட்டின் ஒத்துழைப்புடனும் ஸ்கோபரின் கைவண்ணத்துடன் பொ.ஆ.1455இல் அச்சுக்கலை இன்னும் செம்மையாக உருவானது.
- கிறித்துவச் சமய ஊழியத்துக்காகப் போர்ச்சுகலிலிருந்து ஆப்பிரிக்காவிலுள்ள அபிசீனியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட இருந்த அச்சுகளும் அச்சு இயந்திரமும் அச்சடிப்பாளரும் பாதிரிமாரும், வானிலை சரியில்லாததால் இந்தியாவிலுள்ள கோவாவில் வந்து இறங்கும்படி நேரிட்டது. இந்த வகையில் அச்சுக் கலை 06.09.1556 அன்று இந்தியாவுக்குள் தற்செயலாக வந்துசேர்ந்தது. புதிதாகக் கிறித்துவ மதத்துக்கு மாறியவர்களுக்குப் பயன்படக் கூடிய அளவில் சிறு வெளியீடுகளையும் நூல்களையும் அச்சிட பாதிரிமார்கள் திட்டமிட்டனர்.
- ஆனால், அச்சுக் கருவிகளுடன் வந்திறங்கிய மதபோதகர் திடீரென இறந்துவிட்டதால் அச்சுக் கருவிகளைக் கையாள்வதற்குப் பல நாள் பிடித்தது. 20.02.1557இல் ஹென்றி ஹென்றி குவிஸ் பாதிரியார் என்கிற அண்ட்ரிக் அடிகளார் ‘தம்பிரான் வணக்கம்’ என்கிற 16 பக்கங்கள் கொண்ட குறுநூலைக் கொல்லத்தில் அச்சடித்து வெளியிட்டார்; தமிழ் எழுத்து அச்சுகளில் வெளிவந்த முதல் நூலாக இது அமைந்தது.
- உலகப் புத்தக நாளில் அண்ட்ரிக் அடிகளாரை நாம் நினைவுகூர வேண்டும். அன்று தொடங்கிய தமிழரின் புத்தகப் பயணம் இன்று மாவட்டம்தோறும் பல்லாயிரம் புத்தகங்களுடன் புத்தகக் காட்சிகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் வாசிப்பு இயக்கத்துக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையும் திட்டமிடுவது கூடுதல் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டில் வாசிப்பு:
- நாங்கள் 1990களில் அறிவொளி இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அதில் இணைந்து கற்றவர்களிடம், ‘புத்தகம் வாசிங்க… இடைநில்லாமல் வாசிங்க... இல்லாவிடில் எழுத்து மறந்துபோகும்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம்.
- அப்போது மக்கள் கேட்ட கேள்வி, இப்போதும் மறக்க முடியாதது: ‘சும்மா சும்மா எங்களையே படி படின்னு சொல்றீங்களே… இந்த ஊரில் எத்தனை பேர் படிச்சவங்க இருக்காங்க, அவங்க ஒரு நாள்கூடப் புத்தகம் எடுத்து வாசிச்சுக் கண்ணால பார்த்ததில்லே… அவங்களை முதல்ல படிக்கச் சொல்லுங்க சார்!’ என்பார்கள்.
- பள்ளிக் கல்வியோ கல்லூரிக் கல்வியோ முடித்தவர்கள் ‘படித்து முடித்த’ களைப்பில், அப்புறம் எப்போதுமே புத்தகத்தைக் கையில் எடுப்பதில்லை. நம்முடைய தேர்வு முறைகள் வாசிப்பு விரோதிகளைத் தயாரிக்கவே உதவுகின்றன. அந்தப் பட்டியலில் ஆசிரியர், பேராசிரியர் பெருமக்களும் இருக்கிறார்கள். வாசிப்பின் இன்பத்தை அனுபவிக்காத ஓர் ஆசிரியர், மாணவர் உள்ளங்களில் வாசிப்புப் பசியைப் பற்ற வைக்க முடியுமா?
- புத்தகங்களை வாங்க வைப்பதற்கு எப்படியெல்லாம் வசீகரித்தும் பேசியும் மக்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு மாவட்டத் தலைநகரில் ஒரு புத்தகக் காட்சியைச் சிறப்பாக நடத்த வேண்டுமானால், ஒரு கோடி வரை பணம் செலவாகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் வைத்து, மக்களை நாலு புத்தகம் வாங்க வைக்கப் படாதபாடு படவேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் சேலத்தில் ‘பாலம்’ என்கிற புத்தக நிலையம் வாரம் ஒரு புத்தக அறிமுகம் என்று இடைவிடாமல் 500 கூட்டங்களை நடத்தியிருக்கிறது.
- புத்தகங்களின்மீது காதலை வளர்க்கும் இடங்களாகக் குடும்பங்களும் வகுப்பறைகளும் மாறினால் தான் விடிவு பிறக்கும்; புத்தக வாசிப்பில் மாபெரும் உடைப்பு ஏற்படும்!
நன்றி: தி இந்து (17 – 04 – 2023)