TNPSC Thervupettagam

புத்துயிர் பெற வேண்டும் தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம்

January 24 , 2024 216 days 275 0
  • ‘ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’ என்று 2005இல் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது; இருந்த போதிலும், மாநிலக் குழந்தைகளுக்கான ஆணையங்கள் அமைப்பது தாமதமாகிவந்தது. அனைத்து மாநிலங்களும் கட்டாயம் குழந்தைகள் ஆணையங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர், பல மாநிலங்கள் குழந்தைகளுக்கான ஆணையங்களை அமைத்தன. அதன்படி, தமிழகத்தில் 2013இல் முதன்முதலாக மாநிலக் குழந்தைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • இந்நிலையில், 2022 பிப்ரவரியில் தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தை மாநில அரசு கலைத்தது; புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு விளக்கமளித்தது. ஆனால், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, போக்சோ சட்ட அமலாக்கத்தைக் கண்காணிப்பது எனப் பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டிய இந்த ஆணையத்தில், கடந்த 18 மாத காலமாகத் தலைவரும் உறுப்பினர்களும் இல்லை. இது மிகுந்த கவலையளிக்கிறது.
  • மேலும், தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்குப் புதிய விதிகளை உருவாக்க அரசுக்குப் பரிந்துரைக்கும் வகையில், மாதிரி வரைவு விதிகளைத் தயாரிக்கும் பணிக்கு, தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தீர்மானம் மூலம் 2021இல் அப்போதைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் நியமனம் செய்யப்பட்டார். 27 பக்கங்கள் கொண்ட மாதிரி விதிகளை அவர் சமர்ப்பித்தபோதிலும் மாநிலக் குழந்தைகள் ஆணையம் ஆணையக் கூட்டத்தில் அதை அங்கீகரித்து அரசுக்குச் சமர்ப்பிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் பதவிவிலகினார்.
  • முக்கியப் பணிகளைக் கொண்டுள்ள ஆணையத்துக்குக் கௌரவத் தலைவர், உறுப்பினர்கள் இருப்பது சரியல்ல என்பதால், ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் முழு நேர அலுவலர்களாக இருக்க வேண்டும் என்றும், தலைவருக்கு மூத்த மாவட்ட நீதிபதிக்கு வழங்கும் சம்பள விகிதமும் உறுப்பினர்களுக்கு மாநில அரசின் துணைச் செயலாளர்களுக்கு வழங்கும் சம்பள விகிதமும் வழங்கப்பட வேண்டும் என்றும் மாதிரி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேசியக் குழந்தைகள் ஆணையத்திலும் மாநில மனித உரிமை ஆணையங்களில் உள்ளதுபோல நிர்வாகப் பிரிவு, கண்காணிப்புப் பிரிவு, புகார்கள் விசாரணைப் பிரிவு, விழிப்புணர்வுப் பிரிவு, கணக்குப் பிரிவு ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டு, அதற்கெனப் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மாதிரி விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த மாதிரி விதிமுறைகள் விதிகளாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நாட்டிலேயே முன்மாதிரி ஆணையமாக விளங்கும்.
  • தமிழ்நாடு அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் ஆணையத்தின் விதிகளை வலுப்படுத்தி, காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டியது மிக அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories