புரட்சியின் 40-வது ஆண்டு: இன்றும் தொடரும் ஈரானின் சவால்கள்!
February 15 , 2019 2148 days 1668 0
ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவரும் சூழலில், உள்நாட்டிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அந்நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்தும் பரவலான குரல்கள் எழுந்திருக்கின்றன.
ஈரான்
1979-ல் அமெரிக்க ஆதரவு மன்னர் முகமது ரெஸா ஷாவின் ஆட்சியை அகற்றிவிட்டு, அயதுல்லா கொமேனியால் கொண்டுவரப்பட்டது இஸ்லாமியக் குடியரசு. இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அதற்குத் துணை நின்றன. இன்றைக்கு அந்நாட்டின் பொருளாதாரம் நலிவுற்றிருக்கிறது. சமூகத்திலும் பதற்றம் நிலவுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வு மீண்டும் பொங்கி எழுகிறது.
இஸ்லாமியக் குடியரசு ஏற்பட்ட பிறகு 1980 முதல் 1988 வரையில் இராக்குடன் நடந்த போரின் தொடர்ச்சியாக, மேற்கு ஆசியாவின் பிற நாடுகளிடமிருந்து ஈரான் தனிமைப்பட்டது. பொருளாதாரரீதியான பிரச்சினைகளும் அதிகரித்தன. ஆனால், இந்தச் சவால்களையே சாதனைகளுக்கான படிக்கல்லாகவும் மாற்றிக்கொண்டது ஈரான் அரசு. கல்வி, சுகாதாரத்தில் அரசு நிறைய முதலீடு செய்தது பெரும் பலனளித்தது. 93% பேர் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதும், பல்கலைக்கழகங்களில் பயில்வோரில் மாணவியர் எண்ணிக்கை 60%-க்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்க சாதனைகள்.
2015-ல் பல நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டபோது, உலக அளவிலான பொருளாதார, ராஜதந்திர நீரோட்டத்தில் சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அந்நாட்டில் பரவலாக எழுந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையைக் குலைத்துவிட்டன.
அணுசக்தி உடன்பாட்டிலிருந்து விலகிய டிரம்ப், மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஈரானின் போட்டியாளரான சவுதி அரேபியாவுடன் கைகோத்தார். சிரியாவில் ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களும் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.
பொருளாதார நிலைமை
பொருளாதார நிலைமை மோசமாகிவருவதால் உள்நாட்டில் அரசுக்கு எதிராக மக்களுடைய போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பொது இடங்களில் பெண்கள் முக்காடு இட்டு தலையை மூடிக்கொள்ள வேண்டும் எனும் ஆணைக்கு எதிராகப் பெண்கள் நடத்திய மிகப் பெரிய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. அதேசமயம், தங்கள் உள்விவகாரங்களில் அன்னியர் தலையீடு இருப்பதாக ஈரானிய அரசு கூறிவருவதில் உண்மை இல்லாமல் இல்லை.
இந்தச் சூழலில், பிற நாடுகளின் உதவியுடன்தான் அமெரிக்காவின் எதிர்ப்பையும் தடை நடவடிக்கைகளையும் ஈரானால் சமாளிக்க முடியும். மறுபுறம், அரசு நிர்வாகத்தைச் சரிப்படுத்துவது, ஊழலைக் கட்டுப்படுத்துவது என்பன உள்ளிட்ட சவால்களும் தொடர்கின்றன. சர்வாதிகாரியாக இருந்த ஷா மன்னருக்கு எதிராக மக்கள் திரண்டதன் விளைவாகத்தான் இஸ்லாமியக் குடியரசு ஏற்பட்டது. அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறவாமல் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.