TNPSC Thervupettagam

புரவி எடுப்பு விழா!

October 3 , 2024 2 hrs 0 min 15 0

புரவி எடுப்பு விழா!

  • ஒவ்வொரு கிராமத்திலும் அய்யனார் கோயில் இருக்கும். காவல் தெய்வம் என்பதால் கிராமத்துக்குள் கள்வர்கள், எதிரிகள், ஆபத்து விளைவிக்கும் விலங்குகள் நுழைந்திடாதவாறும் கொடிய நோய்கள் பாதிக்காதவாறும் அய்யனார் பாதுகாப்பார் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால்தான் பெரும்பாலும் அய்யனார் கோயில்கள் கிராமத்து எல்லைகளில் அமைந்திருக்கின்றன.
  • கிராமங்களில் கட்டிடங்கள் எதுவுமின்றி, வெட்டவெளியில் ஒரு பீடத்தின் மேல் அய்யனார் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் அய்யனார் பெரிய மீசை, தலையில் கிரீடம், நெற்றியில் திருநீறு, கையில் பெரிய வீச்சரிவாளுடன் கம்பீரமாகக் காட்சி தருவார். இடது காலை மடக்கி, வலது காலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருப்பார்.
  • அய்யனார் கோயிலின் அமைப்பு,அமைவிடம் ஆகியவற்றைப் பார்க்கும் போதே, அவரைக் குலதெய்வமாகக் கொண்டிருப்பவர்களின் பொருளாதாரச் சூழலை அறிந்துகொள்ள முடியும்.

சங்க இலக்கியங்களில் அய்யனார்:

  • தமிழகத்தில் சங்கக் காலந்தொட்டே அய்யனார் வழிபாடு இருந்துவந்துள்ள தைச் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. சங்கக் காலத்தில் அய்யனார் ‘சாத்தன்’ என்று அழைக்கப்பட்டதாகவும், சீத்தலைச் சாத்தனார் எனும் புலவரது குலதெய் வம் அய்யனார் (சாத்தன்) என்பதால் ‘சீத்தலை’ எனும் தனது பெயரைச் ‘சீத்தலைச் சாத்தனார்’ என மாற்றி யதாகவும் கருதப்படுகிறது. சாத்தன் கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்ததாகச் சிலப்பதி காரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அய்யனாரின் குதிரைகள்:

  • அய்யனார் காவல் தெய்வமாக விளங்குவதால் விரைந்து செல்லவும் கரடு முரடான, முள்கள் நிறைந்த மேடு பள்ளமான பாதையில் செல்ல குதிரையே உகந்தது என்பதாலும் அவரின் வாகனம் ‘குதிரை’ என்றானது. அய்யனாரின் வாகனமான குதிரைகள் சம்ஹார கோலத்தைக் காட்டுபவையாகும்.
  • யாகங்களின் சின்னமாகக் கருதப் படும் குதிரைகள் தீய சக்திகளை விரட்டுவதாகவும், பகைவர்களைக் குழம்பச் செய்வதாகவும் மக்களிடையே நம்பிக்கை உண்டு. அதனால் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக் கடனாக அய்யனார் கோயில் முன்பு குதிரை சிலைகளை அமைக்கின்றனர்.

புரவி எடுப்பு விழா:

  • அய்யனார் மீது நம்பிக்கை கொண்டி ருக்கும் மக்கள் அய்யனார் வாகனமான குதிரையின் மீதும் நம்பிக்கை கொண்ட வர்களாக உள்ளனர். அதனால், வேண்டுதல் நிறைவேறியதும் தங்களின் பொருளாதாரச் சூழலுக்கேற்ப நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதுண்டு. குழந்தை வேண்டியும் நோயிலிருந்து மீளவும் கடினமான சூழலில் இருந்து மீளவும் அவரவர் வசதிக்கேற்ப மொட்டை போடுதல், கிடா வெட்டுதல், பொங்கலிட்டுப் படைத்தல் போன்ற வற்றைச் செய்கின்றனர்.
  • வசதி படைத்தவர்கள் தங்களின் நேர்த்திக் கடனுக்காகக் கோயிலின் முன்பாக உருவச் சிலைகள் செய்து வைப்பர். பெரும்பாலும் குதிரை சிலைகளையே அமைக்கின்றனர். அய்யனார் கோயிலுடன் இதர தெய்வங்களுக்கான கோயில்களும் அமைந்திருக்கும் பட்சத்தில் யானை சிலை அமைப்பதுண்டு. அனைத்துக் கோயில்கள் முன்பாகவும் யானை, குதிரை சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அய்யனார் கோயில் கள் முன்பாகக் கட்டாயம் குதிரை சிலைகள் இடம்பெற்றிருக்கும்.
  • தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஆண்டுதோறும் சிறிய வடிவிலான குதிரை சிலைகளைச் செய்து, அவற்றை ஊர்வலமாகக் கொண்டு வந்து கோயிலின் முன்பு வைத்து வழிபடுவர். இந்த நிகழ்வுக்குப் ‘புரவி எடுப்பு விழா’ என்று பெயர்.

சுடுமண் சிற்பங்கள்:

  • முன்பெல்லாம் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள்தான் இடம்பெற்றிருந்தன. கடவுளர் உருவங் களையும் கடவுளர் வாகனங்களின் உருவங்களையும் சுடுமண்ணால் செய்யும் கலை தமிழர்களிடையே நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது. அன்றைய காலக்கட்டத்தில் சுடுமண் ணால் செய்யப்பட்ட குதிரை, யானை சிலைகளே அய்யனார் கோயில் முன்பாக அமைக்கப்பட்டன. காலப்போக்கில் சுடுமண் சிற்பக்கலை இல்லாமல் போய் விட்டது.
  • சுடுமண் சிற்பங்களை உற்று நோக்கினால் நம் முன்னோர்களின் கைவண்ணம் வியப்பை அளிக்கும். கோயில் மட்டுமன்றி கிராமங்களுக்கே அழகு சேர்த்துக்கொண்டிருந்த சுடுமண் சிற்பங்கள் இப்போது பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து போய்விட்டன. இன்று சிமென்ட்டால் வடிவமைக்கப்படும் குதிரை உருவங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டாலும் சுடுமண் சிற்பங்களுக்கு ஈடுகொடுக்க இயலவில்லை. முன்னோர்களின் கலைத்திறனை எடுத்துக்காட்டும் எஞ்சி யிருக்கும் சுடுமண் சிற்பங்களையாவது பாதுகாக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories