TNPSC Thervupettagam

புறங்கூறுதலைப் புறந்தள்ளுவோம்

September 19 , 2024 119 days 209 0

புறங்கூறுதலைப் புறந்தள்ளுவோம்

  • ஒருவர் இல்லாத இடத்தில், அவரைப் பற்றி குற்றம், குறைகளை உண்மைக்குப் புறம்பாகவோ, கற்பனையாகவோ, அவதூறாகவோ, எதிர்மறையாகவோ மற்றவரிடம் பேசுவது புறங்கூறுதலாகும். புறங்கூறுதல் சிலருக்குப் பழக்கமாகிவிட்டது.
  • இவ்வடாத செயலை "கோள்' என்றும், "குறளை' என்றும் சான்றோர் வகைப்படுத்தியுள்ளனர். ஒருவரது நன்மையல்லாத குணங்களைப் பற்றி, அவர் இல்லாதபோது அடுத்தவரிடம் சொல்வது "கோள்'. கற்பனையாக, இல்லாததையும், பொல்லாததையும் பிறரிடம் இட்டுக்கட்டிக் கூறுவது "குறளை'.
  • இப்போதெல்லாம், சில இடங்களில் இரு நபர்கள் பேசிக் கொண்டிருந்தால் அது மூன்றாவது நபரைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். அல்லது, மூவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் அவ்விடத்தைவிட்டு அகலுகையில், அவர் குறித்து இகழ்ந்து பேசுவதைக் காண்கிறோம். அறம் சொல்லுவார் போல நடித்துப் புறம்சொல்லுதல் தீயப் பழக்கங்களுள் தலையாயதாகும்.
  • அலுவலகத்தில் சிலர், தான் செய்த தவறுகளை மறைக்க மேலதிகாரிகளிடம் தான் கொண்டுள்ள விசுவாசத்தைக் காட்டும் உத்தியாகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் செயலாகவும், பிறரைவிடத் தாங்கள் சிறந்தவர்கள் எனக் காட்டிக் கொள்ளும் சாதனமாகவும் முந்திக் கொண்டு புறங்கூறுதலைக் கையாளுகின்றனர்.
  • தம்மிடையே இல்லாத ஒருவரைப் பற்றி மற்றொருவர் குற்றம் குறைகளைக் கூறுதல் வெறுப்பை வளர்க்கும்; பகைமையை மூட்டும்; பிரிவை உண்டாக்கும். "மற்றொருவரைப் பற்றி உன்னிடம் ஒருவர் வாய் திறந்தால், நீ உன் காதைப் பொத்திக்கொள், கேட்காதே' என்றார் பிரான்சிஸ் குவாரல்ஸ் எனும் ஆங்கிலக் கவி.
  • மனிதனின் ஐம்புலன்களில் வாய் மூலம் இழைக்கிற பாவப் பட்டியலில் புறங்கூறுதலையும் சேர்த்திருக்கிறது புத்த மதம். தெய்வப் புலவர் திருவள்ளுவர், "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை/ புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்' என்கிறார். மேலும், அவர் புறங்கூறாமை பற்றி தனி அதிகாரமே யாத்துள்ளார்.
  • ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புறங்கூறுதல் முக்கிய இடம் வகிக்கிறது. கைகேயியிடம் கூனி மூட்டிய புறங்கூறுதல் எனும் தீ, ராமாயணத்தில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது. சகுனி, கெளரவர்களிடம் புறங்கூறி பற்ற வைத்த தீவினையே மகாபாரதப் போருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
  • ஆண்டாள் தனது திருப்பாவையில் பாவை நோன்பு பற்றிக் குறிப்பிடுகையில், "தீக்குறளைச் சென்றோதோம்' என்கிறார். இங்கே, "தீக்குறளை' என்பது சில மனிதர்களிடம் காணப்படும் தீயசெயலான புறங்கூறுதலையே குறிக்கிறது.
  • "பொய், குறளை, வன்சொல், பயனிலவென்று இந்நான்கும் எய்தாமை, சொல்லின் வழுக்காத்து மெய்யிற்புலமைந்தும் காத்து மனமாசு அகற்றும் நலமன்றே நல்லாறெனல்' என்கிறது நீதிநெறி விளக்கம். காழ்ப்புணர்ச்சியுடன் புறங்கூறுதலால் பிணக்கும், பகையும் வளர்ந்து, கணவன், மனைவியிடையே மணமுறிவும், உறவுகளிடையே பிரிவும், நண்பர்களிடையே நட்பும் உடைந்து இறுதியில் ஒருவர் தனித்து விடப்படுகிறார்.
  • ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசி, காணாத இடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. நாம் ஒருவரைப் பற்றி புறம்பேசி மகிழ்ச்சியடைந்தால், நம்மையும் அதுபோல வேறு சிலர் பேசி அகமகிழ்வர் என்பதை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய குணங்களையும், குறைபாடுகளையும் பற்றி வாதம் புரிவதிலேயே காலத்தைச் செலவு செய்பவர்கள் தன்னுடைய பொழுதை வீணாகக் கழிப்பதோடு மட்டுமல்லாமல், எதிராளியின் நேரத்தையும் வீணடித்து, அவரது மனதையும் மழுங்கடிக்கச் செய்கிறார்கள். புறங்கூறுதலும், பொய்யும் எப்போதும் ஒன்றாகப் பயணம் செய்யும்.
  • புறங்கூறுதலில் ஈடுபடுபவர்கள், தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள முடியாததாலும், பொறாமை காரணமாகவும், பிறர் தனக்குச் செய்த நற்செயல்களுக்கு நன்றி பாராட்டாமல் அவரையே பலிகடாவாக்கி மகிழ்ச்சி காண்பார்கள். பின்னர், அவர் வைத்த பொறியில் அவரே சிக்கி வெளிவர முடியாமல் மானக்கேடு அடைந்து அல்லலுறுவார்கள் என்கின்றனர் மன உளவியலாளர்கள்.
  • ஒருவர் இல்லாத இடத்தில், அவர் குறித்து நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூறவேண்டும். அவர் உள்ளபோது, அவர் முன்பாகவே அவருடைய குற்றங்குறைகளை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முயலலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களை அவரிடம் நேரில் கூறி பாராட்ட வேண்டும். பிறரைப் பற்றி புறம் பேசுபவர்கள், இல்லாத ஒன்றைப் பொய்யாக, தனது பொழுதுபோக்குக்காக கூறுவார்கள். பிறர் மனம் புண்பட்டு, வருந்தி, நிம்மதி இழக்க வேண்டும் என்பதற்காகவே சொல்வார்கள். அதை நம்பி நேர்மையான ஒருவரை வெறுத்து ஒதுக்கினால், அதன் இழப்பை எதிர்கொள்வது நாமாகத்தான் இருப்போம். கடைசியில் நாம் மன்னிப்பு கேட்கக்கூட முடியாமல் தலைகுனிந்து நிற்போம்.
  • அறிவார்ந்தவர்கள் இத்தகைய புறங்கூறுபவர்களை மதிக்காமல் தம் கடமையை செவ்வனேயாற்றுவார்கள். நெருப்பு விறகைச் சாம்பலாக்கிவிடுவதைப் போல், புறங்கூறல் ஒருவரது நற்செயல்களைச் சாம்பலாக்கிவிடும். ஏனெனில், ஒருவரைப் பற்றிய சில தவறான புரிதல்கள், இந்த ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
  • புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் நலனும், குணமும், அருமையும், சிறப்பும் தெரியாது. பிறரின் குற்றங்குறைகளையே கூறி, பழியைத் தூற்றி இருவருக்கிடையே பகைமையை வளர்க்க முயல்வர். சமூகத்தில் பிரிவினைகளை ஏற்படுத்துவர். இத்தகையவர்களிடம் நாம் விலகியே இருத்தல் நலம். பிறரின் குற்றங்களையும், அவர் சொல்லாததைச் சொல்லியும், இழித்துப் பேசி, ஒருவரை அவமானப்படுத்தினால் காலப்போக்கில் அந்தக் குற்றங்களும், குறைகளும் நம்மையே வந்து சேரும். ஒருவர் செய்த செயல்களை மறைத்து புறங்கூறுதல் என்றும் தீமையே தரும்.

நன்றி: தினமணி (19 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories