TNPSC Thervupettagam

புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துவிட்டதா?

March 11 , 2025 5 hrs 0 min 29 0

புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துவிட்டதா?

  • புற்றுநோய்க்குப் புதிய தடுப்பூசியைக் கண்டு பிடித்துவிட்டதாக 2024 டிசம்பரில் ரஷ்ய அரசு வெளியிட்ட அறிவிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. 2025இல் அந்தத் தடுப்பூசி இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (Radiology Medical Research Center) பொது இயக்குநர் ஆண்ட்ரே கேப்ரின் ரஷ்ய வானொலி வாயிலாக இந்தத் தடுப்பூசி குறித்து மக்களிடம் பேசியது மேலும் பரபரப்பைக் கிளப்பியது.
  • அடுத்​ததாக, “எம்.ஆர்​.என்.ஏ. (mRNA) வகையைச் சேர்ந்த இந்தப் புதிய புற்று​நோய்த் தடுப்பூசி மனித சோதனைக்கு முந்தைய பரீட்​சார்த்த சோதனை​களில் (Pre-clinical trials) புற்று​நோய்க் கட்டிகளை வளர விடாமல் தடுத்தது. உடலின் பிற இடங்களில் புற்றுநோய் பரவுவதையும் இது நிறுத்​தியது” என்று கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் (Gamaleya National Research Center) இயக்குநர் அலெக்​ஸாண்டர் ஜின்ஸ்​பர்க் ஊடகங்​களுக்குத் தெரிவித்​தார். மருத்​துவத் துறையில் இந்தக் கண்டு​பிடிப்புச் செய்தி ஒரு விவாதப் பொருள் ஆகியுள்ளது.

எம்.ஆர்​.என்.ஏ. தடுப்பூசி என்பது எது?

  • புற்றுநோய்க்காகத் தயாரிக்கப்படும் எம்.ஆர்​.என்.ஏ. (mRNA Vaccine) தடுப்பூசி என்பது உடல் செல்களில் புற்று​நோய்க்கு உண்டான ஆன்டிஜன் (Antigen) என்னும் நோயூக்​கி​களைத் தயாரிப்​ப​தற்கான மரபுச் செய்தி​களைத் தடுப்​பாற்றல் மண்டலத்​துக்கு வழங்கக்​கூடியது.
  • இப்படி உடல் செல்களில் புதிய ஆன்டிஜன் உருவானதும், அதை எதிரியாக நினைத்து எதிர்த்துப் போராடும் வகையில் எதிரணுக்​களைத் (Antibodies) தடுப்​பாற்றல் மண்டலம் உற்பத்தி செய்யும். இந்த நிகழ்வைத் தடுப்​பாற்றல் மண்டலத்தில் இருக்கிற நினைவு செல்கள் (Memory cells) தங்களிடம் பதிவு செய்து​கொள்​ளும்.
  • உடலில் எங்காவது புற்றுநோய் வளர்வதாக இருந்​தால், அந்தப் புற்றுநோய் செல்களின் ஆன்டிஜன்களை அடையாளம் கண்டு, அவற்றை எதிர்த்துப் போராடி அழிக்கத் தேவையான எதிரணுக்​களைத் தடுப்​பாற்றல் மண்டலம் தயாரித்து வழங்கும். இதன் பலனாக, உடலில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்​கப்​படும். இந்த நிகழ்வை இப்படிப் புரிந்து​கொள்​ளலாம்: காவல் நிலையத்தில் சந்தேகப்​படும் குற்ற​வாளி​களின் ஒளிப்​படங்களை வைத்திருப்​பார்கள். ஒரு குற்றவாளி கைது செய்யப்படும்போது, அந்தப் புகைப்​படங்களை ஒப்பீடு செய்து, குற்ற​வாளியை உறுதிப்​படுத்து​வார்கள்.
  • குற்ற​வாளியின் ஒளிப்படம் காவல் நிலையத்தில் இருப்​பதைப் போல, புற்று​நோய்த் தடுப்பூசி வழங்கிய ஆன்டிஜன் – எதிரணு தயாரிப்புத் தகவல் நம் நினைவு செல்களில் இருக்​கிறது. புற்றுநோய் என்னும் குற்றவாளி உடல் உறுப்​புக்குள் நுழையும்​போது, ‘புற்றுநோய் ஆன்டிஜன்’ என்னும் ஒளிப்​படத்தைத் தடுப்​பாற்றல் மண்டலம் ஒப்பிட்டுப் பார்த்து, அதைப் புற்றுநோய் என அடையாளம் கண்டு, எதிரணுக்களை அனுப்பி, புற்று​நோயைக் ‘கைது’ செய்து​விடு​கிறது.

முக்கி​யத்துவம் என்ன?

  • பொதுவாகவே, புற்றுநோய் செல்கள் மனிதத் தடுப்​பாற்றல் மண்டலத்தின் பார்வையி​லிருந்து தப்பிக்​க​வும், அதன் அழிவுப் பாதையி​லிருந்து விலகிச் செல்லவும் பல வழிகளைத் தெரிந்து​வைத்​திருக்​கின்றன. இப்படியான தப்பிக்கும் வழிகளையும் இப்போது நவீன மருத்​துவம் தெரிந்து​கொண்டது. அதற்கேற்ப நம் தடுப்​பாற்றல் மண்டலத்தைத் தூண்டி, ஏற்கெனவே உடலுக்குள் பரவியிருக்கும் புற்றுநோய் செல்களைத் தப்பிக்க​வி​டாமல் செய்கிறது, ‘இம்யூனொதெரபி’ (Immunotherapy) என்னும் தடுப்பு மருத்துவ முறை.
  • இது புற்றுநோய்க்கு வழக்கமாகத் தரப்படும் மருந்துச் சிகிச்சையிலிருந்து (Chemotherapy) மாறுபட்டது. உதாரணமாக, மருந்துச் சிகிச்சையில் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதோடு, அருகில் உள்ள ஆரோக்கிய செல்களும் அழிக்கப்படலாம். ஆனால், இம்யுனொதெரபி சிகிச்சையில் ஆரோக்கிய செல்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சிகிச்சையில் பக்க விளைவுகளும் மிகக் குறைவு. இப்படியான தடுப்பு முறை மருத்துவத்துக்குக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், எம்.ஆர்.என்.ஏ. வகைத் தடுப்பூசி.

என்ன பிரச்சினை?

  • வழக்கத்​தில், ஆரோக்​கியமாக உள்ளவர்​களுக்குப் பின்னாளில் நோய் வராமல் தடுப்​ப​தற்கு வழங்கப்​படும் மருந்துக்​குத்தான் ‘தடுப்​பூசி’ (Vaccine) என்று பெயர். கருப்பை வாய்ப் புற்று​நோய்த் தடுப்​பூசியும் (HPV), கல்லீரல் புற்று​நோயைத் தடுக்கும் தடுப்​பூசியும் (HBV) இந்த வகையைச் சேர்ந்தவை. ஆனால், எம்.ஆர்​.என்.ஏ. வகைத் தடுப்​பூசி​யானது உடலுக்குள் ஏற்கெனவே குடியிருக்கும் புற்றுநோயை மேன்மேலும் வளரவி​டாமல் தடுக்கும் தடுப்பு மருந்து வகையில் ஒன்று. இதைத் ‘தடுப்​பூசி’ என்று அழைப்பதே ஒரு பிழை.
  • அடுத்து, இதை எல்லா புற்று​நோய்​களுக்கும் பயன்படுத்த முடியாது. எந்த வகைப் புற்றுநோய் செல்களுக்கான ஆன்டிஜன்​களைத் தயாரிக்கத் தடுப்​பூசியில் மரபுத் தகவல் அனுப்​பப்​படு​கிறதோ அந்த வகைப் புற்றுநோய் மட்டும்தான் கட்டுப்​படும். மற்றவை கட்டுப்​ப​டாது. இன்னொன்று, இதை எல்லாப் புற்று​நோ​யாளி​களுக்கும் வழங்க முடியாது. பயனாளியின் புற்றுநோய் வகை, தாக்குதல் அளவு, பரவல் நிலை போன்ற பல காரணிகளை அடிப்​படையாக வைத்துத்தான் அவருக்கு எம்.ஆர்​.என்.ஏ. வகைத் தடுப்​பூசி​யானது பலன் தருமா, இல்லையா என்பது கணிக்​கப்​படும்.
  • அடுத்த பிரச்சினை என்னவென்​றால், தடுப்பூசி என்பதே குறிப்​பிட்ட ஒரு கிருமியைத் தாக்கி அழிக்கும் ஆற்றலைத் தரும் தடுப்பு மருந்து. உதாரணமாக, கரோனா தடுப்பூசி என்றால், அது கரோனா கிருமிக்கு எதிராக வேலை செய்யும். போலியோ தடுப்பூசி என்றால் அது போலியோ கிருமிகளை அழித்து போலியோ வருவதைத் தடுக்​கும். ஆனால், புற்றுநோய் என்பது ஒற்றைக் கிருமியால் ஏற்படுவது அல்ல. புற்றுநோய் ஏற்படப் பல வகைக் காரணிகள் உண்டு.
  • இன்னும் சொன்னால், புற்று​நோய்க்குக் கிருமிதான் காரணமாக இருக்க வேண்டும் என்பதில்லை. புகையிலைப் பயன்பாடு, மதுப் பழக்கம், காற்று மாசு எனக் கிருமிகள் இல்லாத பல காரணிகள் இருக்​கின்றன. ஒவ்வொரு காரணிக்கும் ஒவ்வொரு தடுப்பூசி கண்டு​பிடிக்​கப்பட வேண்டும். அந்தக் காரணியைப் பொறுத்து, குறிப்​பிட்ட தடுப்​பூசிக்குப் பெயர் சூட்டப்​படும். உதாரணமாக, sipuleucel-T என அழைக்​கப்​படும் புராஸ்டேட் புற்று​நோய்க்கான தடுப்பு மருந்தைச் சொல்லலாம். இது புராஸ்டேட் புற்று​நோய்க்​குரிய ஆன்டிஜனை நம் தடுப்​பாற்றல் மண்டலத்​துக்கு இனம் காட்டி, புற்றுநோயை வளரவி​டாமல் தடுக்​கிறது.

தவறான புரிதலுக்கு வழி வகுக்கும்:

  • உண்மை நிலவரம் இப்படி இருக்​கும்​போது, ரஷ்ய சுகாதாரத் துறை எந்த வகைப் புற்று​நோய்க்குத் தடுப்பூசி கண்டு​பிடித்​திருக்​கிறது என்று குறிப்​பிட்டுச் சொல்லாமல், பொதுவாகப் புற்று​நோய்க்கு எம்.ஆர்​.என்.ஏ. வகைத் தடுப்​பூசியைக் கண்டு​பிடித்து​விட்டதாக அறிவித்​திருப்பது மக்களைக் குழப்புவதாக உள்ளது என்கின்​றனர், உலகளாவிய புற்று​நோய்ச் சிறப்பு நிபுணர்கள்.
  • மேலும், ஆரோக்​கியமாக உள்ளவர்​களும் பின்னாளில் புற்றுநோய் வருவதைத் தடுப்​ப​தற்கு ரஷ்யா கண்டு​பிடித்த புற்று​நோய்த் தடுப்​பூசியைப் பயன்படுத்​திக்​கொள்​ளலாம் என்று தவறாகவும் இந்தக் கண்டு​பிடிப்பைப் புரிந்து​கொள்​வதற்குச் சாத்தியம் இருக்​கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்​காட்​டி​யுள்​ளனர்.
  • அடுத்து, ரஷ்யாவின் புற்று​நோய்த் தடுப்​பூசி​யானது செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்​பத்தில் தயாரிக்​கப்​பட்டதாக அறிவிக்​கப்​பட்​டுள்ளது. ஆனால், அந்தச் செயல்​முறையை ரஷ்யா தெரிவிக்க​வில்லை. எந்த வகைப் புற்று​நோய்க்கு, புற்று​நோயின் எந்த நிலையில் (Cancer stage) அது பயனாளிக்குப் பயன்படுத்​தப்பட வேண்டும் என்கிற தகவலும் இல்லை. இந்தத் தடுப்பூசி இன்னமும் மனித ஆராய்ச்சிக்கு முந்தைய நிலையில்தான் உள்ளது என்பதை மட்டும் அந்த நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்​திருக்​கிறது.
  • இந்தச் சூழலில், இந்தத் தடுப்பூசி மனிதப் பயன்பாட்டுக்கு வர வேண்டு​மா​னால், இன்னும் நான்குவித ஆராய்ச்சி நிலைகளைக் கடந்து வர வேண்டும். இதன் ஆராய்ச்சி தொடர்பான அனைத்துத் தரவுகளையும் மருத்துவ உலகுக்கு ரஷ்யா வெளிப்​படை​யாகத் தெரிவிக்க வேண்டும். அப்போது​தான், இந்தப் புதிய தடுப்​பூசியைச் செலுத்​திக்​கொண்​ட​வர்​களுக்கு நோய்ப் பாதுகாப்பு கிடைத்​திருக்​கிறதா, தடுப்பூசி போதிய திறனைப் (Efficacy) பெற்றிருக்​கிறதா, இது பக்க விளைவு​களைத் தரு​கிறதா, இல்​லையா என்பது ​போன்ற ​விவரங்களை அறிய ​முடி​யும். ஒரு பு​திய தடுப்​பூசி கண்​டு​பிடிப்​பில் இவ்​வளவு நெறி​முறை​கள் இருக்​கும்​போது, ரஷ்யா அவசரப்​பட்டு இப்படி ஓர் அறி​விப்பை வெளி​யிட்டது மருத்​துவத் துறையை ​வியப்​பில்​ ஆழ்த்​தி​யுள்​ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories