TNPSC Thervupettagam

புலம்பெயர் தொழிலாளரின் மரணம் எழுப்பும் கேள்விகள்

October 8 , 2024 5 hrs 0 min 14 0
  • வேலை தேடிச் சென்னைக்கு வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான தேவையும் அதிகரித்துவரும் நிலையில், இப்படியான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த மரணம் உணர்த்தியிருக்கிறது.
  • மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகோனாவைச் சேர்ந்த சமர் கான் (35 வயது) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் நம்பி வந்த முகவர் அவர்களைக் கைவிட்டுவிட்டதால், வேறு வழியின்றி சென்னை மத்திய ரயில் நிலையத்திலேயே தங்கி, அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப தொழிலாளர்கள் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
  • கையில் பணம் இல்லாததால் சரியான உணவின்றி அவர்கள் தவித்திருக்கிறார்கள். தாங்களே உணவு சமைத்து உண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில், உடல்நிலை நலிந்து தொழிலாளர்கள் மயங்கிவிழவே அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சமர் கான், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 30இல் மரணமடைந்தார்.
  • அதேவேளையில், மேற்கு வங்கத் தொழிலாளர்கள் தரமற்ற உணவை உண்டதால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவமனைத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும், உணவுக்காக அந்தத் தொழிலாளர்களிடம் போதிய பணம் இருக்கவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. முகவர்களை நம்பி வேலை தேடிவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று இது.
  • தமிழ்நாட்டில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் தினக்கூலியை நம்பி பிஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். போதிய உதவிகளின்றி தவிப்பவர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் எண்ணற்ற மனிதர்களும், ஏராளமான தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றனர். கூடவே மலிவு விலையில் தரமான உணவை வழங்கும் ‘அம்மா’ உணவகம் போன்ற ஏற்பாடுகளும் இங்கு உண்டு. இதையெல்லாம் தாண்டி, சரியான உணவின்றி தொழிலாளர்கள் துயரத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
  • மாநிலங்கள் தாண்டி இடம்பெயர்ந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கென ஏற்கெனவே சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம், 1979 அவற்றில் முதன்மையானது. எனினும், சாமானியத் தொழிலாளர்கள் எளிதில் அணுகும் வகையிலான சட்ட உதவிகள் இன்னும் பெரிய அளவில் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம்.
  • தொழிலாளர்களை வரவழைக்கும் முகவர்களைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் தொடர்பான உறுதியான கொள்கை முடிவுகள் எடுக்கப்படாதது இப்படியான அவலங்களுக்கு வழிவகுப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
  • இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகளையும் பிற பணிவாய்ப்புகளையும் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை நோக்கிப் புலம்பெயர் தொழிலாளர்கள் படையெடுப்பதில் ஆச்சரியம் இல்லை. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகமாகக் கட்டப்பட்டு - பிற்காலத்தில் மருத்துவமனையாக மாற்றப்பட்ட – கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி பாராட்டு விழாவே நடத்திய வரலாறு நம்மிடம் இருக்கிறது. இத்தகைய பின்னணி கொண்ட தமிழ்நாட்டில், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனைப் பேண இன்னும் உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories