- இந்தியாவின் தேசிய விலங்கான புலி குறித்து, கடந்த சில நாள்களாகச் சமூக ஊடகங்களில் பரவலான உரையாடல்களைப் பார்க்க முடிகிறது. முதுமலை, பந்திப்பூர் புலிக் காப்பகங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தது, 1973இல் தொடங்கப்பட்ட ‘புலி பாதுகாப்பு செயல்திட்ட’த்தின் (Project Tiger) 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக மைசூரில் பிரதமர் தொடங்கிவைத்த ‘பெரும் பூனைகளுக்கான பன்னாட்டுக் கூட்டமைப்பு’ (International Big Cat Alliance) தொடர்பான நிகழ்ச்சி, அந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை போன்றவற்றை இதற்கான காரணங்களாகக் கூறலாம்.
- தற்போது இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167 என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இது காட்டுயிர் ஆர்வலர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது.
- குறிப்பாக, 2006இல் 1,411ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022இல் 3,167ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 2006ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2.25 மடங்கு அதிகம். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்றாற்போல் புலிக் காப்பகங்களும் அதிகரித்துள்ளன. ஆம்! 1973இல் புலிக் காப்பகங்களின் எண்ணிக்கை 9; 2023இல் அது 54ஆக அதிகரித்துள்ளது. புலிகள் பாதுகாப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அரசு, அரசு-சாரா அமைப்புகள், அதிகாரிகள், களப்பணியாளர்கள், மக்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்தான். எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே!
விமர்சனமும் எதிர்வினையும்:
- அதேநேரத்தில், புலிகளின் எண்ணிக்கையை நாம் கணக்கிடும் முறையில் அடிப்படைக் குறைபாடுகள் இருப்பதாகக் காட்டுயிர் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதுதொடர்பாக, ‘அல் ஜசீரா’ செய்தி ஊடகத்தில் வெளியான கட்டுரை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சரையும், பல இந்திய வனப் பணி அதிகாரிகளையும் டிவிட்டரில் எதிர்வினையாற்ற நிர்ப்பந்தித்துள்ளது.
- அந்தக் கட்டுரை இந்தியாவின் காட்டுயிர் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் என்கிறார் மத்திய அமைச்சர். வனப் பணி அதிகாரிகளோ, ஒரு வெற்றியடைந்த காட்டுயிர் பாதுகாப்புத் திட்டத்தின் நன்மைகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, சில தேர்ந்தெடுத்த எதிர்மறை நிகழ்வுகளை மட்டும் இக்கட்டுரை குறிப்பிடுவதாகவும், மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலப் பகுதியில் கலாச்சார மற்றும் தத்துவார்த்த அடிப்படையில் மக்களின் பங்களிப்போடு வெற்றியடைந்த இத்திட்டத்தைப் பற்றிய கள நிலவரம் தெரியாமல் குறைகூறுவதாகவும், திட்டத்தின் வெற்றிக்குப் பழங்குடி மக்களின் பங்களிப்பு பற்றிய புரிதல் இல்லாமல் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
- பழங்குடி மக்களின் பங்கெடுப்போடுதான் புலிகள் பாதுகாப்புத் திட்டம் வெற்றியடைந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். பழங்குடி மக்கள் சிலருக்கு வனத் துறையில் பணி வழங்கப்பட்டிருப்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. உண்மையில், எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றித் தற்காலிகத் தொகுப்பு ஊதியத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்களாகவே பழங்குடிகள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
- இந்தச் சூழலில், அமைச்சர், அதிகாரிகளின் ஒரே மாதிரியான எதிர்வினை, புலிக் காப்பகத்தில் களப்பணி செய்த என்னைப் போன்றோருக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.
பழங்குடிகள் மீதான அழுத்தம்:
- புலிக் காப்பகங்கள் வெளிப்பகுதி (Buffer Area), மையப் பகுதி (Core Area) என வகைப்படுத்தப் பட்டுள்ளன. இதில் மையப் பகுதியில் வசிக்கும் மக்கள் தாமாக முன்வந்து வனத் துறையின் உதவியின்றியோ அவர்களின் உதவியுடனோ புலிக் காப்பகத்தைவிட்டு இடம்பெயர்தல் என்கிற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வனத் துறையின் உதவியின்றி வெளியேறும் ஒரு குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுவந்தது; தற்போது அது ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
- வனத் துறையின் உதவியுடன் வெளியேறுபவர்களுக்கு மாற்று இடத்தில் அதே தொகையில் அவர்களுக்கான விவசாய நிலத்துக்கு 35%, நில உரிமைக்கு 30%, இருப்பிடம் கட்ட 20%, சாலை, குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ய 10%, ஊக்கத்தொகையாக 5% என்று முற்றிலும் வனத் துறையால் நிறைவேற்றித் தரப்படும்.
- ‘தாமாக முன்வந்து இடம்பெயர்தல்’ என்னும் இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும், கணிசமான எண்ணிக்கையிலான இடம்பெயர்வு பல புற அழுத்தங்களால் நடைபெறுவதை முற்றிலும் மறுக்க இயலாது. உதாரணத்துக்கு, வனச் சோதனைச்சாவடிகள் அமைத்து மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அனுமதி மறுத்தல், விவசாயம் செய்யவும், இடுபொருள்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்லவும் மறைமுக இடர்ப்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றைக் கூறலாம்.
- அது போல இடம்பெயர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புலிக் காப்பகங்கள் சிலவற்றில் பழங்குடி மக்களுக்குச் சேர வேண்டிய நிவாரணத் தொகைகளை வன அதிகாரிகளே கையாடல் செய்த நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. அப்படித் தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராகக் குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
- இதுவரை 18,000க்கும் அதிகமான குடும்பங்கள் புலிக் காப்பகத்திலிருந்து இடம்பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் குடியேற்றப்பட்ட அநேக இடங்களில் அரசு உறுதியளித்த அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படாததாலும், அவ்விடங்களில் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதில் சிக்கல் இருப்பதாலும், இடம்பெயர்ந்த பழங்குடி மக்கள் மறுபடியும் தங்களின் பூர்விக நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இத்திட்டத்தால் ஒரே ஒருவர் பாதிக்கப்பட்டாலும்கூட அது சமூகவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், அத்தகு விவாதங்கள் பொதுவெளியில் போதுமான அளவு உருவாகவில்லை.
‘தவிர்க்க இயலாத தீமை’:
- மேற்சொன்ன குறைகளைத் தவிர, பல புலிக் காப்பகங்களில் சுற்றுலா ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. உதாரணத்துக்கு, உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வனத் துறையால் காட்டுக்குள் அனுமதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.
- புலிகள் பாதுகாப்புக்காக எனச் சொல்லிப் பழங்குடிகளை வெளியேறச் செய்துவிட்டு, அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது முரண் இல்லையா? ஒரு வனத் துறை அதிகாரி என்னிடம், “புலிக் காப்பகங்களில் சுற்றுலா என்பது தவிர்க்க இயலாத தீமை” என்று கூறினார். அத்தகைய தீமையை ஏற்கத் துணிந்த நாம், பழங்குடிகளின் உரிமைகளையும் சேர்த்தே மறுக்கத் துணிகிறோம்.
- காட்டுப் பகுதியில் பழங்குடிகளின் இருப்பு புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்றும், பழங்குடிகள் தங்கள் நலனைக் காட்டிலும் காட்டுயிர்களின் நலனையே முன்னிறுத்துவதாகவும் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பழங்குடிகளில் சிலர் காட்டுயிர்களுக்குத் தீங்கு விளைவிக்க முற்படலாம். அதை வனத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாகப் பழங்குடிகளைக் காடு மற்றும் காட்டுயிர்களிடமிருந்து அந்நியப்படுத்துவது அறிவியலுக்குப் புறம்பானது.
- நாம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில், அத்திட்டத்தால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மறுதலிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. ஆகவே, புலிப் பாதுகாப்புத் திட்டத்தால் பாதிக்கப் பட்டவர்களின் அழுகுரல்களுக்கும் சற்று செவி சாய்ப்போம்.
நன்றி: தி இந்து (19 – 04 – 2023)