TNPSC Thervupettagam

புலிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை

January 10 , 2025 6 days 33 0

புலிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை

  • உயிர்க்கோளக் காப்பகமாக இருக்கும் நீலகிரியில் 2024இல் ஆறு புலிகள் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது. இயற்கைக்கு மாறாகப் புலிகள் உயிரிழப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. மேற்கு மலைத் தொடரில் உள்ள நீலகிரியில் 2023இல் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்தன.
  • இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இயற்கையான மரணம், வேட்டையாடப்படுதல், மனித - உயிரின எதிர்கொள்ளல் போன்றவை இதில் அடங்கும். இந்தச் சூழலில் 2024இலும் ஆறு புலிகள் நீலகிரி காட்டுப் பகுதியில் உயிரிழந்திருக்கின்றன.
  • கடந்த நவம்பரில் கூடலூரில் சுருக்குக் கம்பியில் சிக்கி மூன்று வயதுப் புலி ஒன்று உயிரிழந்தது. ஆகஸ்ட்டில் கூடலூர் வனக் கோட்டத்தில் இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன. 2023ஆம் ஆண்டிலும் விஷம் வைக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. கால்நடைகளை வேட்டையாடும் புலிகளைப் பழிவாங்க விஷம் வைத்துக் கொல்லும் போக்கு கண்டிக்கத்தக்கது. உணவுச் சங்கிலியை அறுக்கும் இந்த முயற்சி இயற்கைக்கு முரணானது.
  • உலகிலேயே அதிக எண்ணிக்கையில் புலிகள் வாழ்விடத்தைக் கொண்ட பகுதியாக மேற்கு மலைத் தொடர் உள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் என மூன்று மாநிலங்களின் எல்லைகளிலும் புலிக் காப்பகங்கள் உள்ளன. என்றாலும் தமிழ்நாட்டில் நீலகிரியை உள்ளடக்கிய பகுதிதான் புலிகளின் புகலிடமாக உள்ளது. அடர்காட்டுப் பகுதியான முதுமலை இங்குதான் உள்ளது.
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் இதை ஒட்டியுள்ள பகுதியே. 2018இல் தேசியப் புலி பாதுகாப்பு ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் 264 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்த எண்ணிக்கை 2022இல் 306ஆக அதிகரித்திருந்தது. தமிழ்நாட்டில் 2006இல் 76ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 16 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது.
  • அதேநேரத்தில், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஐந்து புலிகள் உயிரிழந்திருப்பதாகக் கடந்த நவம்பரில் மக்களவையில் மத்திய அரசு அறிவித்தது. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் புலிகள் முன்னணியில் உள்ளன.
  • அதன் அழிவைத் தடுத்து நிறுத்தவே ‘புலி பாதுகாப்புச் செயல்திட்டம்’ 1973இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்தான் புலிக் காப்பகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஐந்து புலிக் காப்பகங்கள் உள்ளன. இதில் உயிர்க்கோளக் காப்பகமாக இருக்கும் நீலகிரியில் புலிகள் இயற்கைக்கு மாறாக உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது.
  • இவ்விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுக்க தேசிய புலிப் பாதுகாப்பு ஆணையம் மாநில அரசோடு இணைந்து செயல்பட வேண்டும். காடுகளில் புலிகள் கொல்லப்படுவதால் ஏற்படும் சமநிலை குலைவு பற்றியும், இயற்கையின் உணவுச் சங்கிலியை அறுப்பதால் ஏற்படும் தீமையைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • மேலும், கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும். அதேநேரத்தில் புலிகளின் பற்கள், நகங்கள், மயிர்ப்போர்வைக்காக வேட்டையாடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதில் வனத் துறையினருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories