TNPSC Thervupettagam

புவிசார் பெருமை

August 3 , 2023 398 days 308 0
  • திருவண்ணாமலை செய்யாறு ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செடிபுட்டா சேலை ஆகிய மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை கிட்டியது மட்டுமன்றி, அந்தப் பொருள்கள் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • மத்திய வர்த்தக, தொழில் துறையின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, புவிசார் குறியீட்டு பொருள்கள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999-இன் படி இந்தப் புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்குகிறது. 2003, செப்டம்பர் முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 2004-ஆம் ஆண்டுமுதல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பட்டியலில் இடம்பெற்ற முதல் பொருள் என்கிற பெருமையை டார்ஜீலிங் தேயிலை பெற்றது.
  • கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், வேளாண் உற்பத்திப் பொருள்கள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் வீணை, கலைத்தட்டு, ஓவியம், திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 55 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது. மேலும், புவிசார் குறியீடு பட்டியலில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகமே முதலிடம் பெற்றிருக்கிறது.
  • குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பொருள்களை மூன்றாம் தரப்பினர் தரமின்றி தயாரித்து அதே ஊர்ப் பெயருடன் விற்பனை செய்வதை இந்தக் குறியீடு அந்தஸ்து தடுக்கிறது. இதன்மூலம் அந்தப் பொருள்களை அசலாக தயாரிப்பவர்களுக்கு இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், பாரம்பரியமான அந்தப் பொருள்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கிடைக்கிறது.
  • தற்போது புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ள செய்யாறு ஜடேரி கிராமத்தின் நாமக்கட்டிக்கு 300 ஆண்டு கால வரலாறு உள்ளது. இந்தக் கிராமத்தில் வசிக்கும் 150 குடும்பங்களில் 90 சதவீத குடும்பத்தினர் விவசாயத்துடன், நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகின்றனர்.
  • நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப்படும் வெள்ளைப் பாறைகள், அருகில் உள்ள தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் கிடைக்கிறது. இந்தப் பாறைகளை சிறு துண்டுகளாக உடைத்து, அவற்றை அரைவை இயந்திரங்களில் மாடுகளைப் பூட்டி ஓட்டி அரைக்கின்றனர். பின்னர், தண்ணீரில் பல மணி நேரம் ஊற வைக்கின்றனர். தேங்கி இருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு அடியில் படிந்துள்ள மிருதுவான வெள்ளை மண்ணை எடுத்து ஈரப்பதத்துடன் மண் உருண்டைகளாக உருட்டி வைக்கின்றனர்.
  • மண் உருண்டைகள் லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அவற்றைத் தட்டி நாமக்கட்டிகளாக வெயிலில் காய வைக்கின்றனர். நாமக்கட்டிகள் காய்ந்த பிறகு அவற்றை வைணவ திருத்தலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். நாட்டு மருந்து தயாரிப்புக்கும் இந்த ஜடேரி நாமக்கட்டிகள் பயன்படுகின்றன.
  • கன்னியாகுமரி மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும் மட்டி வாழைப்பழம். இதில் உள்ள பொட்டாஷியம் இதய நலனையும், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுவது இதன் மருத்துவச் சிறப்புத்தன்மையாகும். சளித்தொல்லை பயமின்றி குழந்தைகளுக்கும் இந்த வாழைப்பழத்தை கொடுக்கலாம்.
  • திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், வெள்ளங்குளி, புதுக்குடி ஆகிய பகுதிகளில் செடிபுட்டா சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு செடியில் பூக்களும், இலைகளும் இருப்பது போல் புட்டா போட்டு நெய்யப்படுவதால் இந்தக் கைத்தறிச் சேலை "செடிபுட்டா' என்ற பெயர் பெற்றது. பட்டு மற்றும் பருத்தி கலவை நூலில் இந்தச் சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது. குஜராத்தில் இருந்து தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியேறிய செளராஷ்டிர சமூகத்தினர்தான் இந்தச் சேலையை முதன்முதலில் உருவாக்கினர்.
  • செடிபுட்டா சேலையை கைத்தறி நெசவில் நெய்வதற்கு ஒன்றரை நாள் ஆகும். அதற்கு கூலியாக ரூ. 400 வரை நெசவாளர்களுக்கு கிடைக்கிறது. இந்தச் சேலைகள் தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கும், தனியார் உற்பத்தியாளர்கள் மூலம் இந்தியாவில் கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
  • பாரம்பரிய பொருள்களுக்கு எப்போதும் மதிப்பு இருக்கிறது. ஆனால், அந்தப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்தான் எப்போதுமே கேள்விக்குறியாகத் திகழ்கிறது. கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் செடிபுட்டா சேலை ரகத்துக்கு தமிழக அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல, இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள அனைத்துப் பொருள்களின் உற்பத்தியை மேம்படுத்த அத்தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதிய ஆதரவை அளிக்க வேண்டும்.
  • தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியை மாவட்டந்தோறும் நடத்துவதைப் போல, புவிசார் குறியீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பொருள்களின் விற்பனைக் கண்காட்சியையும் மாவட்டந்தோறும் நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதன்மூலம் அந்தப் பொருள்கள் சார்ந்த தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பலன் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
  • பாரம்பரியத்துக்கும், நாகரிகத்துக்கும் பெயர் பெற்ற தமிழகத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்க இதுபோன்று மேலும் பல பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (03 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories