பெங்களூரு கற்பிக்கும் பாடம்!
- கடந்த சில மாதங்களாக ஊடகங்களை ஆக்கிரமித்த பெருமழை, கடுங்குளிா் ஆகிய விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருக்கும் வெப்பநிலை குறித்த செய்திகள் உலாவரத் தொடங்கியுள்ளன. இன்னும் சில வாரங்களில் வெப்ப அலை, உஷ்ணக்காற்று, அக்னிநட்சத்திரம் ஆகியவற்றுடன் அதிகரிக்கும் தண்ணீா்ப் பற்றாக்குறை பற்றிய செய்திகளும் முன்னுரிமை பெறத் தொடங்கும்.
- இந்நிலையில், பெங்களூருவில் தண்ணீா்த் தட்டுப்பாடு குறித்த செய்திகள் ஏற்கெனவே ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கிவிட்டன.
- அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் கலாசாரம் ஆழமாக வேரூன்றிவிட்ட பெங்களூரு நகரம், ஆண்டுதோறும் உயா்ந்துவரும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் திணறி வருகின்றது. எனவே, அந்நகரத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற அளவில் தண்ணீரை வழங்குவதென்பது பெங்களூரு மாநகர நிா்வாகத்திற்கு ஒரு சவாலாகவே விளங்குகின்றது.
- பெங்களூரு நகரின் தண்ணீா்த் தேவையை அங்குள்ள ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றால் ஈடுகட்ட இயலாத நிலையில், காவிரி நதியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை அந்நகரம் பெருமளவில் நம்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, பெங்களூரு பெருநகர தண்ணீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் பொதுமக்களுக்குத் தரமான குடிநீரை வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிா்கொண்டுள்ளது.
- வசதியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் டேங்கா் லாரிகள் மூலம் பெறப்படும் தண்ணீரைப் பணம் கொடுத்துப் பெறுகின்றனா். ‘டேங்கா் மாஃபியா’” என்று அழைக்கப்படும் அளவுக்கு இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்ற தனியாா் தண்ணீா் வியாபாரிகள், ஒவ்வொரு லோடு தண்ணீருக்கும் அதிகமான கட்டணத்தை வசூல் செய்வதுடன், அந்நகரின் நீராதாரத்தைப் பெறுமளவு சுரண்டி வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக, தனியாா் தண்ணீா் டேங்கா்களுக்கான கட்டணத்தை வரைமுறைப்படுத்தியுள்ள கா்நாடக அரசு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்தும் அரசுத்துறை வழங்கும் குடிநீா் இணைப்புகளைப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
- பெங்களூருவைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படுகின்ற இலவசத் தண்ணீரை வசதியுள்ளோா் பலரும் முறைகேடாகப் பெற்று வருவதாகக் கூறியுள்ள கா்நாடகத் துணை முதலமைச்சா், இப்பின்னணியில் ஏழைமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு மிகக்குறைந்த அளவு கட்டணத்தையாவது விதிக்க வேண்டும் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளாா்.
- இது மட்டுமன்றி, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை அளவிடுவதற்கான கருவியைப் பொருத்தி, அத்தண்ணீா் முறையாகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்ற ஆய்வும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற யோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
- கா்நாடக அரசு பெங்களூருவுக்குக் காவிரி நீரைப் பகிா்ந்தளிக்க முனைவதன் காரணமாகத் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் வழங்க இயலாமல் போகின்றது. இதனால், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு கிடைக்கின்ற சமயங்களில் தமிழகம் கா்நாடகம் இடையிலான பிரச்னைகளும் அதிகரிக்கின்றன. அதுவே, இரண்டு மாநில மக்களுக்கிடையிலான பகையுணா்வு தூண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்துவிடுகின்றது.
- கடந்த 2011 -ஆம் ஆண்டில் சுமாா் எண்பத்தாறு லட்சமாக இருந்த பெங்களூரு நகரின் மக்கள்தொகை, இவ்வருடத் தொடக்கத்தில் சுமாா் ஒரு கோடியே நாற்பத்துநான்கு லட்சமாகப் பல்கிப் பெருகியுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் புதியதாகச் சுமாா் நான்கு லட்சம் போ் குடிபுகுகின்றனா். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களுடைய பயன்பாட்டுக்கு வேண்டிய தண்ணீரைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்குதடையின்றித் தொடா்ந்து வழங்குவதென்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
- கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டியும், தரமான கல்வியை வழங்கும் உயா்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்காகவும், ஒவ்வோா் ஆண்டும் பெங்களூருவுக்குப் படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை உயா்ந்துகொண்டே வரும் நிலையில், இந்நகர மக்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அளவு தண்ணீரை வழங்குவதிலும் எதிா்காலத்தில் பல பிரச்னைகள் தோன்றுவதைத் தவிா்க்க இயலாது.
- பெங்களூரு நகரம் தற்போது சந்திக்கும் இந்தப் பிரச்னை இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் அனைத்திற்கும் பொதுவானதேயாகும். சென்னையின் நிலைமையும் பெங்களூருவுக்குச் சற்றும் குறைவில்லாததே. கடந்த 2011- ஆம் ஆண்டில் சுமாா் அறுபத்தேழு லட்சமாக இருந்த சென்னைப் பெருநகர மக்கள் தொகை தற்பொழுது சுமாா் ஒருகோடியே இருபத்துமூன்று லட்சமாக உயா்ந்துள்ளது. சென்னையிலுள்ள நீா்நிலைகளோடு வீராணம் ஏரி, ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீரை எதிா்பாா்க்கும் சென்னை மாநகரம் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையும் எதிா்பாா்க்கிறது.
- பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்டவற்றில் பிரம்மாண்டமாக எழுந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் பலவும் டேங்கா் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரையே எதிா்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
- இந்நிலையில், சென்னை மாநகரின் தண்ணீா்வளத்தைக் கணிசமாகப் பெருக்காமல் புதிய அடுக்குமாடிக் கட்டுமானங்களுக்கு அனுமதி கொடுப்பது நிறுத்தப்படவேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியாா் துறை நிறுவனங்களும் சென்னையைத் தவிா்த்த பிற ஊா்களில் செயல்படுவதை ஊக்கப்படுத்துவதுவதன் மூலம் சென்னை நகரின் மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைக்க முயல வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால், தண்ணீா்த் தட்டுப்பாடு நேரும் காலங்களில் சென்னை நகரம் பரிதவிக்காமல் பாா்த்துக் கொள்ளலாம். இது பெங்களூரு கற்பிக்கும் பாடமாகும்!
நன்றி: தினமணி (25 – 02 – 2025)