TNPSC Thervupettagam

பெஜவாடா வில்சன் பேட்டி

June 2 , 2024 223 days 246 0
  • ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினருடனான சந்திப்பிற்காக ஜப்பான் வந்திருந்தார் பெஜவாடா வில்சன். அவரை அழைக்க விமான நிலையம் சென்றிருந்தோம். பழைய காக்கி நிறத்தில் ஒரு குர்தா அணிந்து, காலில் சாதாரண செருப்புடன், தோளில் ஒரு சிறிய பையுமாக வெளியே வந்தார் பெஜவாடா வில்சன். ஜப்பானிலிருந்த மூன்று நாட்களுமே இதேபோன்ற எளிய உடைதான் அணிந்திருந்தார். பர்ஸ், காசு என எதுவும் கையில் வைத்துக்கொள்வதில்லை. ‘இந்தியாவில் இருக்கும்போது, கூட இருப்பவர்கள் செலவுசெய்வார்கள், எனவே பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை’ என்று சிரிக்கிறார். எந்தச் சமயத்திலும் உரையாடுவதற்குத் தயாராக இருக்கிறார். பேச்சில் சிறிய கிண்டல் கலந்த நகைச்சுவை எப்போதும் இருக்கிறது. ரமோன் மகசேசே விருதுபெற்ற மதிப்பிற்குரிய பெஜவாடா வில்சன் உடனான பேட்டியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.

உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்!

  • கோலார் தங்க வயலில்தான் என்னுடைய பெற்றோர்கள் வேலைப் பார்த்தனர். எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா இருந்தனர். நான்தான் வீட்டில் கடைசி பிள்ளை. ஐந்தாம் வகுப்புவரை எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த தோட்டி ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பள்ளியிலேயே படித்தேன்.
  • அந்த வயதில் என்னுடைய சுற்றத்தினர் அனைவருமே ஒரே மாதிரியான ஏழ்மையான வாழ்க்கை சூழலைத்தான் கொண்டிருந்தனர். எனவே, ஆரம்பத்தில் சமூகப் பிரிவினைகள் குறித்தும், பாகுபாடுகள் குறித்தும் நான் பெரிய புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை.

கோலார் தங்க வயலில் என்ன மாதிரியான வாழ்க்கைச் சூழல் நிலவியது? அங்கு வேலைப் பார்த்தவர்களின் சமூகப் பின்னணி எப்படி இருந்தது?

  • அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க தமிழர்கள்தான் வேலைப் பார்த்தனர். அதிலும் தலித் மக்கள்தான் அதிகம். எனவே, கர்நாடகா அரசியல் குறித்தெல்லாம் யாருக்கும் அங்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘தினத்தந்தி’, ‘மாலை மலர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகள்தான் டீக்கடைகள் எங்கும் கிடைக்கும். தமிழ்நாட்டுச் செய்திகளைத்தான் அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். தமிழ் சினிமாக்கள்தான் தியேட்டரில் வரும். 
  • ஓய்வு நேரங்களில் டீக்கடையில் அமர்ந்துக்கொண்டு பள்ளி மாணவனான என்னைக் கூப்பிட்டு செய்திதாளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அப்படிக் கேட்கும் ஆள்களுக்கு என்ன மாதிரியான செய்திகள் படித்தால் பிடிக்கும் என எடை போட்டு அவற்றை மட்டும் படிப்பேன்.

தங்கச் சுரங்கத்தில் என்ன மாதிரியான வேலைச் சூழல் இருந்தது?

  • மிகக் கடினமான வேலை அது. மண்ணுக்கு அடியில் பத்தாயிரம் அடி ஆழம் வரை கீழே சென்று பார்க்க வேண்டிய வேலை. அவ்வளவு ஆழத்தில், மிக வெக்கையாக இருக்கும். ஆக்ஸிஜன் மேலிருந்துதான் செலுத்தப்படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. இரண்டு மணி நேரம் வேலை, பிறகு ஒரு மணி நேரம் ஒரு மூலையில் உட்கார்ந்து அரட்டை, பிறகு மீண்டும் வேலை என அது தொடரும். ஆண்கள் மட்டுமே அங்கே வேலைப் பார்த்தனர்.
  • வெக்கை கொடுமையானதாக இருக்கும் என்பதால் உள்ளே சென்ற பிறகு ஆடை எதுவும் அணியமாட்டார்கள். இப்படி ஒரு காலக்கட்டத்தில் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் வரை அங்கு பணிபுரிந்தனர். அதில் மூவாயிரம் பேர் வரை துப்புரவுத் தொழிலாளர்கள். சுரங்கத்துக்குள் தோண்டியபடி உள்ளே செல்லும்போது, திடீரென்று பின்பகுதியில் மண் இடிந்து விழுந்துவிட்டால், முன்பக்கம் வேலைசெய்துகொண்டிருந்தவர்களை மறந்துவிட வேண்டியதுதான். மண்ணை முழுவதுமாக எடுத்து வழி ஏற்படுத்த எப்படியும் 10 நாட்கள் ஆகும். அதற்குள் மாட்டிக்கொண்டவர்கள் இறந்திருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் அங்கு உயிரழப்புகள் ஏற்படும்.
  • லிப்ட் போன்ற அமைப்பில்தான் சுரங்கத் தொழிலாளிகள் எல்லாம் உள்ளே செல்ல வேண்டும். வெளியே வரும்போது அனைவரையும் கடுமையான சோதனை செய்துதான் வெளியே அனுப்புவார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள், ‘சுரங்கத்தின் நிர்வாக இயக்குநருக்கும், எங்களுக்கும் மட்டும்தான் தனி லிப்டு’ என்று. ஆம், மலம் அள்ளிய வாளியுடன் அவர்கள் மட்டும் தனியாக லிப்டில் வெளியேற முடியும்?
  • ஒரு டன் மண் வெட்டியெடுத்து அதில் இரண்டு கிராம் தங்கம் எடுக்க முடிந்தால் அது லாபகரமானச் சுரங்கம் என்பார்கள். கோலார் தங்க வயல் லாபகரமானச் சுரங்கமாக பல வருடங்கள் இயங்கியது. ஆனால், அந்தத் தங்கத்தை எடுப்பதற்குத் தொழிலாளர்கள் படும் துன்பங்களை நேரில் கண்டால் தங்கத்தின் மீதான ஆசையே போய்விடும்.  

எந்த வயதில் சமூகப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொண்டீர்கள்?

  • ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்காக, ஆந்திர பகுதியிலுள்ள குப்பம் என்னும் ஊரிலிருந்த சமூகப் பள்ளியில் நான் சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். விடுமுறைக்குக் கோலார் தங்க வயல் வரும்போது, அக்கம்பக்கத்தினர் என்ன வேலை செய்கின்றனர் போன்றவற்றை அறிந்துகொள்ள முயன்றேன்.
  • அனைவருமே கோலார் தங்க வயலில் வேலை பார்ப்பதாக கூறினாலும், என்ன மாதிரியான வேலை என்பதைப் பொதுவாக சொல்ல மாட்டார்கள்.
  • அப்படி ஒருநாள் ஊருக்கு வந்திருந்தபோது, விளையாட்டில் சண்டை வந்து ஒரு நண்பன் என்னை, ‘தோட்டிப் பயலே’ என்று திட்டிவிட்டான். அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் “ஏன் நம்மை தோட்டி என்று திட்டுகிறார்கள்?” என்று கேட்டேன். “அது ஒண்ணுமில்லைப்பா, நம்பவூட்டாண்டே குப்பைத் தொட்டி ஒண்ணு இருக்குலே, அதான் தொட்டினு சொல்றாங்க நீ போய் விளையாடு” என்று சொல்லிவிட்டார்.
  • எல்லாப் பெற்றோர்களும் குழந்தைகளிடம் இந்த விஷயங்களைப் பேசாமல் முடிந்தவரை தள்ளிபோடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். குழந்தைமையை அப்படி எல்லாம் தற்காத்துக்கொள்ள சமூகம் விடுவதில்லையே.

உங்களுடைய பெற்றோர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று எப்போது தெரியவந்தது?

  • என்னுடைய அப்பா மட்டுமல்ல, சகோதரரும் மலம் அள்ளும் தொழிலைத்தான் செய்துகொண்டிருந்தனர். அண்ணன் என்னைவிட இருபது வயது மூத்தவர். எங்களுடைய சொந்த ஊரில் போய் திருமணம்செய்துகொண்டுவந்தார். பெரும்பாலும் அப்படி திருமணம்செய்யும்போது கேஜிஎஃபில் வேலைசெய்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், என்ன வேலை என்று சொல்ல மாட்டார்கள்.
  • அண்ணி திருமணம் ஆகிவந்த பின்பு, அண்ணனின் உடைகளைத் துவைக்கும்போது ஒருவித துர்நாற்றம் வருவதை உணர்ந்தார். ஏன் இப்படி நாற்றம் வருகிறது என்று அவர் கேட்டபோது அண்ணன், ‘குப்பை லாரி ஓட்டுவதால் அப்படி இருக்கலாம்’ என்று கூறிவிட்டார். இது மாதிரியான சூழலில்தான், எனது அப்பா என்ன வேலை செய்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன்.
  • அவரிடம் கேட்டால் அழைத்துச் செல்லமாட்டார் என்பதால் அவருடைய சக தொழிலாளர்களிடம் கேட்டு, அவர்கள் வேலைப் பார்க்கும் இடத்திற்கு நேரில் சென்றேன். அவர்கள் வாளிவாளியாக மலம் அள்ளிக்கொண்டிருந்தனர். எடுப்புக் கக்கூஸில் இருந்து மலம் அள்ளி டேங்கரில் கொட்டிக்கொண்டிருந்தனர். இந்த வேலையைத்தான் எனது பெற்றொர்களும் செய்கிறார்கள் என்பது உரைக்க, உரத்த குரலில் அழுதேன்.
  • “என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். “எங்க வேலையை கெடுக்காதே, அந்தாண்ட போ” என்று அதட்டி அனுப்பினார்கள். நம்ப முடியாமல் அழுதுகொண்டே நின்றேன். அங்கிருந்த ஒரு அம்மா விளக்குமாறை கீழே போட்டுவிட்டு என் அருகே வந்து, “நீ என்கிட்டே சொல்லு ராசா நான் கேட்குறேன்” என்று சொன்னார். அந்த அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன்.

உங்கள் 16, 17 வயதில் அந்த நிகழ்ச்சி மாபெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அது என்ன மாதிரியான மனநிலையை உண்டாக்கியது?

  • மிகச் சிறிய வயதில் ஒருமுறை அம்மா என்னிடம் ‘ஒருபோதும் நீ விளக்குமாறை கையில் எடுக்கக் கூடாது’ என்று என்னிடம் சத்தியம் செய்து தரச் சொன்னார். அதன் அர்த்தம் அவர்கள் செய்யும் வேலையை நேரில் கண்டபோதுதான் புரிந்தது. கோலார் தங்க வயலில் எங்கள் வீட்டருகே ஒரு குறுங்காடு இருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் சூழந்த அந்த இடத்தில், மனதிற்குக் கஷ்டமான நேரங்களில் போய் தனியாக அமர்ந்திருப்பேன். தனியாக பேசியபடி, அழுதபடி பல மணி நேரம் அங்கே உட்கார்ந்திருக்கிறேன்.
  • மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன்.
  • பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன்.

இப்படி ஒரு தொழில் திணிக்கப்பட்டதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது?

  • மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக எங்கள் மக்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மதத்தின் பேரால் இந்தச் சுரண்டலைப் புனிதப்படுத்தும் முயற்சிகள்தான் நிகழ்ந்தன. மகாத்மா காந்தி, ‘நாம் குழந்தையாக இருக்கும்போது நம்முடைய அன்னைதான் மலத்தைத் துடைத்துச் சுத்தம் செய்கிறார். எனவே, மலம் அள்ளும் பெண்கள் எல்லாம் நமது அன்னை போன்றவர்கள்’ என்றார்.
  • இவையெல்லாம் எந்த மாறுதலையும் எங்கள் சமூகத்தில் கொண்டுவரவில்லை. ஹரிஜனம் என்பதும், வால்மீகி என்பதும் எந்தவிதக் கேள்வியுமின்றி அதே தொழிலை தொடரவே எங்களது மக்களைத் தூண்டின. ஆனால், பாபாசாகேப் அம்பேத்கார்தான் யாரையும் இந்தத் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று கொந்தளித்தார். அதுவே எங்களை இதிலிருந்து விடுதலையடைய தூண்டியது.
  • இந்தியாவை விடுங்கள். நாடு பிரிவினையின்போது, முகமது அலி ஜின்னா நேருவிற்கு கடிதம் எழுதினார். பாகிஸ்தானிலிருந்து மற்ற இந்துக்களை அனுப்பிவிடுகிறோம். ஆனால் துப்புரவு தொழிலில் ஈடுப்பட்டுள்ள தலித் இந்துக்களை அனுப்ப இயலாது. அனுப்பினால் எங்கள் நாட்டில் துப்புரவுசெய்ய ஆள் இல்லாமல் போய்விடும் என்று எழுதியிருந்தார்.

கல்வி எந்தளவுக்கு இந்தச் சமூகச் சூழலிலிருந்து விடுபட உதவுகிறது?

  • நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த வேலைவாய்ப்பு அலுவகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று தகவல்களை எழுதிக் கொடுத்தேன். அவரோ செய்ய விரும்பும் தொழில் என்னும் கேள்விக்கு, ‘தோட்டி’ என்று அவராகவே எழுதினார். அதை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு திரும்பிவிட்டேன். பிறகு பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை.

உங்களுடைய போராட்டம் எப்படி ஆரம்பமானது?

  • நான் சொன்னேன் அல்லவா, உண்மையான அன்புடன் என்னுடைய மக்களிடம் நான் நெருங்கியபோது அவர்களும் அதே விதமான உணர்வுடன் என்னிடம் நெருங்கிவந்தார்கள். மனிதனின் கழிவை மனிதனே அகற்றுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன்.
  • நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ் (Drylatrine) முறையை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டப் போராட்டம் தொடங்கினேன். அப்படிதான் 1993ஆம் ஆண்டு எடுப்புக் கக்கூஸ் முறையைச் சட்டரீதியாக தடைசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிறகு நாங்கள் ஒரு இயக்கமாக நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினோம்.

சட்டம் இயற்றிய பின்பு எடுப்புக் கக்கூஸ் முறையை ஒழிக்க முடிந்ததா?

  • இது 1993ஆம் ஆண்டு சட்டம் இயற்றிய பின்பும் பெரிதாக நிலைமை மாறவில்லை. எனவே, 2003ஆம் ஆண்டு, 7 துப்புரவுத் தொழிலாளர்களை வழக்குதார்களாகக் கொண்டு இந்திய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுகளை எதிர்த்து உடனடியாகச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கறிஞர் முரளிதரன் எங்களுக்காக வாதாடினார்.
  • கூடவே, களத்தில் நேரடியாகச் சென்று, இப்படி எடுப்புக் கக்கூஸ்கள் உங்கள் ஊரில் இருக்கிறதா என்று உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்போம். பெரும்பாலும் இல்லையென்றுதான் சொல்வார்கள். பிறகு, நாங்களே அப்படி உள்ள கக்கூஸ்களைக் கண்டுபிடிப்போம்.
  • ஒருநாள் கூட்டமாகக் கூடிச் சென்று அதை இடித்துத் தள்ளத் தொடங்கினோம். உடனடியாக காவல் துறையுடன் அரசு அதிகாரிகள் ஓடிவந்தார்கள். ‘இப்படிக் கக்கூஸ்களை இடிப்பது தவறு’ என்றார்கள். ‘நீங்கள்தான் எடுப்புக் கக்கூஸ்களே இல்லையென்றீர்களே? இல்லாத கக்கூஸ்களை நாங்கள்எப்படி இடிக்க முடியும்’ என்று கேட்டோம்.
  • தொடர்ந்து இதைச் செய்தது மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தோம். அதன் மூலம் ஓரளவுக்கு இந்த முறையை ஒழிக்க முடிந்தது. ஆனால், இன்னமும் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த முறை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
  • அரசு நினைத்தால் ஒரே நாளில் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி அதை நிறைவேற்ற முடிகிறது. ஆனால், 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடைச் சட்டத்தை இன்றளவும் முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதை எப்படிப் புரிந்துகொள்வது?

சாஃபய் கரம்சாரி அந்தோலன் (Safai Karamachari Andolan) எப்படித் தொடங்கப்பட்டது?

  • எடுப்புக் கக்கூஸ் மட்டுமல்ல பிரச்சினை. செப்டிக் டேங்க் அடைத்துக்கொண்டால் அதைச் சுத்தம் செய்யவும் மனிதர்களை அழைக்கிறார்கள். அவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது அந்தக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கிறார்கள்.
  • பாதாள சாக்கடைகள் அடைத்துக்கொண்டால் இதே துப்புரவுத் தொழிலாளர்கள் அதனுள் இறங்கி மாண்டுபோகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்தை நமது நாடு கொண்டிருக்கிறது. ஆனால், ரயிலில் கக்கூஸ் போனால், அப்படியே மலம் வெளியே வந்து தண்டவாளத்தில் விழுகிறது.
  • இதையும் துப்புரவுத் தொழிலாளர்களே சுத்தம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தால்தான் போராட முடியும் என்பதற்காகவே சாஃபய் கரம்சாரி அந்தோலன் அமைப்பை சில நல்ல மனிதர்களின் துணையுடன் தொடங்கினேன். நாடு முழுவதும் தொடர்ந்து போராடிவருகிறோம்.

1993 எடுப்புக் கக்கூஸ் தடைச் சட்டம் போலவே 2014ஆம் ஆண்டு நீங்கள் போராடி பெற்றுத் தந்த நஷ்டஈடு தொகைக்கான சட்டமும் மிக முக்கியமானது, அதைப் பற்றிச் சொல்லுங்கள்!

  • 2013ஆம் ஆண்டு, சாக்கடையைச் சுத்தம் செய்யவும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யவும் என்று அதில் இறங்கி விஷவாயு தாக்கி இறந்துபோகும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை தர வேண்டும், அப்படி ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்திய வீட்டு முதலாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். 2014ஆம் ஆண்டு நீதிபதி சதாசிவம் இதற்கான தீர்ப்பை வழங்கினார். உடனடியாக 1993ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இப்படி இறந்துபோன தொழிலாளர்களின் விவரம்கேட்டு அரசை நாடினோம்.
  • ஆச்சரியமாக அவர்களிடம் எந்தத் தகவலும் இல்லை. ‘எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கெடுப்பது எங்களது வேலை அல்ல’ என்று சென்ஸஸ் அமைப்பு சொல்லிவிட்டது. எனவே, அவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதில் சிக்கல் நீடிக்கிறது. நாங்களே பிறகு இந்தக் கணக்கெடுப்பைச் செய்கிறோம். மொத்தம் 2378 பேர் இப்படிச் சாக்கடைகளில் இறங்கி இதுவரை இறந்திருக்கிறார்கள். ஒரு பெரிய போரில்கூட இத்தனை பேர் சாக மாட்டார்கள். உண்மையில் அவர்கள் சாகவில்லை. நாம்தான் கொன்றிருக்கிறோம்.
  • சாதிய கொடுமைகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் வாழ்ந்துதான் என்ன ஆகிவிடப்போகிறது என்று ஏறக்குறைய தற்கொலை மனநிலையில்தான் அந்தத் தொழிலாளர்கள் செப்டிக் டேங்கிலும், சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய இறங்குகிறார்கள்.
  • இனியாவது உயிர்கள் போகாமல் காக்க வேண்டும் என்று போராடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 6,500 தன்னார்வலர்கள் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தி நாங்களே இத்தகைய பணியில் ஈடுபட்டுவருகிறோம்.

தமிழ்நாட்டில் நிலைமை எப்படி உள்ளது?

  • தமிழ்நாடு பொதுவாகவே விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக ஊடகத் துறை அங்கு பலமாக இருக்கிறது. சாக்கடை மரணங்கள் நேர்ந்தால், உடனடியாக ஒரு பெரிய செய்தியாக அது அங்கு மாறுகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்திய தாக்கம் அது. இந்தியாவில் சில மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தால் அது செய்தியாகக்கூட வருவதில்லை. தமிழ்நாட்டிலும், நகரங்களில் பாதாள சாக்கடை முழுவதுமாக நிர்மாணிக்கபடவில்லை. இது உடனடியாக அரசு செய்ய வேண்டிய பணி.

ஜப்பானில் பெஜவாடா வில்சன்

ஜப்பானில் நீங்கள் பார்த்தவரை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலைமை எப்படியிருக்கிறது?

  • ஜப்பானில் எத்தனையோ முன்னேறியிக்கிறார்கள். நாடு முழுவதும் பாதாள சாக்கடைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுத்தம் செய்யும்முறை முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்டிருக்கிறது. முன்பிருந்த ஒரு குறிப்பிட்ட புரோக்குமின் சாதியினர் மட்டும் துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் முறையும் இப்போது பெரும்பாலும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செய்யக்கூடிய தொழிலாக மாறிவருகிறது.
  • இங்கிருக்கும் இயந்திரமுறை சுத்திகரிப்பை இந்தியாவில் காட்டி, இதைச் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கதான் நான் ஜப்பான் வந்தேன். என்னுடைய நண்பர் பேராசிரியர் ராம்மகாலிங்கம் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எங்கள் கஷ்டங்களைப் புரிந்துவைத்திருக்கும் ஜப்பான் நாட்டுத் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் எங்களுக்கு உதவுதாகக் கூறியிருக்கிறார்கள்.
  • சந்திராயன் ராக்கெட்டை நிலவுக்கு விடுகிறீர்களே, சாக்கடை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இல்லையா என்று என்னிடம் ஜப்பானியர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
  • இந்திய அரசு நினைத்தால் இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் இதற்கென கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவர்களுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் படும் துன்பம் அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. அவ்வளவுதான்.

நன்றி: அருஞ்சொல் (02 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories