- நாம் எங்கே சென்றாலும் வாகனங்களில் பயணிக்கிறோம். பக்கத்துத் தெருவில் இருக்கும் மளிகைக் கடைக்குப் போனாலும் கண்டம் விட்டுக் கண்டம் போனாலும் வாகனங்கள்தாம் உதவுகின்றன. சைக்கிள் போன்றவற்றைத் தவிர்த்து இருசக்கர வாகனங்கள் தொடங்கி விமானம் வரை அனைத்து வாகனங்களும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களால் தாம் இயங்குகின்றன. மனித நாகரிகம் அசுர வளர்ச்சி அடைந்ததற்குக் காரணமே எரிபொருள்கள்தாம்.
- இது ஒரு பக்கம் என்றால், இந்த எரிபொருள்களுக்காக உலகின் ஏதோ ஒரு மூலையில் போர்கள் நடைபெறுகின்றன. லட்சக்கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். உலக அரசியலே மாறுகிறது. இவ்வளவு பயனையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் எரிபொருள்கள் எங்கிருந்து வந்தன?
- நம் பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நுண்ணுயிரிகளும் தாவரங்களும் இறந்தவுடன் சதுப்பு நிலங்களிலும் கடலுக்கு அடியிலும் புதைந்தன. அவற்றின் உடல்கள் பல லட்சம் ஆண்டுகளாக மக்கிச் சிதையும்போது அங்குள்ள தாதுப்பொருள்களுடன் கலந்து, கார்பன் அதிக அளவில் உள்ள படிவங்களாக மாறிவிடுகின்றன. இந்தப் படிவங்கள் வெப்பம், அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, அவை புதைப்படிவ எரிபொருளாக (Fossil Fuels) உருமாறுகின்றன.
- புதைப்படிவ எரிபொருள்களில் மூன்று வகைகள் இருக்கின்றன. அவை நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை. பூமியில் உள்ள கரிமப்பொருள்களின் கலப்பு (Organic Matter), எவ்வளவு காலத்துக்கு அவை புதைந்திருந்தன, எந்த அளவிலான வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உள்ளாகின என்பதைப் பொறுத்து அது எந்த வகை எரிபொருளாக மாறுகிறது என்பது முடிவாகும்.
- இந்தப் புதைப்படிவ எரிபொருள்கள்தாம் உலகத்துக்குத் தேவையான 80% ஆற்றலை வழங்குகின்றன. நிலத்துக்கு அடியில் சுரங்கம் அமைத்தோ, கடலுக்கு அடியில் கிணறு அமைப்பதன் மூலமோ இந்த எரிபொருள்களை எடுத்து, சுத்திகரித்துப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவை கச்சா எண்ணெய் வகையைச் சேர்ந்தவை.
- பூமியின் எண்ணெய் வளங்கள் 54 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானவை. அதாவது பூமியில் சிக்கலான உயிரின வகைகள் தோன்றுவதற்கு முன்பே எரிபொருள்கள் உருவாகிவிட்டன. இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எரிபொருள்கள் டைனசோர்கள் வாழ்வதற்கு முன்பு இருந்த கார்போனிஃபரஸ் காலத்தில் உருவாகத் தொடங்கியவை.
- பொதுவாகக் கச்சா எண்ணெய் உருவாவதற்குச் சில லட்சம் ஆண்டுகளாவது ஆகும் எனச் சொல்லப் படுகிறது. இருப்பினும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளில் உருவான எண்ணெய் வளம் காணப்படுகிறது. ரஷ்யாவின் காம்சாட்கா பகுதியில் 50 ஆண்டுகளில் உருவான எண்ணெய் வளத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
- இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான கச்சா எண்ணெய் டெத்திஸ் கடல் என்கிற பண்டைய கடலின் அடியில் உருவானவை. இந்தக் கடல் காலப்போக்கில் கண்டங்களின் நகர்வால் மூடப்பட்டுவிட்டது. அந்தப் பகுதிதான் இன்றைய மத்தியக் கிழக்கு நிலப்பரப்பு. அதனால்தான் உலகின் மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெய் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கிறது.
- மனித இனம், மின்சாரத்தில் இருந்து போக்குவரத்து வரை இந்த எரிபொருள்களை ஏதோ ஒருவகையில் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறது. அவை இல்லை என்றால் நம் தினசரி வாழ்க்கையே கடினமாகிவிடும் என்கிற சூழல் உருவாகிவிட்டது.
- இன்று நாம் பயன்படுத்தும் 96% கருவிகள் இந்தப் புதைப்படிவ எரிபொருள்களால் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டுதான் இயங்குகின்றன. அது மட்டும் அல்லாமல் பிளாஸ்டிக், ரப்பர் போன்றவையும், விவசாயத்துக்குப் பயன்படும் செயற்கை உரங்கள் போன்றவையும் இந்தப் புதைப்படிவ எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் துணைப் பொருள்களே.
- இந்த எரிபொருள்களை நாம் பயன்படுத்தத் தொடங்கியதால்தான் தொழிற்புரட்சி உருவாகி, மனித இனம் வேகமாக நவீனமடைந்தது. நமது வாழ்வாதாரம் உயர்ந்தது. அதேநேரம் இந்த எரிபொருள்களின் வணிகத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு உலக அளவில் போர்களும் நடைபெறுகின்றன. உலகப் பொருளாதாரத்தையே இந்த எரிபொருள்கள் கட்டுப்படுத்துகின்றன.
- இது ஒருபுறம் என்றால், நமக்குக் கிடைத்திருக்கும் எரிபொருள்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி அவற்றின் கழிவுகளால் சுற்றுச்சூழலையும் நாம் சீரழித்துவருகிறோம். எந்த அளவுக்கு எரிபொருளால் நமக்கு நன்மை விளைகிறதோ அதே அளவு அழிவுக்காகவும் அதை நாம் பயன்படுத்துகிறோம் என்பது வேதனையானது.
- உண்மையில் இன்று நாம் பயன்படுத்தும் எரிபொருள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்ட சூரிய ஆற்றல்தான். தாவரங்கள், நுண்தாவரங்கள் ஆகியவை ஒளிச்சேர்க்கை மூலம் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றி உடலில் சேகரிக்கின்றன. அவை இறந்தவுடன் பூமியில் புதைந்து எரிபொருள்களாகின்றன.
- அந்த எரிபொருள்களை நாம் பயன்படுத்தும்போது, சேகரித்து வைத்த சூரிய ஒளிதான் வேறு வடிவத்தில் ஆற்றலாகப் பயனளிக்கிறது. அதனால், நீங்கள் அடுத்தமுறை வாகனத்தில் செல்லும் போது 50 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
நன்றி: தி இந்து (12 – 07 – 2023)