TNPSC Thervupettagam

பெண்களின் ஊதியமில்லா உழைப்பு

March 12 , 2025 7 hrs 0 min 12 0

பெண்களின் ஊதியமில்லா உழைப்பு

  • தினசரி வேலைச் சுமைக்கு இடையே ஓய்வு, ஊடகங்கள், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஆண்களைவிடப் பெண்கள் 21 நிமிடங்கள் குறைவாகச் செலவிடுவதாகவும், பல நேரம் இந்த இடைவெளி கூடுதலாக இருப்பதாகவும் இந்தியாவின் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டிருக்கும் ‘நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு - 2024’ அறிக்கை தெரிவித்துள்ளது.
  • இவ்வாறு ஓய்வு எடுத்​துக்​கொள்​ளாமல் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடுவது, அவர்களுக்கு மன அழுத்​தத்தை அதிகரிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

புள்ளி​விவரங்கள் சொல்வது என்ன?

  • பெண்கள், ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்​பினர்​களுக்​காகச் செய்கிற ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுடன் ஒப்பிட்​டால், செய்திகளை அறிந்து​கொள்​வதற்குக் குறைவான நேரத்தையே செலவிடு​கிறார்கள் என்கின்றன, இந்தப் புள்ளி​விவரங்கள். வருமானம் இல்லாத வேலைகளில் பெண்கள் 289 நிமிடங்கள் செலவிட்​டால், ஆண்கள் 88 நிமிடங்கள் மட்டுமே செலவிடு​வ​தாகத் தெரிய​வந்​திருக்​கிறது.
  • ஒரு நாளில், சராசரியாக 289 நிமிடங்கள் என 5 மணி நேரத்தை வீட்டு வேலைகளுக்​காகப் பெண்கள் செலவிடு​கிறார்கள். இந்த அளவு ஆண்களை​விடச் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிகம் என்று கணக்கெடுப்பு முடிவுகள் சுட்டிக்​காட்டு​கின்றன. அடுத்​த​தாகக் குழந்தைகள், முதிய​வர்கள் அல்லது நோய்வாய்ப்​பட்​ட​வர்​களைக் கவனித்​துக்​கொள்​வ​தில், ஆண்களை​விடக் கூடுதலாக ஒரு மணி நேரத்தைப் பெண்கள் செலவிடு​கிறார்கள்.

குடும்பத்தைப் பராமரிக்கப் பெண்கள் 137:

  • நிமிடங்கள் செலவிட்​டால், ஆண்கள் 75 நிமிடத்தை மட்டுமே செலவிடு​கின்​றனர். ஆண் - பெண் இடையே நிலவும் ஏற்றத்​தாழ்வுகள் பெண்களுக்கான ஓய்வு நேரத்தை மறுப்​பதுடன், ஊதியம் பெறும் வேலையில் அவர்கள் நுழைவதற்கான வாய்ப்பு​களையும் தடுக்​கின்றன. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் இந்தியாவில் வேலைவாய்ப்பு - வேலையின்மையை அளவிடும் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் நடத்திய காலமுறை அடிப்​படையிலான தொழிலாளர் படைக் கணக்கெடுப்புகள் (PLFS), 2016 - 2017 காலக்​கட்​டத்​துடன் ஒப்பிடும்​போது, 2023-24இல் பெண்கள் அதிக அளவில் பணி அமர்த்​தப்​பட்​டதைக் காட்டு​கின்றன. அந்த வகையில் பெண்களுக்கான தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2017-18 இல் 22 சதவீதத்தில் இருந்து
  • 2023-24இல் 40.3 சதவீதமாக இரட்டிப்​பாகி​யுள்ளது; ஆனால் இந்த வளர்ச்சி​யானது, கிராமங்​களில் பெண்கள் சுயதொழிலில் அதிக அளவில் ஈடுபட்டதன் மூலம் நிகழ்ந்​த​தாகப் பகுப்​பாய்வு முடிவுகள் விளக்கு​கின்றன. கரோனா காலத்தில் நாட்டின் பொருளா​தாரம் ஸ்தம்​பித்த​போது, பெரும்​பாலான பெண்கள் குறைந்த ஊதியம் தருகின்ற வேலைகளில் சிக்கிக்​கொண்​டனர்.
  • பணியிடங்​களில் பெண்கள் எதிர்​கொள்ளும் பாலியல் அத்து​மீறல்கள், மன அழுத்தம் உள்ளிட்டவை பணியி​லிருந்து விலகு​வதற்கான சூழலை உண்டாக்கு​வ​தாகவும் பெண்ணுரிமைச் செயல்​பாட்​டாளர்கள் தெரிவிக்​கின்​றனர். உதாரணத்​துக்கு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் 2018 முதல் ஒவ்வோர் ஆண்டும் பணியிடத்தில் 400க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகி​யுள்ளன; ஆண்டுக்குச் சராசரியாக 445 வழக்குகள் பதிவாகி​யுள்ளன.

ஊதியத்தில் பாகுபாடு:

  • ஒரு நாளைக்குத் தோராயமாக 1.9 டாலர் (ரூ.165) ஊதியம் பெறுவதன் மூலம் வறுமையைத் தவிர்க்​கலாம் எனச் சர்வதேச வருமானத் தர நிர்ணய அமைப்பு குறிப்​பிடு​கிறது. அந்த வகையில், 165 ரூபாய்க்குக் கீழே வருமானம் ஈட்டு​பவர்கள் ‘வேலை செய்யும் ஏழைகள்’ என வரையறுக்​கப்​படு​கிறார்கள். அந்த வகையில், 2017 - 2022இல் வேலை செய்யும் ஆண் - பெண் ஏழைகளின் பங்களிப்பு சதவீதத்தைக் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு வெளியிட்டது.
  • இந்த ஆறு வருடங்​களில் வேலை செய்யும் ஏழைப் பெண்களின் பங்களிப்பு 56.7% முதல் 64.3% வரை உள்ளது. இது ஆண்களின் எண்ணிக்கை​யைவிட 14.8% முதல் 18.2% வரை அதிகம். ஆனால், வேலை செய்யும் ஏழைப் பெண்கள், ஆண்களை​விடக் குறைவான ஊதியத்தையே பெறுகிறார்கள் என்பது இதில் குறிப்​பிடத்​தக்கது. எடுத்​துக்​காட்டாக, இக்காலக்​கட்​டத்தில் ஏழைப் பெண்களின் மாத வருமானம் ரூ.2,051 முதல் ரூ.2,565 வரை இருந்த நிலையில், ஏழை ஆண்களின் மாத வருமானம் ரூ.9,030 முதல் ரூ.12,916 ஆக இருந்தது.

மன அழுத்தம் - ஆய்வுகள்:

  • வேலையைப் பகிர்ந்து​கொள்​வதில் நிலவும் பாகுபாடு, ஊதியம் இல்லாத வேலை ஆகியவற்றால் பெண்கள் மன அழுத்​தத்​துக்குத் தள்ளப்​படுவதாக உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்​கின்றன. நீண்ட காலத்​துக்கு நீடிக்கும் மன அழுத்​த​மானது கார்டிசோல் ஹார்மோனின் அளவை அதிகரித்து, மனநல ஆரோக்​கி​யத்தில் பாதிப்பை ஏற்படுத்து​கிறது; போதிய ஓய்வு, சுய ஆரோக்​கி​யத்தைப் பேணாமல் இருப்பது, பதற்றம், மனச்சோர்வை அதிகரிப்பதாக அமெரிக்கா, ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்​கின்றன.
  • ஊதியம் இல்லாத, குறைவான வருமானத்தைப் பெறும் இளம் பெண்கள் பலரும் ஆண்களைவிட அதிக அளவு மன அழுத்​தத்​துக்குத் தள்ளப்​படுவதாக பிரிட்​டனில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஊதியம் இல்லாத வேலையானது, பெண்களின் அறிவாற்றல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி​யாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • தென் கொரியாவில் 2006 - 2018 காலக்​கட்​டத்தில் முழு நேர இல்லத்​தரசிகள் - வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒப்பீட்டு ஆய்வு நடத்தப்​பட்டது. இல்லத்​தரசிகள் - ஊதியத்​துக்கு வேலை செய்யும் பெண்களைவிட ஐந்து மடங்கு அதிக அறிவாற்றல் குறைபாட்டை எதிர்​கொண்டதை அந்த ஆய்வு எடுத்​துக்​காட்​டியது.

அதிகாரமளித்தல்:

  • நாட்டின் பொருளா​தாரப் பங்களிப்பில் வேலை வாய்ப்பு முக்கிய அங்கம் வகிக்​கிறது. ஆனால், குடும்பச் சூழல்​களில் பராமரிப்புப் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ளும் பெண்கள், இதில் பங்கு​கொள்ள முடியாமல் தவிர்க்​கப்​படு​கிறார்கள். இதனால் சமூகம் - குடும்பம் - குழந்தை பெற்றுக்​கொள்வது போன்ற நெருக்​கடிகளில் சிக்கிக்​கொள்ளும் பெண்கள், வேலைக்கு ஏற்ற வருமானத்தை​யும், ஓய்வு நேரத்தையும் இழக்கிறார்கள் எனச் சமூகச் செயற்​பாட்​டாளர்கள் குற்றம்​சாட்டுகின்றனர்.
  • ஊதியம் இல்லாத பணிகளில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்கான அதிகாரத்தை இழப்பதுடன், கர்ப்பக் கால இறப்பு, குழந்தைப் பருவக் கர்ப்பம், கல்வியறி​வின்மை ஆகியவற்​றாலும் பாதிக்​கப்​படு​கின்​றனர். பெண்கள் எதிர்​கொள்ளும் சமூக - குடும்ப இடர்ப்​பாடு​களைத் தவிர்க்​கும்​பட்​சத்​தில், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களுக்கும் வாய்ப்​பளிக்​கும்​போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் பெண்களாலும் அதிக அளவு பங்களிப்பை அளிக்க முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்​றனர். இதன் மூலம், மறைக்​கப்​படும் பெண்​களின் உழைப்பும் சமூகத்தில் புலப்படத் தொடங்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories