- இந்திய விடுதலைப் போராட்டத்தில் வங்காள மாகாணம் (Bengal Presidency) பெரும் பங்காற்றியது. தற்போதைய மேற்கு வங்கமும் வங்க தேசமும் இணைந்த வங்காள மாகாணம், பிரிட்டிஷ் ஆட்சியின் தலைநகராகச் செயல்பட்டதால் 17ஆம் நூற்றாண்டிலேயே அது வளர்ச்சி காணத் தொடங்கியது. கல்வியறிவு கிடைக்கப்பெற்றதால் இலக்கியத்திலும் அரசியல் அறிவிலும் அங்கிருந்த மக்கள் மேலோங்குவதற்கான சூழல் அமைந்தது. ஆனால், அது அனைத்துத் தரப்புக்குமான வளர்ச்சியாக அமையவில்லை.
- சாதிய, வர்ணாசிரமப் பிரிவினைகள் மேலோங்கியிருந்த அந்தக் காலத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கே கல்வி கைசேரவில்லை. ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தைகள் மணம் முடிக்கப்பட்ட சூழலில் கல்வி குறித்து இந்தியப் பெண்கள் கனவுகூடக் காண முடியாத அவலநிலை. அப்படியொரு சூழலில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய விடுதலை, சமூகச் சீர்திருத்தம் ஆகிய இருவிதமான போராட்ட வடிவங்களைத் தலைவர்கள் மிகத் தீவிரமாக முன்னெடுத்தார்கள்.
- கல்வியிலும் பிற துறைகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சில மாற்றங்களைப் பொதுநலன் கருதி, சீர்திருத்தவாதிகளில் சிலர் ஏற்றுக்கொண்டனர். விடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தேசியவாதிகள் அதை எதிர்த்தனர். மிதவாதிகள் – தீவிரவாதிகள் என்று இருபிரிவாகத் தலைவர்கள் செயல்பட்டனர். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். ஆனால், இருவேறு முனைகளில் இருந்து அவர்கள் செயல்பட்டனர். இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லப்பட்டவற்றின் மீது பிரிட்டிஷ் அரசு நேரடி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது தேசியவாதிகள் மத்தியில் கொதிப்பலையை ஏற்படுத்தியது. அதையே கருவியாகக் கொண்டு மக்களை ஒன்றுதிரட்டி காலனியாதிக்கத்துக்கு எதிராக அவர்கள் போராடினர்.
- ‘லோக்மான்யர்’ பால கங்காதர திலகருக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத இடமுண்டு. ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்கிற முழக்கத்தின் மூலம் விடுதலைப் போராட்டத்தில் பெருந்திரளான மக்களை அவர் ஒருங்கிணைத்தார்.
- ஆனால், அன்றைக்கு நிலவிய சமூகச் சூழல் விடுதலைப் போராட்டம் ஒன்றே இலக்கு என்று இருந்தவர்களை வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடவில்லை. ஆங்கிலேயரை இந்தியாவைவிட்டு வெளியேற்றும் போராட்டத்தில் இருந்தவர்களுக்குச் சமூகத்தில் வேரோடிப் போயிருந்த பாகுபாடுகள் பெரிதாகத் தெரியவில்லை. அன்றைக்கு நிலவிய சூழலில் அப்படியான பாகுபாடுகள்தாம் இயல்பு என்று அனைத்துத் தரப்பாலும் நம்பவைக்கப்பட்டிருந்தது.
- அதனால்தான் பொதுப் பள்ளிகளையும் பெண்கள் பள்ளிகளையும் விஷ்ணுசாஸ்திரி, வி.என்.மண்டலிக், பால கங்காதர திலகர் உள்ளிட்ட தேசியவாதிகள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘அனைவருக்கும் கல்வி என்பது ‘தேசியம்’ என்கிற கொள்கையை அழித்துவிடும்’ என வாதிட்டனர். பெண்கள் கல்வி கற்பது சமூகத்தில் அவர்களது நிலையை இழிவானதாக மாற்றும் என்றனர். பொதுப்பள்ளிகளை இந்திய தேசியத்துக்கான அச்சுறுத்தலாகவே அவர்கள் பார்த்தனர். அவற்றின் ‘தீமை’களைப் பற்றிப் பரப்புரை செய்தனர். “வரலாறு, புவியியல், கணிதம், தத்துவம் போன்றவற்றைப் பெண்கள் பயில்வது, அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்” என்றார் திலகர். அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் பொதுப்பள்ளிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும்படி சக தேசியவாதிகளை அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து பால கங்காதர திலகர், தான் நடத்திய ‘mahratta’ (மராட்டா) ஆங்கில இதழில் எழுதினார். பெண்களின் முன்னேற்றம் என்பது சமூகச் சூழலோடு பின்னிப் பிணைந்தது என்பதைத்தான் நூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு உணர்த்துகிறது. 1800களில் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கச் சென்ற ஆசிரியர் புத்தகத்தோடு மாற்றுப் புடவையையும் எடுத்துச் சென்றார். எதற்காக? அடுத்த வாரம் பார்ப்போம்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 - 10 – 2023)