TNPSC Thervupettagam

பெண்களின் மெட்ராஸ்

August 18 , 2024 3 hrs 0 min 11 0

பெண்களின் மெட்ராஸ்

  • சென்னையின் நிர்மானத்தில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது. சென்னையின் அடையாளமாக விளங்குபவற்றில் பெண்களுக்காகப் பெண்களால் நிறுவப்பட்டவையும் அடங்கும்.
  • இசை, நடனம், சமையல் கலை போன்றவை தவிர்த்து முறைப்படியான பள்ளிப் படிப்பு 1800களின் மத்தியில்தான் மதராஸ் மாகாணத்தில் அறிமுகமானது. சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்புப் பெண்களும் பயிலும் வகையிலான பொதுப் பள்ளிகள் அந்தக் காலத்தில் கனவாக மட்டுமே இருந்தன. ஐரோப்பிய, பிரிட்டிஷ் மிஷனரிகள் சார்பில் பெண்களுக்கென்று பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பிலும் பெண்கள் பள்ளிகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரிட்டன் கல்வியாளரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான மேரி கார்பென்டரின் பங்கு இதில் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர் இவர். பெண்களின் அடிப்படைக் கல்வியில் பிரிட்டிஷ் அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் கார்பென்டர் வாதிட்டார். பெண்களுக்கான பொதுப்பள்ளிகளை அமைக்கச் செலவாகும் என்பதால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டது. பொதுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் நடத்தப்பட்டது.
  • “1868 மார்ச் 31 நிலவரப்படி கல்வித் துறையோடு இணைக்கப்பட்டிருந்த பள்ளிகளில் 6,510 பெண்களும் மிஷனரிகள் நடத்திய பள்ளிகளில் 4,295 பெண்களும் படித்துக்கொண்டிருந்தனர். மிஷனரிகள் நடத்திய பள்ளிகளில் 29 இந்துப் பெண்களும் 82 முஸ்லிம் பெண்களும் பயின்றனர். மற்றவர்கள் ஐரோப்பியர்கள் மற்றும் பிரிட்டிஷ் பெண்கள்” என ‘History of Education in the Madras Presidecy’ நூலில் எஸ்.சத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இடைவிடாத மருத்துவச் சேவை

  • புதுக்கோட்டையில் தேவதாசி மரபில் பிறந்த ஒரு பெண், தென்னிந்தியாவிலேயே மருத்துவம் பயின்ற முதல் பெண் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த அதிசயங்களில் ஒன்று. அந்தச் சாதனையைப் படைத்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அரும் முயற்சியால் உருவானதுதான் சென்னை அடையாறின் அடையாளமாகத் திகழும் ‘அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்’. பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்தாமல் நோய்களுக்குத் தங்களையே பலிகொடுப்பதைப் பார்த்து துயருற்ற முத்துலட்சுமி, இந்தியப் பெண்கள் சங்கத்தோடு இணைந்து 1954இல் இந்த மருத்துவமனையைத் தொடங்கினார். குடிசை போன்ற சிறு குடில்களில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் மருத்துவமனையான இது, புற்றுநோய் சிகிச்சையில் பல்வேறு முன்னோடித் தொழில்நுட்பங்களைப் புகுத்திய வகையில் தெற்காசியாவின் சிறந்த மருத்துவமனையாகத் திகழ்ந்து இன்றளவும் டாக்டர் முத்துலட்சுமியின் பெயரையும் புகழையும் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

பிரசிடென்சி பள்ளியும் பிரசன்டேஷன் கான்வென்ட்டும்

  • 1783இல் சென்னை எழும்பூரில் பெண்களுக்காகத் தொடங்கப் பட்ட பி.டி. பள்ளி (Presidency Training School) சென்னை மாகாணத்தில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதன்மைப் பள்ளிகளில் ஒன்று. இந்தப் பள்ளி தொடங்கப்பட்டபோது 10 மாணவியரே இதில் பயின்றனர். பின்னாளில் பிரசிடென்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்ட இந்தப் பள்ளியில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்றனர். தற்போது மாதிரிப் பள்ளியாக இது செயல்பட்டுவருகிறது.
  • அயர்லாந்தில் ஏழை கத்தோலிக்கக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் பொருட்டு பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியை 1775இல் நானோ நேகல் எனும் அருள்சகோதரி அமைத்தார். அவரது அமைப்பைச் சேர்ந்த நான்கு சகோதரிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் சார்பாகப் போரிட்டு மரணமடைந்த அயர்லாந்து வீரர்களின் குடும்பங்களுக்குச் சேவை செய்வதற்காக 1842இல் சென்னையின் ஜார்ஜ்டவுனை வந்தடைந்தனர். அவர்களிடம் ஒரு மடம், ஒரு பள்ளி, ஓர் ஆதரவற்றோர் இல்லம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன. மரங்கள் அடர்ந்த பகுதியில் அவர்களது முயற்சியால் 1910இல் பெண்கள் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. சர்ச் பார்க் என்றழைக்கப்பட்ட அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஐரோப்பியக் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளி 1952 முதல் மதராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளியானது. மதராஸ் பெண்களின் கல்வி வளர்ச்சியில் இந்தப் பள்ளிக்கு முக்கிய இடமுண்டு.

சாரதா இல்லமும் அவ்வை இல்லமும்

  • பாடல்களிலும் கதைகளிலும் போற்றி வணங்கப்படும் இந்தியப் பெண்களின் நிலை நிதர்சனத்தில் கவலைக்குரியதாக இருப்பதை மறுக்க முடியாது. விடுதலைக்கு முந்தைய காலத்தில் கைம்பெண்களின் நிலை வார்த்தைகளில் வடிக்க முடியாத கொடுமைகளால் நிறைந்தது. 12 வயதில் கணவனை இழந்த ஆர்.எஸ்.சுபலட்சுமி, தன் பெற்றோர் மற்றும் சித்தியின் உதவியாலும் ஊக்கத்தாலும் படித்து முடித்தார். ஆனால், தனக்குக் கிடைத்த கல்வியும் அறிவும் பிற பிராமணக் கைம்பெண்களுக்குக் கிடைக்காததில் அவருக்கு வருத்தமே. சென்னை எழும்பூரில் தான் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியைப் பிராமணக் கைம்பெண்கள் ஒன்றுகூடிப் பேசும் இடமாக மாற்றினார். சாரதா பெண்கள் சங்கம் இப்படித்தான் உருவானது. சங்கத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க, சென்னை ஐஸ் ஹவுஸில் (விவேகானந்தர் இல்லம்) ‘சாரதா இல்ல’த்தை 1915இல் சுபலட்சுமி நிறுவினார். குடும்பங்களால் கைவிடப்பட்ட பிராமணப் பெண்கள் தங்கிப் படிக்கும் இடமாக அன்றைக்கு சாரதா இல்லம் விளங்கியது. சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியையும் சகோதரி சுபலட்சுமி தொடங்கினார். பின்னர் அதை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்தார்.
  • பிராமணர் அல்லாத பெண்கள் தங்குவதற்கான இடத்தை அமைப்பதும் அன்றைய தேவையாக இருந்தது. அந்தப் பொறுப்பை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஏற்றுக்கொண்டார். சமூக அழுத்தத்தையும் நிர்பந்தங்களையும் தாங்க முடியாத பெண்கள், முத்துலட்சுமியிடம் அடைக்கலம் தேடி வந்தனர். பெண்கள் தங்கும் விடுதிகளில் அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களால் அவர்களுக்கென்று மயிலாப்பூரில் தனி வீடு எடுத்துத் தங்கவைத்தார் முத்துலட்சுமி. ஆதர வற்ற பெண்களுக்கான 1931இல் தொடங்கப்பட்ட அவ்வை இல்லம், 1936 முதல் அடையாறில் உள்ள தனி கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது. முத்துலட்சுமியின் சகோதரியான நல்லமுத்து அந்த இல் லத்தின் வாடர்னாகச் செயல்பட்டார்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories