- புதிய நாடளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா செப்டம்பர் 19 அன்று நாடளுமன்றத்தின் மக்களவையிலும் செப்டம்பர் 21 அன்று மாநிலங்கள் அவையிலும் ஏகமனதாக நிறைவேறியுள்ளது. இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (பெண் சக்திக்கு வணக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவது இது முதல் முறையல்ல என்றாலும் இம்முறை மகளிர் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படலாம் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
பெண்கள் எங்கே?
- ஆண் - பெண் இருவருக்கும் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே (1952) ஓட்டுரிமை வழங்கிய நாடு இந்தியா. இருப்பினும் 1952 -1957இல் முதலாவதாக அமைந்த மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. 1952 முதல் 2009 வரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50ஐக்கூட எட்டாத நிலையே இருந்துவந்தது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன் முறையாக பெண்கள் 58 பேர் (10.6 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று மக்களவையில் 539 உறுப்பினர்களில் 82 பேர் பெண்கள் (15.2 சதவீதம்). ஆனால், இந்தியா இன்னும் உலக சராசரியான 26.5 சதவீதத்தை எட்ட இயலவில்லை. பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து 2023 ஜனவரியில் ஐநா சார்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின்படி 185 நாடுகளின் பட்டியலில் இந்தியா 140ஆவதாகப் பின்தங்கியுள்ளது. பல்வேறு நாடுகள் இடஒதுக்கீட்டின் மூலமே பாலினச் சமத்துவத்தை எட்டியுள்ளன.
சமூகநீதிக்கான வழி
- பாலினப் பாகுபாட்டை குறைக்கவும் ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும் இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகாது என்றாலும் அது பெண்களை அதிகாரப்படுத்துதலில் ஒரு முக்கியமான நகர்வே. இன்று பெண்கள் கல்வியில் ஆண்களுக்கு நிகராக வளர்ந்து விட்ட போதிலும் பொருளாதாரத்திலும் நிர்வாகத் துறைகளிலும் அரசியல் சமூகப் பங்கேற்பிலும் பின்தங்கியே உள்ளனர். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதன் மூலம் பெண்கள் தங்கள் விடுதலையின் பல்வேறு பரிமாணங்களையும் தங்களுக்கான உரிமைகளையும் பெறுவது சாத்தியமாகும். பெண்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சினைக்காகப் பெண்கள் குரல் கொடுக்கவும் சட்டரீதியான மாற்றங்களைக் கொண்டுவரவும் முடியும். ஒரு சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு இடம் இருந்தால் மட்டுமே அக்குழுவின் குரல்கள் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு ஒலிக்கும். எனவேதான் 33 சதவீத இடஒதுக்கீடு. சமமான வாய்ப்பு என்பது 50 சதவீதம்தான். அதற்கான முதல்படியாக இது இருக்கும்.
ஏன் இத்தனை ஆண்டுகள்?
- 1974இல் மகளிர் நிலை குறித்து ஆய்வுசெய்ய அன்றைய அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்தது. 1992இல் இந்திய அரசியல் சட்டத்தின் 73, 74ஆவது திருத்தங்களின்படி பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் உருவாக்கப் பட்டது. 12, செப்டம்பர், 1996இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, 33 சதவீத இடஒதுக்கீட்டை முதன்முறையாக மக்களவையில் அறிமுகம் செய்தது. ஆனால், அரசு தனது பெரும்பான்மையை இழந்ததால் மக்களவையே கலைக்கப்பட்ட நிலையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. 26 ஜுன், 1998இல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இம்மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த அரசும் தனது பெரும்பான்மையை இழந்ததால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. 1999இல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதைத் தாக்கல் செய்தது. ஆனால், அம்முறையும் அது நிறைவேற்றப்படவில்லை. 2002, 2003இல் அரசியல் கட்சிகளிடையே ஒத்த கருத்து எழாததால் அது நிறைவேற்றப்படவில்லை.
- 2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் குறைந்தபட்சப் பொது செயல்திட்டத்தில் இணைத்தது. 22 மற்றும் 24 ஆகஸ்டு 2005இல் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒத்த கருத்தைப் பெறுவதற்காக முயன்றது. 2008இல் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுச் சட்டத்துறை நிலைக் குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 25, பிப்ரவரி 2010இல் மகளிர் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 8. மார்ச், 2010இல் அகில உலக மகளிர் தினத்தன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா மார்ச் 9ஆம் நாள் அதிக வாக்குகளைப் பெற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை பெறாததால் தோல்வியுற்றது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைத் தொடக்கம் முதலே ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் எதிர்த்தே வந்தன. 33 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை எனவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என அவை உறுதியாக நின்றன. இதே கருத்தை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், தேவகௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம், சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகளும் கூறி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் தற்போதைய அரசு உள் ஒதுக்கீட்டுடன் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியுள்ளது.
- மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா, தற்போது அது பல்வேறு கட்சிகளின் பரிந்துரைகளுடன் 128ஆவது சட்டத்திருத்த மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஏகமனதாக நிறைவேறியுள்ளது. குறைந்தபட்சம் 15 மாநிலச் சட்டப் பேரவைகளில் இம்மசோதாவை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இறுதியாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகே இது சட்டமாக மாறும். அதன் பிறகே நடைமுறைக்கு வரும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
காலம் கடத்தியது போதும்
- ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. 2021இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையம் குறுகிய காலத்தில் மகளிருக்கான தொகுதிகளைக் கண்டறிந்து ஒதுக்குவது போன்றவை இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதைத் தாமதிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. கிடைக்கும் கால இடைவெளியைப் பெண்களின் பங்கேற்பை வரவேற்கும் அனைத்துப் பெரும் கட்சிகளுமே சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நபர்களை அடையாளம் காண்பது நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றகளுக்கும் அவர்களை அழைத்துச்சென்று அதன் இயங்குமுறையை அறிந்துகொள்ள வைப்பது, பெண்களின் ஆக்கபூர்வமான பங்கேற்புக்கான பயிலரங்குகளை ஒருங்கிணைப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடலாம்.
களமிறங்கத் தயாராகுங்கள்
- கல்வி பயின்றாலும் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் பெண்களின் முதல் கடமை திருமணம், குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு என்கிற பண்பாட்டுச் சூழலில் பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு நாடும் வீடும் தயாராக வேண்டும். பெரும் அரசியல் பின்புலம் உள்ள வீடுகளில் ஆண்களுக்கு மாற்றாகவே பெண்கள் வர முடியும் என்கிற சூழுல் இன்று ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் ஆண்களின் துணையின்றிப் பெண்கள் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் செல்வது என்பது எல்லைகளைத் தாண்டிச் செல்வதாகும்; சொந்த மண்ணின் பிரச்சினைகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் போராடுவதாகும். இதற்கு வீடுசார் பொறுப்புகளில் இருந்து பெண்களை ஆண் சமூகம் மட்டுமின்றிப் பெண்களே தங்களை விடுதலை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்களை ஆற்றல்படுத்திக்கொள்வதன் மூலம் இது நிச்சயம் சாத்தியப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2023)