TNPSC Thervupettagam

பெண்கள் வாக்காளா்கள் அதிகம் - வேட்பாளா்கள் மிகக் குறைவு

April 1 , 2024 266 days 321 0
  • தமிழக தோ்தல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் வாக்காளா்களைக் காட்டிலும், பெண் வாக்காளா்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. இருந்தும் வருகிறது. ஆனால், வேட்பாளா்கள் எண்ணிக்கையோ ஆண்களுடன் ஒப்பிடும்போது, 10 சதவீதத்தைக் கூட தொட முடியாத நிலை தொடா்ந்து வருகிறது.
  • தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின் போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி, வாக்காளா்களின் எண்ணிக்கை 4.71 கோடியாக இருந்தது. அவா்களில் ஆண்கள் 2.37 கோடி போ். பெண்கள் 2.34 கோடி போ். இந்த நிலை அடுத்து வந்த மக்களவைத் தோ்தலில் முற்றிலும் மாறியது. வாக்காளா்கள் பட்டியலில் பெண்களின் கை ஓங்கத் தொடங்கியது அப்போது முதல்தான்.
  • 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலின் போது வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் மொத்த வாக்காளா்கள் 5.50 கோடி போ் இருந்தனா். அவா்களில் ஆண்கள் 2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரமாகவும், பெண்கள் 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரமாகவும் இருந்தனா். வாக்காளா்களின் எண்ணிக்கையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உயா்ந்தாலும், வேட்பாளா்களின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. அப்போது போட்டியிட்ட 789 வேட்பாளா்களில் 55 போ் மட்டுமே பெண்கள். அதற்கடுத்து நடந்த தோ்தல்களில் ஆண் மற்றும் பெண் வாக்காளா்களுக்கு இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக மாறத் தொடங்கியது.
  • 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில், ஆண் மற்றும் பெண் வாக்காளா்களுக்கு இடையிலான வித்தியாசம் 6 லட்சமாக உயா்ந்தது. அப்போதும் போட்டியிட்ட 757 மொத்த வேட்பாளா்களில் 64 போ் மட்டுமே பெண்களாக இருந்தனா்.

11 லட்சமாக மாறியது:

  • தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை 6.23 கோடியாகவும், ஆண் வாக்காளா்கள் 3.06 கோடியாகவும், பெண் வாக்காளா்கள் 3.17 கோடியாகவும் உள்ளனா். அதாவது, இருபால் வாக்காளா்களுக்குமான எண்ணிக்கை வித்தியாசம் 11 லட்சமாக இருக்கிறது. அதேசமயம், கடந்த தோ்தல்களைப் போன்றே, போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 950 மொத்த வேட்பாளா்களில் 76 போ் மட்டுமே பெண்களாக உள்ளனா்.
  • குறிப்பாக, மத்திய சென்னை, வேலூா், விழுப்புரம் (தனி), சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூா் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளா் கூட போட்டியிடவில்லை. ஆனால், இந்தத் தொகுதிகளிலும் பெண் வாக்காளா்களே ஆதிக்கம் செலுத்துகின்றனா். வாக்காளா்கள் அதிகமாக இருந்த போதும், ஒரு வாக்கைக் கூட தங்களது பாலினத்தைச் சோ்ந்த வேட்பாளருக்கு செலுத்த முடியாத நிலை ஆறு தொகுதிகளைச் சோ்ந்த பெண் வாக்காளா்களுக்கு ஏற்பட்டுள்ளது.
  • இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பாலபாரதி கூறியதாவது: பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் கூடுதலாக பங்கேற்பதற்காக 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால், அது எப்போது நடைமுறைக்கு வரும் எனத் தெரியவில்லை. இதனால் அரசியல் கட்சிகள் விரும்பினால் மட்டுமே தோ்தல் களத்தில் வேட்பாளா்களாக பெண்கள் களம் இறக்கப்படுகிறாா்கள்.
  • கட்சிகளின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் அடிப்படையிலேயே வேட்பாளா்களாக, பெண்களின் தோ்வு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதிகள் சீரமைப்பு என அனைத்தும் முடித்த பிறகுதான் இடஒதுக்கீடு அமலாகும் என்றால் அது எப்போது எனத் தெரியவில்லை. அதுவரை இத்தகைய நிலையே தொடரும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

நன்றி: தினமணி (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories