TNPSC Thervupettagam

பெண்ணியப் பார்வையில் ஒரு தீர்ப்பு

February 3 , 2025 3 days 42 0

பெண்ணியப் பார்வையில் ஒரு தீர்ப்பு

  • சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23 அன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மூவர், அங்கு பணியாற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு அலுவலர் தங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக விசாகா குழுவில் புகார் அளித்துள்ளனர்.
  • பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை - தீர்வு) சட்டம், 2013இன்படி பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காகச் சில ஏற்பாடுகளைச் செய்வது கட்டாயம். விசாகா குழுப் பரிந்துரைகளின்படியான ‘உள் விசாரணைக் குழு’ அமைத்தல் அவற்றில் ஒன்று.

அசெளகரியத்தை ஏற்படுத்துதல்:

  • அந்த வகையில் மேற்கண்ட தகவல் தொழில்​நுட்ப நிறுவனத்​திலும் விசாரணைக் குழு செயல்​படு​கிறது. அங்கு பாதிக்​கப்பட்ட பெண்கள் மூவரும் புகார் அளித்​துள்ளனர். இதை விசாரித்த குழு, குற்றம் இழைக்​கப்​பட்டது உண்மை என்ற முடிவுக்கு வந்தது. அந்த அடிப்​படை​யில், குற்றம் இழைத்த அலுவலருக்கு இரண்டு ஆண்டு​களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று நிர்வாகத்​துக்குப் பரிந்​துரை செய்தது.
  • இதை எதிர்த்து, அந்த அலுவலர் சென்னையில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்​றத்தை நாடினார். ‘தனது தரப்பை விளக்கப் போதுமான வாய்ப்பு வழங்கப்​பட​வில்லை’ என்பது அவரது வாதம். இதையடுத்து, விசாகா குழு அறிக்கையைத் தொழிலாளர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதை எதிர்த்த அந்தத் தகவல் தொழில்​நுட்ப நிறுவனம், சென்னை உயர் நீதிமன்​றத்தை நாடியது.
  • இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பெண் ஊழியர்​களின் பின்னால் நின்று​கொண்டு தொட்டுப் பேசுவது, கைகுலுக்கக் கட்டாயப்​படுத்துவது, உடைகளின் அளவுகளைக் கேட்பது என்று அந்த அலுவலர் தொந்தரவு கொடுத்​திருக்​கிறார். மேலாளர் என்கிற முறையில் கண்காணிக்கவே இவ்வாறெல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது.
  • பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசௌகரி​யத்தை ஏற்படுத்துவது, விரும்பத்தகாத செயல்​களைச் செய்வது ஆகியவைகூட, பாலியல் துன்புறுத்​தல்​கள்​தாம். எனவே, விசாகா குழுவின் பரிந்துரை செல்லும்’ என்று தீர்ப்பு அளித்தது.
  • அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி மஞ்சுளா, ‘பணித்​தளத்தில் பெண்கள் ஒரு நடத்தையை எப்படி உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம். துன்புறுத்​துபவரின் நோக்கங்​களைப் பார்க்க வேண்டிய​தில்லை’ என்று குறிப்​பிட்​டார்.
  • இந்த நடைமுறைகள் எல்லாம் சட்டப்​படியாக இருந்​தா​லும்கூட, ஓர் உளவியல் பின்னணியும் இதில் உண்டு. ‘நீங்கள் எந்த நோக்கில் என்னைப் பின்தொடர்ந்​தா​லும், அது எனக்கு வசதி குறைவாக இருக்​கிறது’ என்று ஒரு பெண் சொல்லி​விட்​டால், அது மதிக்​கப்பட வேண்டும். ‘நான் யதார்த்​த​ மாகத்தான் நடந்து​கொண்​டேன்’ என்று எவரும் சப்பைக்​கட்டு கட்ட முடியாது.

பாதிக்​கப்​பட்​ட​வரின் கோணம்...

  • இயற்கை​யாகவே பெண்கள் கூர்மையான உள்ளுணர்வு கொண்ட​வர்கள். ரயிலில், பேருந்​தில், கூட்டமாக மக்கள் திரளும் இடங்களில் ஒரு சிறிய தீண்டல், ஒரு வக்கிரப் பார்வை, ஒரு சிறிய அணுகல்கூட, அவர்களுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து​விடும். அதனால்​தான், தங்களுக்கு வசதிப்பட்ட இடத்தை நோக்கி அவர்கள் நகர முயல்வர். அசௌகரி​யத்தின் அளவு அதிகரிக்​கும்போது அது எதிர்ப்பாக உருவாகிறது. இந்த உள்ளுணர்வும் பாதுகாப்பு உணர்வும் மதிக்​கப்பட வேண்டும்.
  • அந்தப் பார்வை​யில்தான் பணியிடத்தில் பாலியல் தொந்தர​வு​களைத் தடுக்கும் சட்டம் உருவாக்​கப்​பட்டது. பாதிக்​கப்​பட்​ட​வரின் கோணத்தில் இருந்து பிரச்​சினையைப் பார்க்கும் தன்மை (Empathy) இந்தச் சட்டத்​துக்கு இருக்​கிறது. இச்சட்​டத்தைக் கையாளும் அனைவரும் அதே பார்வை​யுடன் இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்து​கிறது.

தொழிலாளர் சட்டம்:

  • இப்போது அந்த அலுவலரின் பார்வையி​லிருந்து இப்பிரச்​சினையைப் பார்க்​கலாம். அவர் ஒரு தொழிலாளி. எனவே, தனது தொழில்​ரீ​தியிலான பிரச்​சினையை (விசாகா குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையை எதிர்த்து) தொழிலாளர் நீதிமன்​றத்​துக்கு எடுத்​துச்​சென்​றார்.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து, அவர்களின் கண்ணி​யத்​தையும் பாதுகாப்​பையும் உறுதி​செய்யச் சில சட்டங்கள் எப்படி இருக்​கின்​றனவோ, அதேபோலத் தொழிலா​ளர்​களின் பக்கம் நின்று, அவர்களுக்கான சட்டப்​படியான உரிமைகளை நிலைநாட்ட தொழிலாளர் சட்டங்கள் போராடு​கின்றன.
  • ‘தொழிலா​ளர்​களின் உரிமையும் மனித உரிமை​தான்’ என்ற கோணத்தில் தற்போது விரிவான பொருளில், உலகளாவிய அளவில் ஒரு பார்வை உருவாகி​யிருக்​கிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்​திலும் காணப்​படும் அடிநாதம் - ‘தொழிலாளி ஒருவர் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்​கப்​பட்​டாலும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனது தரப்பை விளக்க அவருக்குப் போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்பது​தான். சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு தொழிலாளர் வழக்கு​களில் இது அடிக்​கோடிட்டுக் காட்டப்​பட்​டிருக்​கிறது.
  • ஒரு தொழிலா​ளியின் பின்னால் அவரது குடும்பம், பொருளா​தாரம், சமூகத்​தகைமை என்று எல்லாமே இருக்​கிறது என்பதுதான் தொழிலாளர் சட்டங்களை இயற்றிய அம்பேத்​கரின் கரிசனப் பார்வை. ஆனால், இதை ஒருவர் பொது நீதிக்கு எதிராகப் பயன்படுத்​திவிட முடியாது. அதேபோல, சமூகத்தின் குறிப்​பிட்ட பிரிவினருக்கான சட்டங்களை ஒன்றுக்​கொன்று எதிராகவும் நிறுத்த முடியாது. எடுத்​துக்​காட்டாக, பெண்களுக்கான சட்டங்​களைத் தொழிலாளர் சட்டங்​களுக்கு எதிராக நிறுத்த முடியாது.

பொன் விதி:

  • தொழிலா​ளர்​களுக்கான சட்டங்​களில்​கூடப் பெண்கள், கர்ப்​பிணிகள், சிறு குழந்தை​களுடன் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் ஆகியோரின் நலனுக்​காகச் சிறப்புப் பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்​கிறோம். அதேபோல, பெண்களுக்கான சட்டங்கள் - தொழிலாளர் சட்டங்கள் என்கிற இரண்டில் எது மேலானது (prevailed) என்கிற கேள்வியும் இங்கு எழுப்​பப்பட முடியாது. எனவேதான், தொழிலாளர் உரிமை என்ற சொல்லின் பின்னால் பாலியல் துன்புறுத்தல் குற்றம்​சாட்​டப்பட்ட ஒருவர் ஒளிந்​து​கொள்ள முடியாது என்பதை உயர் நீதிமன்றம் பட்டவர்த்​தனமாக எடுத்​துரைத்​திருக்​கிறது.
  • விசாரணைக் குழுவாக இருந்​தாலும் சரி, தொழிலாளர் சட்டங்​களின்​படியிலான விசாரணையாக இருந்​தாலும் சரி... குற்​றம் சாட்​டப்​பட்​ட​வருக்குத் தனது தரப்பை விளக்கப் போதுமான வாய்ப்புகள் தந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக்​கருத்து இல்லை. அது உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்​பட்​டாலும் இதுதான் பொன் விதி.
  • ஆக, குறிப்​பிட்ட வழக்கில் தன் தரப்பை விளக்கப் போதுமான வாய்ப்பு​களைத் தரவில்லை என்று அந்த அலுவலர் முறையிடலாமே ஒழிய, ‘நாங்கள் அசௌகரியமாக உணர்கிறோம்’ என்று பெண் ஊழியர்கள் சங்கடப்​படும் அளவுக்குப் பணியாற்றவோ கண்காணிக்கவோ எவ்வித உரிமையும் அவருக்கு வழங்கப்பட மாட்டாது.
  • எனவே, எந்தச் சட்டங்​களின்படி பார்த்​தாலும் சரி, உளவியல், சமூகவியல் பார்வையில் பார்த்​தாலும் சரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துல்லியமான ஒரு தீர்ப்பை வழங்கி​யிருக்​கிறார். இனிவரும் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றமிழைப்போர் எவ்விதமான சட்டங்​களின் நிழலிலும் ஒளிந்​து​ கொள்ள முடியாது.
  • சட்டங்களை வெறும் சொற்களாகப் புரிந்​து ​கொண்டு கையாளாமல் அவற்றின் நோக்கத்தை, ஜீவனை, ரத்தமும் சதையு​மாகப் புரிந்​து​கொள்​ளும்​போதுதான் நீதியின் கதவுகள் முழுமை​யாகத் திறக்​கின்றன. அதற்கு இந்தத் தீர்ப்பு சரியான உதாரணம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories