TNPSC Thervupettagam

பெண் எனும் போர்வாள் – 24 : ஆடை என்னும் தன்மான ஆயுதம்

March 31 , 2024 271 days 401 0
  • தென்னிந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்துக்காகவும் சமத்துவத் துக்காகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முதன்மையானது ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்காக நடத்தப்பட்ட ‘சாணார் புரட்சி’ எனப்படும் ‘தோள்சீலைப் போராட்டம்’. இது ‘மேல்சீலைக் கலகம்’ எனவும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • சாதித் தூய்மைவாதம் பேசுவோர் எல்லாக் காலத்திலும் உண்டு. தோள்சீலைப் போராட்டத்தையும் அவர்கள் அப்படித்தான் அணுகுகிறார்கள். ஐரோப்பியர்களின் பயணக் குறிப்பை முன்வைத்து பொ.ஆ.(கி.பி) 1600களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனைத்துச் சாதிப் பெண்களும் மேலாடை அணிந்திருக்கவில்லை; அதனால் ஆடை தொடர்பான ஒடுக்குமுறைக்கும் அங்கே இடமில்லை என மிகச் சொற்பமானோர் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வறட்டுவாதம் என்பதைத்தான் வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்து கின்றன.

முதல் உரிமைக்குரல்

  • 1600களில் பெண்கள் அனைவரும் மேலாடையின்றி இருந்திருக்கக்கூடும். சிக்கல் அதுவல்ல. அதன் பிறகு 200 ஆண்டுகள் கழித்தும் அனைவரும் மேலாடையின்றி இருந்தார்களா என்பதுதான் போராட்டத்துக்கான வித்து. பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான, சாதியப் பாகுபாட்டுக்கான களமாகப் பயன்படுத்துகிறபோதுதான் அது சமூக நீதிக்கு எதிரானதாக மாறுகிறது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிறிஸ்துவ மிஷனரிகள் திருவிதாங்கூருக்கு வருகை தந்தபோதே, சாதிய ஒடுக்குமுறை லேசாக ஆட்டம் காணத் தொடங்கியது.
  • கேரள – தமிழக எல்லையில் உள்ள வடக்கன்குளத்தில் சாணார் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 1680இல் ரவிக்கை அணிந்த முதல் பெண் என அறியப்படுகிறார். அவர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதால்தான் இப்படிக் கௌரவமாக உடை உடுத்த முடிகிறது என்பதால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மேலும் சில பெண்களும் மதம் மாறினர்; மேலாடை அணிந்தனர். இது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததால் அன்றைக்குப் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், சாதிய ஒடுக்குமுறைகள் கோலோச்சிய 19ஆம் நூற்றாண்டில் ஆடை என்பது ஒடுக்கப்பட்டோரின் கண்ணியத்தோடு நேரடித் தொடர்பில் வைக்கப்பட்ட சூழலில் மக்கள் உரிமைக்குரல் எழுப்பத் தொடங்கினர்.

வரலாற்றுக் களங்கம்

  • அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பெண்கள் மட்டும் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாகவும் இழிவாகவும் அந்தப் பெண்களும் அவர்களைச் சார்ந்த ஆண்களும் கருதினர். பிற சமூகத்தினரைப் போல் தாங்களும் கௌரவமான ஆடை அணிய வேண்டும் என்பதற்காகச் சாணார் பெண்களும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களும் மதம் மாறினர். இது ஆதிக்கச் சாதியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அப்போதைய பிரிட்டிஷ் திவான் ஜான் முன்றோ, ‘கிறிஸ்துவ சாணார் பெண்கள் மேலாடை அணியலாம்’ என்கிற உத்தரவைப் பிறப்பித்தார். பாகுபாடு இல்லாமல் இப்படி அனைவரும் மேலாடை அணிவதால் தங்கள் சாதித் தூய்மை கெட்டுவிடும் எனத் திருவிதாங்கூர் மன்னரின் அரசவை உறுப்பினர்கள் வாதிட, திவானின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
  • பொ.ஆ.1813 தொடங்கி 1859 வரை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் ஒடுக்கப்பட்ட பெண்கள் போராட்டங்களை முன்னெடுத் துள்ளனர். கிறிஸ்துவ சாணார் பெண்கள் மேலாடை அணியலாம் என திவான் உத்தரவிட்டபோதே தோள்சீலைப் போராட்டம் தொடங்கிவிட்டது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், 1822இல் கல்குளம் சந்தையில் அரங்கேறிய வன்முறைகளைத் தொடர்ந்தே தோள்சீலைப் போராட்டம் சூடுபிடித்ததாகவும் சொல்கிறார்கள். ஆதிக்கச் சாதியாகத் தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் கல்குளம் பகுதியில் ஒடுக்கப்பட்ட பெண்களின் மேலாடையைக் கிழித்தெறிந்து ஆண்களை அடித்து உதைத்து அங்கிருந்த கிறிஸ்துவ தேவாலயத்தையும் தீக்கிரையாக்கினர். ஒடுக்கப்பட்டவர்கள், ஆதிக்கச் சாதியினரைத் திருப்பித் தாக்க பெரும் கலவரம் மூண்டது. இதில் அப்போதைய மதராஸ் மாகாண கவர்னர், ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். அப்படியும் நிலைமை சீரடையவில்லை. 1822இல் நடைபெற்ற இந்தக் கொடூரம், பெண்ணுடல் மீது எழுதப்பட்ட மற்றுமொரு வரலாற்றுக் களங்கம்.

நாம் நாகரிக மனிதர்களா?

  • 1859இல் சீர்திருத்தவாதிகள் பலர் தலைமையில் மீண்டும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். சாதியக் கட்டுமானத்தின் கோரத்தாண்டவத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய மதராஸ் கவர்னர் திருவிதாங்கூர் பிரிட்டிஷ் அதிகாரிக்கு இப்படி எழுதுகிறார்:
  • ‘இதில் நாம் தீவிரமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாகரிக உலகம் நம்மை இழிவாகப் பேசும். பழைய ஆணைகள் இந்த நாளுக்குப் பொருந்தாது, அது பண்பட்ட அரசனுக்கு ஏற்புடையதல்ல எனத் திருவிதாங்கூர் மன்னருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.’
  • சக மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதுதான் நாம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான சான்று. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கான போராட்டத்தை மனித உரிமைக்கான போராட்டமாகவும் சமூக மாற்றத்துக்கான போராட்டமாகவும் அந்தப் பெண்கள் மாற்றினர். இந்தப் போராட்டத்தில் சாணார் பெண்களே பெரும்பங்கு வகித்ததால் அவர்கள் பெயராலேயே போராட்டம் அறியப்படுகிறது.
  • கிறிஸ்துவ மத மாற்றம் நடைபெற்றதும் இந்தக் காலக் கட்டம்தான் என்பதால் இந்தப் போராட்டத்துக்கு மதச்சாயம் பூசும் நச்சுவேலையும் வரலாறு நெடுக நடந்திருக்கிறது. எந்தவோர் அமைப்பு தங்கள் உரிமைகளை நசுக்குகிறதோ அதிலிருந்து விலகி, தங்களுக்கு உகந்த, தங்களது உரிமைகள் பேணப்படுகிற அமைப்பிற்குள் நுழைவது நாகரிக சமூகத்தின் இயல்பு. அப்படித்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் கண்ணியத்தைக் காக்க மதம் மாறினார்கள். இங்கே அவர்கள் மதம் மாறியது முதன்மையல்ல; எதற்காக மதம் மாறினார்கள் என்பதைத்தான் ஆராய வேண்டும்.

நங்கேலியின் கதை

  • ‘தோள்சீலைப் போராட்டம்’ தொடர்பாக வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் கதை ஒன்று உண்டு. அது வீரம்செறிந்த ‘நங்கேலி’யின் கதை. 1800களில் கேரளத்தில் சேர்த்தலயில் ஆதிக்கச் சாதியினரின் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சாமல் ‘முலைவரி’ செலுத்த மறுத்ததோடு மேலாடை அணிந்த வீரப்பெண் நங்கேலி. அவரிடம் வரி வசூலிக்க அதிகாரிகள் வந்தபோது வரி செலுத்த மறுத்துத் தன் மார்பை அறுத்து வாழையிலையில் வைத்து, “இதை உங்கள் மகாராஜாவிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு மாண்டு போனதாகச் சொல்லப்படுகிறது. மனைவி இறந்த துயரம் தாளாமல் நங்கேலியின் கணவன் சிறுகண்டன் மனைவியின் சிதையில் பாய்ந்து உயிர் துறந்ததாகச் சொல்லப்படுகிறது. உடன்கட்டை ஏறிய முதல் ஆண் எனவும் சிறுகண்டன் அறியப்படுகிறார். நங்கேலியின் வீரத்தை நினைவுகூரும் வகையில் அவள் வசித்த பகுதி ‘முலைச்சிபரம்பு’ என அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
  • இதே போன்றதொரு கதை புறநானூற்றிலும் இருக்கிறது. தன் மகன் போரில் புறமுதுகிட்டு ஓடியது உண்மை எனத் தெரிந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன் எனச் சபதமிட்ட வீரத்தாயின் கதை அது.
  • ‘மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலை அறுத்திடுவென், யான்’ என்று கையில் அரிவாளுடன் போர்க்களம் புகுந்த புறநானூற்றுத் தாயை எளிதாக ஏற்றுக்கொள்ளும் பலரும் ‘முலைவரி’ செலுத்த மறுத்துத் தன் மார்பை அரிந்த நங்கேலியின் கதையை வெறும் புரட்டு எனப் புறந்தள்ளுகின்றனர்.
  • இரண்டு கதைகளிலும் பெண்கள் தங்கள் மார்பை அறுத்துக்கொள்வதுதான் மையம். சங்க இலக்கியப் பெண் கொண்டாடப் படுகையில் திருவிதாங்கூர்ப் பெண் ஏன் புறக்கணிக்கப் படுகிறாள்? காரணம், நங்கேலி சங்க இலக்கியப் பெண்ணைப் போல ஆண் மகனின் வீரத்தை உணர்த்த மார்பை அறுத்துக்கொள்ளவில்லை. பெண்ணுடல் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடு அது. போராளிகளுக்குக் காலந்தோறும் மரணத்தையும் அவப்பெயரையும்தானே பரிசளித்துவருகிறோம் நாம்? ஆனால், நங்கேலிகள், மறைக்கப்படும் வரலாற்றை உணர்த்தியபடி நிகழ்காலத்தில் நம்மோடு பயணித்தபடியே இருப்பார்கள்.
  • மேலாடை அணியும் உரிமையைப் பெண்கள் போராடிப் பெற்றனர். ஆனால், பெண்கள் மேலாடை அணிந்துதான் ஆகவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதும் இங்கே நடக்கிறது. அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories