TNPSC Thervupettagam

பெண் சிசுக்கொலை இனியும் தொடரக் கூடாது!

March 10 , 2020 1772 days 1359 0
  • இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துவருகிறது. கருக்கலைப்பும் சிசுக் கொலையும் இதற்கு முக்கியமான காரணங்கள். மனிதகுலத்தின் மாபெரும் சறுக்கல் என்றால், அது பெண் குழந்தைகளைக் கருவிலேயே அடையாளம் கண்டு அழிப்பதுதான். பெண் குழந்தைகளைக் கொல்லக் கூடாது, பாலின வேறுபாடு கூடாது என்று எவ்வளவோ பிரச்சாரங்கள் செய்தும்கூட இன்னும் பலர் பழைய கண்ணோட்டத்துடன் இருப்பது மிகப் பெரும் சமூக அவலம்.
  • தமிழ்நாட்டின் உசிலம்பட்டி அருகில் செக்கானூரணி என்ற ஊரில் சமீபத்தில் நடந்துள்ள பெண் சிசுக் கொலை மிகவும் கொடுமையானது. பிறந்து 31 நாட்களே ஆன பெண் சிசுவுக்கு விஷத்தைக் கொடுத்துக் கொன்றதற்காக அதன் இளம் பெற்றோர்களும் தந்தைவழி தாத்தாவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெண் சிசுக் கொலை

  • மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்தப் பழக்கம் மறைய வேண்டும் என்பதற்காகத்தான் ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ கொண்டுவந்தார். பெண் குழந்தைகளை வளர்க்கத் திராணியற்றவர்கள் இந்தத் திட்டத்தையாவது பயன்படுத்திக்கொள்ளலாம். மாறாக, தங்களுடைய பிள்ளைகளைத் தங்களுடைய கைகளாலேயே கொன்றுவிடும் பாதகம் தொடர்வது வேதனைக்குரியது.
  • 2007-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 903 பெண் குழந்தைகளாக இருந்தது, 2016-ல் 877 ஆகக் குறைந்துவிட்டது. நான்கு மாநிலங்களில் பாலின விகிதம் 840-க்கும் குறைவாகவே இருக்கிறது. ஆந்திரம், ராஜஸ்தான் இரண்டிலும் 806, பிஹாரில் 837, உத்தராகண்டில் 825, தமிழ்நாட்டில் 840. பிறந்த குழந்தைகளைக் கொல்வது குறைந்திருக்கிறது என்றாலும் கருவில் இருக்கும்போது ஸ்கேன்செய்து கண்டறிந்து, அது பெண் கரு என்று தெரிந்தால் அழித்துவிடுவது தொடரத்தான் செய்கிறது.

நடைமுறையில் உள்ள சட்டம்

  • கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று ஸ்கேன்செய்து தெரிவிக்கக் கூடாது; கருவில் இருக்கும் பெண் குழந்தையை அழிக்கக் கூடாது; மீறினால் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் இயற்றிய பிறகும்கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு உடந்தையாக இருக்கும் மருத்துவமனை, ஸ்கேன் மைய ஊழியர்களைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்; அவர்களுடைய உரிமம் ரத்துசெய்யப்பட வேண்டும்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்

  • பெண் குழந்தையைக் காக்கும் திட்டத்தில் முன்னோடியான தமிழகத்திலேயே 2011-க்குப் பிறகு பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருவது கவலையளிக்கிறது. பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பத்தை அரசு கையாள வேண்டும். வட்டார அளவில் கர்ப்பிணிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அளிப்பதுடன், கருத்தரித்ததில் தொடங்கி ஒரு ஆண்டு வரை அவர்களுடைய மகப்பேறு, அதற்குப் பிந்தைய குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • ஆண் குழந்தைகள்தான் வேண்டும்பெண் குழந்தைகள் வேண்டாம் என்ற மனப்போக்கு நல்லதல்ல. ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் இதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே இந்த அவலம் நீங்கும். தண்டனைகள் வழங்குவதால் மட்டும் இதைத் தடுத்துவிட முடியாது; மக்களுக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு அணுகுமுறைகள் மாற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories