- நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பின் காலாண்டுத் தரவுகளின்படி (ஜனவரி - மார்ச்), உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. 2022 – 23ஆம் ஆண்டின் காலாண்டுக் கணக்கெடுப்பு முடிவோடு (22.7%) ஒப்பிடுகையில், 2023 - 24இல் 25.6% ஆக அதிகரித்துள்ளது.
- கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட காலம் (2017-18) முதல் பதிவாகியிருக்கும் பெண்களின் அதிகபட்சப் பங்களிப்பும் இதுதான். 2022 முதல் வேலையில்லாப் பெண்களின் விகிதம் குறைந்துவருவதும் பெண்களின் தொழில் துறைப் பங்களிப்பு அதிகரித்துவருவதை மறைமுகமாக உணர்த்துகிறது. ஆனால், ஆண்களோடு ஒப்பிடுகையில் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு என்கிற அளவில்தான் இருக்கிறது. பாலினப் பாகுபாடு அதிகமாக நிலவும் இந்தியா போன்ற நாடுகளில் உழைப்புச் சந்தையில் ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்களிப்பதில் இருக்கும் சிக்கல்களையும் இந்தக் கணக்கெடுப்பு உணர்த்துகிறது.
- மாத ஊதியம் பெறுகிற - முறைப்படுத்தப்பட்ட - பணிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 54.2%இலிருந்து (2022-23) 52.3%ஆகக் (2023-24) குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. அதேநேரம், சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 2022-23இல் 38.5% ஆக இருந்தது, தற்போது 41.3%ஆக அதிகரித்துள்ளது. ஊதியமற்ற வீட்டுப் பணிகளில் ஈடுபடும் பெண்களும் இதில் அடக்கம். முறைப்படுத்தப்பட்ட பணிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைவதும் ஊதியமற்ற வீட்டுப் பணிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை உயர்வதும் பெண்களுக்கான பணிவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் நிலவும் வீழ்ச்சியையே காட்டுகின்றன. ஒருபுறம் உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிரித்துவரும் நிலையில், மறுபுறம் அவர்களது பணி வாய்ப்புகளுக்கான கதவுகள் மூடப்பட்டே கிடக்கின்றன. இது பெண்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் போதுமான அளவுக்குக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
- இருபதுகளின் மத்தியில் இருக்கும் பெண்களின் பணிப் பங்களிப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. திருமணம், குடும்பப் பொறுப்பு, வீட்டு வேலைகள் ஆகியவை இதற்கு முதன்மைக் காரணங்கள். இவற்றை மீறி வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்கு ஆணுக்கு நிகரான ஊதியமும் கிடைப்பதில்லை.
- கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முறைப்படுத்தப்பட்ட வேலைக்குச் செல்லாமல், சுயதொழிலிலும் ஊதியமற்ற வீட்டு வேலைகளிலும் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கல்வித் தகுதி, தொழில் சார்ந்த தொழில்நுட்ப அறிவு போன்றவற்றுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பெண்களுக்கு உகந்த வேலை நேரத்தை அமைத்துக் கொடுக்காமல் நிறுவனங்கள் காட்டும் கறார்தன்மையே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
- பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்த பெண்களின் வீட்டுவேலைகளும் அவை தொடர்பான குடும்பச் சுமைகளும் பெண்களை வெளி வேலைக்குச் செல்ல முடியாத வகையில் ஆக்கிவிட்டன. அதைக் கருத்தில்கொண்டு, நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை நேரத்தில் தளர்வை ஏற்படுத்துவதோடு, அவர்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை அமைத்துத்தரவும் முன்வர வேண்டும். சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறபோது, பெண்களையும் உள்ளடக்கியதாக அவை அமைய வேண்டும். முறைப்படுத்தப்பட்ட பணி வாய்ப்புகளை அரசு அதிக எண்ணிக்கையில் உருவாக்குகிறபோது, உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். ஊதியமற்ற வீட்டுப் பணிகளில் பெண்களின் உழைப்பு வீணாக்கப்படுவது குறைக்கப்பட்டு, அவர்களது சமூகப் பங்களிப்பு அதிகரிப்பதற்கான வழியையும் அது உருவாக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 06 – 2024)