பெண் நீதிபதிகளின் பணிப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்
- மத்தியப் பிரதேசத்தில் ஆறு சிவில் பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், “நீதித் துறையில் பணித்திறனை அளவிடுவதற்கான அளவுகோலை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக வைத்திருக்கிறோமா? ஆண்களுக்கும் மாதவிடாய் வந்தால்தான் பெண்களின் நிலையை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்திருப்பது, பணிச்சூழலில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
- புரொபேஷன் காலத்தில் சரியாகப் பணியாற்றத் தவறியதாகக் கூறி, ஆறு சிவில் பெண் நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்ய, கடந்த 2023 ஜூன் மாதம் மத்தியப் பிரதேச அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், ஆறு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- இந்த வழக்கைத் தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை ஜூலை 2024இல் கேட்டுக்கொண்டது. அது சார்ந்த முடிவை நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
- அதன் அடிப்படையில் நீதிபதிகள் அதிதி குமார், சரிதா சௌத்ரி தவிர நான்கு பேர் சில நிபந்தனைகளோடு பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். நீதிமன்றப் பணித்திறன் மதிப்பீட்டின்படி ‘சிறப்பாக’, ‘வெகு சிறப்பாக’ பணியாற்றிய அதிதி குமார், கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் ‘சுமாரா’கவும் ‘மோசமா’கவும் பணியாற்றியதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்தது. நிறைய வழக்குகளை அவர் நிலுவையில் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
- அதற்குப் பதிலளித்த அதிதி குமார், தனக்கு அந்த நேரத்தில் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். தவிர, அப்போது தன் சகோதரர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். இந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்ளாத மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவரைப் பணிநீக்கம் செய்தது.
- இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான இருவர் அமர்வு, நீதிபதிகளின் பணித்திறனை அளவிடுவதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டியது. “நாம் எதற்கெடுத்தாலும் ‘பணிநீக்கம்.. பணிநீக்கம்’ என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
- கருவுறுதலும் கருச்சிதைவும் ஒரு பெண்ணின் உடல், மனநலனை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை நாம் ஏன் கருத்தில் கொள்வதில்லை? ஆண்களுக்கும் இதே போன்ற அளவுகோலை நாம் வைத்திருக்கிறோமா? இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கக்கூட இவ்வளவு காலம் ஆகிவிட்டது.
- அதற்காக நாங்கள் ‘மெதுவாக’ வேலை செய்வதாகக் கூற முடியுமா? ஒருவரது புற, அகச் சூழலைப் புரிந்துகொள்ளாமல், ‘நீங்கள் மெதுவாக வேலைசெய்கிறீர்கள்.. வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்று சொல்லும் உரிமையை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு யார் கொடுத்தது?” என நீதிபதி பி.வி.நாகரத்னா எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை.
- நீதியைப் பரிபாலனம் செய்யும் இடத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த நிலை என்கிறபோது சிறு, குறு நிறுவனங்களிலும் முறைசாராப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் பெண்களின் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.
- தவிர, நீதிமன்றத்தில் வழக்குகள் தாமதமாவதற்கு நீதிபதியின் ‘வேகத்தை’ மட்டுமே குறைகூற முடியாது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பல ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதியை மட்டும் குற்றம்சாட்டுவது முறையல்ல. வழக்குகளைப் பிற வேலைகளைப் போல இயந்திரத்தனமாக முடித்துவிடவும் முடியாது.
- இப்படியொரு சூழலில், தீர்ப்புகளை விரைந்து வழங்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பைத் தரம் உயர்த்த வேண்டுமே தவிர, பெண் நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்வது தீர்வாகாது. நீதிபதிகளின் பணிப் பாதுகாப்பை நீதிமன்றங்களும் அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 12 – 2024)