பெண் வாழ்வுதனைப் பேசிய படைப்பாளி
- இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழக பிராமணக் குடும்பங்களில் ஆசாரம் என்ற பெயரில் நிறைய பழைமைவாதங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. கையெழுத்துப் போடும் அளவுக்கு மேல், பள்ளி செல்லவும் உரிமையில்லை. அத்தகையதொரு குடும்பத்தில் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்.
- புகுந்த வீடும் மிகப்பெரிய கூட்டுக் குடும்பம். சலிப்பூட்டும் தொடர்ச்சியான வீட்டுப் பணிகளுக்கு இடையில் ஒரே ஆசுவாசம் வீடு தேடிவரும் பல்வேறுபட்ட பத்திரிகைகள். புதிய சிந்தனைகள் அவருக்குள் உருப்பெற வாசிப்பு அனுபவம் பேருதவியாக இருந்தது. தனது சிந்தனை எழுச்சியில் எழுந்த பெண் வாழ்வுதனைப் படிப்படியாக எழுதவும் தொடங்கினார். நூற்றாண்டு காணும் பெண்ணியப் படைப்பாளியாக உயர்ந்தார்!
கள ஆய்வும் எழுத்தும்:
- சிறுகதைகள் மூலமே அவரின் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. பின்னால் நாவல் எழுத்தாக மாறியது. புனைவு, அபுனைவு என இரு வகைகளிலும் தன் குரலை அழுத்தமாகப் பதிவுசெய்தவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ‘மித்ரா’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள், சிறுவர்களுக்கான படைப்புகள் என்று அனைத்துத் தளங்களிலும் காத்திரமாக இயங்கியவர்.
- அவரின் பெரும்பாலான படைப்புகள் மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாகவும் விலகியவர்களாகவும் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததுடன், அவர்களின் அவல வாழ்க்கையையும் பேசின. கள ஆய்வு முறையிலான எழுத்து வடிவத்தைத் தமிழில் தொடங்கி வெற்றி பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
- ஆனால், இம்முறையை அப்போதைய எழுத்தாளர்கள் பலரும் கடும் விமர்சனத்துக்கு உள்படுத்தினார்கள். அடித்தட்டு மக்கள் குறித்த ஓர் ஆழ்ந்த பார்வை அவரிடம் இருந்தது. இதற்கான தேடலாகவே அவரது எழுத்துப் பயணமும் இருந்துள்ளது.
- நீலகிரி மலைப்பகுதியில் வாழும் படுகர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்து நீண்ட ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட நாவல் ‘குறிஞ்சித்தேன்’. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஐந்து குறிஞ்சிப் பருவங்களில் - அதாவது 60 ஆண்டுகளில் - நவீன வாழ்க்கை முறை தரும் நெருக்கடிகளால் உந்தப்பட்டுப் பாரம்பரிய விவசாய முறையைக் கைவிட்டுத் தங்கள் சிறு நிலங்களில் தேயிலை பயிரிட நேர்ந்த அவலத்தையும் பொருளாதார வாழ்க்கை முறையுடன் அது அவர்களின் பண்பாட்டு வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குவதையும் 1960களின் தொடக்கத்திலேயே பதிவுசெய்துள்ளார்.
உண்மையை வெளிக்கொணர்ந்த படைப்புகள்:
- தூத்துக்குடி மீனவர்கள் - குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையை உப்பளத் தொழிலின் பின்னணியில் ‘கரிப்பு மணிகள்’ என்ற நாவலாக எழுதியவர் இவர். இடிந்தகரை, மணப்பாடு அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் அரியவகை சுறா மீன்களை அதிகம் கொண்டவை. சுறாவின் துடுப்பும் வாலும் தூவி என அழைக்கப்படும்; இவை மிகவும் விலை உயர்ந்தவை; அப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கழிவுப்பொருள் என்ற பெயரில் தூவியைப் பெற்று தேவாலயங்கள் ஏற்றுமதி செய்து பணமாக்கிக்கொண்டதால் மீனவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் 1970களிலேயே ‘அலைவாய்க் கரையில்’ நாவலில் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்தவர்.
- மீனவ மக்களுக்கும் தேவாலயங்களுக்கும் இடையே ஏற்படும் தூவிப் பங்கு தொடர்பான பிரச்சினையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அங்கு நுழைந்து, மீனவ மக்களிடையே கலவரம் ஏற்படுத்த முயல்வது குறித்தும் பேசும் இந்த நாவல், 1960களில் அப்பகுதியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
- தன் கணவரின் பணியிட நிமித்தமாகவும், நாவல்களுக்கான களங்களையும் தேடிய அவரது பயணங்கள் அவரது அரசியல் பார்வையை விரிவுபடுத்தியதோடு அவர் மீது தாக்கம்செலுத்தவும் செய்தன. குறிப்பாக, கோவா விடுதலைப் போராட்டம் குறித்து அறிவதற்கான தேடலில் ஈடுபட்டபோது (‘வளைக்கரம்’ நாவல்) அகிம்சைத் தத்துவத்தால்தான் நாடு விடுதலை பெற்றது என்ற கூற்று அவருக்கு முழுமையாகப் படவில்லை.
- நாட்டு விடுதலையில் ஆயுதங்களுக்கும் வன்முறைக்கும் பங்கிருந்ததையும் உணர்ந்தார். உண்மையான சத்தியாக்கிரகம், காந்தியடிகள் கூறிய அகிம்சை வழி கைகூடாத கனவா என்ற சிந்தனைவசப்பட்டு அவர் மேற்கொண்ட சுய ஆய்வே ‘வேருக்கு நீர்’ நாவலாக வெளிப்பட்டது. இந்நாவல் ராஜம் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்தது.
- அடித்தட்டுப் பெண்கள் மட்டுமல்லாமல், தன்னைப் போன்று எழுத்து, ஆய்வுப்புலம் என்றிருக்கும் ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி அவர் படைத்த நூல் ‘தோட்டக்காரி’. மூச்சு முட்டும் வீட்டுப் பணிகள், அடுப்பங்கரையைத் தாண்டி வந்துதான் தன் எழுத்தைப் பற்றிப் பெண்கள் சிந்திக்கவே முடியும்.
- இல்லத்தரசியான எழுத்தாளப் பெண் சொந்தக் குடும்பத்தினராலும் சக உறவுகளாலும் சமூகத்தாலும் எவ்வாறு பார்க்கப்படுகிறாள்? அவள் எழுத்து அங்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது? இத்தனை தடைகளையும் மீறி அவள் எவ்வாறு தன் எழுத்தின்வழி புகழ் பெறுகிறாள் என்பதையும் மிக நுட்பமாக எழுதிய நாவலே ‘தோட்டக்காரி’. பிற நாவல்கள் அளவுக்கு இந்நூல் பிரபலமாகவில்லை என்பதும் பேசப்படவில்லை என்பதும் துயரம்!
மணியம்மாள் சரிதம்:
- ராஜம் கிருஷ்ணனைப் பற்றி அடிக்கடி நலம் விசாரிப்பவர் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. நான் அவரைச் சென்று சந்திக்கும்போதெல்லாம் மறக்காமல் ராஜம் கிருஷ்ணன் குறித்தும் விசாரிப்பார். அதேபோல ராஜம் கிருஷ்ணனிடம் பேசும்போது அவர் தவறாமல் சின்னக்குத்தூசி பற்றி விசாரிப்பார். சின்னக்குத்தூசியைக் ‘குத்தூஸ்’ என்றே அழைப்பார்.
- ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவலில் மணலூர் மணியம்மாள் பற்றி எழுதுவதற்கு குத்தூசிதான் ஏராளமான தகவல்கள் அளித்து உதவினார் என்பார். மணலூர் மணியம்மாளிடம் சின்னக்குத்தூசி உதவியாளராகப் பணியாற்றியவர். மணலூர் மணியம்மாள் பற்றிய தகவல்களைக் கேட்டு, ராஜம் கிருஷ்ணன் சின்னக்குத்தூசியைச் சந்திக்க வந்தது பற்றி சுவாரசியமாக விவரிப்பார்.
- மணலூர் மணியம்மாள் இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டதுடன் கீழத்தஞ்சைப் பகுதியில் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி மக்கள் மனங்களில் நீங்காது வாழ்ந்தபோதும் அவர் குறித்த ஒரு ஒளிப்படமோ தகவல்களோ கிடையாது. அவர் உருவம் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் சின்னக்குத்தூசியாரைச் சந்திக்கும் வரை ஒரு தெளிவில்லாத சித்திரமே இருந்தது.
- மணியம்மாளின் உருவம், நடை, உடை, பாவனைகள் குறித்து சின்னக்குத்தூசி அளித்த தகவல்களுடன் மணியம்மாளின் வாழ்க்கையைப் பற்றி - அவர் வாழ்ந்த கீழத்தஞ்சை பகுதிகளில் அலைந்து திரிந்து அவர் யாருக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தாரோ அதே மக்களைச் சந்தித்துத் தகவல்கள் திரட்டி - ‘பாதையில் பதிந்த அடிகள்’ என எழுதி, மணியம்மாளை உயிருடன் உலவவிட்டவர் ராஜம் கிருஷ்ணன் என்றால் மிகையாகாது.
பெண்ணுரிமைக் குரல்:
- பெண்ணை அடிமைப்படுத்தக் காலந்தோறும் ஏராளமான கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. புதிய காலத்தில் பழைய விலங்குகள் அகற்றப்பட்டால் மீண்டும் புதிய விலங்குகளை ஆண் சமூகம் வலிந்து அதனினும் வலுவாகப் பூட்டுகிறது. பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கம் என்கிற பெயரில் பின்பற்றப்படும் பத்தாம்பசலித்தனமான நம்பிக்கைகள் ஆகியவற்றை உடைத்தழிக்க வேண்டிய அவசியம் குறித்துக் ‘காலந்தோறும் பெண்’, ‘காலந்தோறும் பெண்மை’ ஆகிய நூல்களில் எழுதினார்.
- நவீன மருத்துவ அறிவியல் உலகம் பெண் உடல் மீது செலுத்திய மிகக் கொடூரமான வன்முறை கருத்தடை முறை. கருத்தடைச் சாதனத்தை ஆண்கள் பயன்படுத்துவதுதான் எளிதானது. ஆனால், விதம்விதமான கருத்தடைச் சாதனங்கள், கருத்தடை முறைகள் பெண்ணைக் குறிவைத்து அவள் உடலில் வலிந்து திணிக்கப்படுகின்றன. சமூகமும் கருத்தடையைப் பெண்களுக்கே நிர்ப்பந்தப்படுத்துகிறது. கருத்தடை குறித்த புரிதலுடன் எதிர்த்துப் போராடவும், விழிப்புணர்வூட்டவும் கூடிய நூல் அவர் எழுதிய ‘உயிர் விளையும் நிலங்கள்’.
- இடதுசாரிப் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் தேசிய சம்மேளனத் (National Federation of Indian Women NFIW) தலைவராகவும் செயல்பட்டவர் ராஜம் கிருஷ்ணன். அவர் தீவிரமான படைப்பாளராக இருந்த காலத்தில், பொதுவாக எழுத்தாளர்கள் சந்திக்க நேரும் வறுமை நிலை போன்ற எந்த அவலத்தையும் அவர் சந்திக்கவில்லை. அதற்கு அவரது கணவர் கிருஷ்ணனின் ஆதரவும் பங்களிப்பும் முக்கியக் காரணங்கள்.
- தன் ஒவ்வொரு படைப்பையும் திட்டமிட்டு உருவாக்கினார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியில் கள ஆய்வுகள், பெண் உரிமைக்கான மாநாடுகள், பேரணிகள், ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள் எனப் பரபரப்பாக இயங்கியவர், தரவுகளைத் தொகுப்பதற்கான உதவியும் ஆங்காங்கிருந்த இடதுசாரிகள், முற்போக்காளர்களிடமிருந்து அவருக்குக் கிடைத்தன. இறுதி ஆண்டுகளைத் தனிமையில்தான் கழித்தார்.
- தானே முதியோர் இல்லத்தில் சேர்ந்தது, போரூர் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தது என வாழ்வின் போக்குகளை அவர் யதார்த்தமாக எடுத்துக்கொண்டபோதும், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுது கதறிய தருணங்களும் இருந்தன. இறுதிக் காலத்தில் அவர் சந்தித்த தனிமையும் துயரமும் வேதனை நிரம்பியவை... எவருக்கும் வாய்க்கக் கூடாதவை!
- 5-11-2024 ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு தொடக்கம்
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 11 – 2024)