பெரிதினும் பெரிது
- மூத்த எழுத்தாளர்களுடன் பேசிக்கொண்டிருப்பது ஓர் இனிமையான அனுபவம். அவர்கள் எழுத்தால் கவரப்பட்டு, ஊர் ஊராகச் சென்று அவர்களைத் தேடிப்போவதும், பேசிக்கொண்டிருப்பதும் தொலைத் தொடர்பு வசதி குறைவாயிருந்த 1970களில் எங்களுக்குப் பிடித்தமான விஷயம். நாகர்கோவில் போய் சுந்தர ராமசாமியைப் பார்ப்பதும், இடைசெவல் போய் கி.ராஜநாராயணனைப் பார்ப்பதும், திருவனந்தபுரம் சென்று நகுலனைப் பார்ப்பதும், ராஜவல்லிபுரம் சென்று வல்லிக்கண்ணனைப் பார்ப்பதும் அவ்வளவு பிடித்தமான செயல். அவர்களும் அரவணைப்புடன் நடந்துகொள்வார்கள்.
- அவர்கள் எழுத்தைப் பற்றித்தான் என்றில்லை. இலக்கியம்தான் என்றில்லை. என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் அவர்கள் பேச நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். அவர்களிடம் கற்றது எவ்வளவோ உண்டு. அநேகமான பொழுதுகளில் வண்ணதாசன் உடன் வருவார். உண்மையில் அவர்தான் என்னை அழைத்துச் செல்வார். அந்தக் காலக்கட்டத்தில் பா.செயப்பிரகாசமும் நெல்லையில்தான் இருந்தார். அவரும் எங்களுடன் இடைசெவல் வருவார். அவருக்கு அவரது கரிசல் பூமிக்குப் போவதென்றால் தாய் வீடு செல்வதுபோலக் கொள்ளைப் பிரியம். அதனால் அங்கே அடிக்கடி போவோம். கி.ரா, சு.ராவுடன் பேசிக்கொண்டிருக்க யாருக்குத்தான் பிடிக்காது!
- நாகர்கோவில் சென்றால் அப்போது அங்கே இருந்த கவிஞர் ராஜ மார்த்தாண்டனும் கவிஞர் உமாபதியும் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். எல்லாருமாக சுந்தர ராமசாமி வீட்டு மொட்டை மாடியில் கூடுவோம். இப்படி நண்பர்களுக்காகவே அவர் தற்காலிக ஏற்பாடுபோல பனை ஓலையில் கூரை போட்ட அறை ஒன்று கட்டியிருந்தார். பெயர்தான் ஓலைக் கூரை. அறை குளுமையாக, எளிமையாக, எல்லா வசதிகளுடனும் இருக்கும். மினிமலிசத்தின் சரியான உதாரணம் அது. லா.ச.ராமாமிர்தம் அங்கே ஒரு மாதம் போலத் தங்கியிருந்துதான் தனது ‘கரடி மலை’ நாவலை எழுதினார். ஆம், அவர் எழுதிய ‘அபிதா’ நாவலுக்கு முதலில் கரடிமலை என்றுதான் பெயர் வைத்திருந்தார்.
- ஓலைக்கூரை, மொட்டை மாடி சலித்தால் அவரே அவரின் காரில் கன்னியாகுமரிக்கோ, எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்திற்கோ, திருப்பதிசாரம் பக்கமாகவோ அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருப்பார். கன்னியாகுமரிக் கடற்கரையில் அப்போதெல்லாம் நெருக்கடி இருக்காது. அப்படி ஒருநாள் கடற்கரையில் பேசிக் கொண்டிருக் கையில், `ஸ்பான்’ இதழிலோ ஏதோ ஓர் அமெரிக்க இதழிலோ தான் படித்த கட்டுரை ஒன்று பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
- ‘செவ்விந்தியர்கள் அவர்களது மாந்திரீக சக்திகள், சடங்குகளுக்குப் பேர் போனவர்கள். ஆவியில் அவர்களுக்கு அசாத்திய நம்பிக்கை. அது பற்றி ஆய்வு செய்ய விரும்பிய ஒருவர், பல சிரமங்களுக்குப் பிறகு ஒரு கிராமத்தில் மாந்திரீகம் கற்ற செவ்விந்தியப் பூசாரி போன்ற ஒருவரை அணுகினார். அவரே தலைவர் போலவும் மதிக்கப்படுகிறார். ஆய்வாளரது நோக்கம் மாந்திரீகம் கற்பதல்ல. அதன் நம்பகத்தன்மை, அதில் அவர்களுக்குள்ள நம்பிக்கை பற்றி அறிந்துகொள்வதுதான். தலைவருக்கு இவர் மீதும் இவருக்குத் தலைவர் மீதும் நம்பிக்கை வந்ததும் தலைவர் இவரை ஒரு மாலையில் வெளியே செல்ல அழைத்தார். காரில் சென்றார்கள். பேசிக்கொண்டே ஒரு சிறிய குன்றுப் பகுதிக்குச் சென்றார்.
- காரை அடிவாரத்தில் நிறுத்திவிட்டுக் குன்றின் மேல் ஏறிச் சென்றார் தலைவர். அடிவாரத்தில் நான்கைந்து குடிசைகளே இருந்தன. கிட்டத்தட்ட உச்சிக்கு வந்ததும் அமர்ந்தார். ஆய்வாளரும் அருகே ஒரு சீடனுக்குரிய மரியாதையான தூரத்தில் அமர்ந்தார். காரோ குடிசைகளோ கண்ணுக்குத் தெரியவில்லை. பேச்சு சுவாரசியமாகச் சென்றது. திடீரென்று தலைவர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டு ஆய்வாளரையும் தள்ளி அமரச் சொன்னார். என்ன காரணம் என்று இவர் யோசிக்கும்போதே, “ஒரு கெட்ட ஆவி நம்மைக் கடந்து போகிறது. அதன் வழியில் குறுக்கே அமர வேண்டாம் என்றே தள்ளி உட்கார்ந்தேன்” என்கிறார்!
- சிறிது நேரம் கழித்து கார் ஸ்டீயரிங்கைத் திருப்புவது போலக் கைகளை வளைத்தார், கூடவே கால்களைக் கிளட்சை மிதிப்பது போலும் ஆக்சிலேட்டரை அழுத்துவது போலும் பிரேக் பிடிப்பது போலும் செய்தார். ‘என்ன இது தனிநபர் நாடகம் போலிருக்கிறதே’ என்கிற முகத்தின் வியப்புக் குறிக்குப் பதில் சொல்வதுபோல, “அடிவாரத்தில் ஒரு வலிமையான காற்று வீசியது. நான் உங்கள் காரை அதன் பாதையிலிருந்து தள்ளி நிறுத்தினேன்” என்றார். ’என்னது, இங்கிருந்தே காரை நகர்த்தினாரா, அங்கே வீசிய காற்று இங்கே வராதா’ ஆய்வாளர் யோசித்தார். “அந்த இடத்தில் அழுத்தம் குறைந்து சுற்றுப்புறக் காற்று அந்த இடத்தை நோக்கிக் குவிந்து நிரப்புவதால் உண்டான விளைவு” என்றார். ஒரு கட்டத்தில் பேச்சு சட்டென்று நிறைவுற்றது.
- ஒன்றும் சொல்லாமல் தலைவர் இறங்கி நடந்தார். பின்னாலேயே ஆய்வாளரும் போனார். குடிசைகள் அருகே வந்தார்கள். அதன் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டிருந்தன. கார் நின்ற இடத்துக்கு வந்தார்கள். கார் தள்ளி கொஞ்சம் பாதுகாப்பான வளைவொன்றில் நின்றது. ஆய்வாளரின் வியப்புக்கு அளவில்லை. “தலைவரே, உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டார். ரொம்ப சாவதானமாக, “தெரியாதே” என்று தலையாட்டினார் தலைவர்.
- ஆச்சரியத்தில் மௌனமான ஆய்வாளருக்கு மௌனத்தையே பதிலாகத் தந்தார்!’
- சுந்தர ராமசாமி சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கும் ஒரே ஆச்சரியம். கணிதத்தில் முடிவிலியை நீங்கள் பெரிதென நினைப்பதைவிடப் பெரிது என்று வரையறுப்பார்கள். அதைப் போல சுந்தர ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்த ஒவ்வோர் அனுபவமும் ஒன்றைவிட மற்றொன்று பெரிதாகவே அமையும்!
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 01 – 2025)