TNPSC Thervupettagam

பெரியாரும் அடிகளாரும்

July 11 , 2024 7 days 159 0
  • பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை, சிலை உடைப்புக் கொள்கையை எதிர்த்துப் போராட தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம், 1952இல் தொடங்கப்பெற்றது. அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை நமது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்குத் தந்தார்கள். செயலாளர்களாக கம்பன் அடிப்பொடி சா.கணேசன், ஈரோடு மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பொறுப்பு ஏற்றிருந்தார்கள்.

கருத்து மோதல்:

  • அருள்நெறித் திருக்கூட்டப் பிரச்சாரத்தின் வேகம் கடவுள் மறுப்புக் கொள்கைக்குப் பதில் தருவதாக அமைந்திருந்தது. திராவிடர் கழகத்தினர் மதவாதிகளுக்கு என்று பத்து வினாக்களை எழுதி அச்சிட்டு, தமிழ்நாடு முழுவதும் வழங்கினர்.
  • திராவிடர் கழகத்தினர் கேட்ட அந்தப் பத்து வினாக்களுக்கு விடையளித்த பின், அந்த விடைகளையும் திராவிடர் கழகத்தினருக்குப் பத்து வினாக்களையும் கேட்டு அடிகளாரின் தலைமையிலான அருள்நெறித் திருக்கூட்டம் நூல் வடிவில் வெளியிட்டது. 1952இல் தமிழ்நாடு முழுவதும் அடிகளார் தலைமையிலான அருள்நெறித் திருக்கூட்டத்துக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையே கருத்து மோதல்கள் வலுப்பெற்றன.
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோயில் என்று அழைக்கப்படுகின்ற திருப்பெருந்துறைத் திருக்கோயில் முன்பு திராவிடர் கழகத்தினர் ஏற்றிய அவர்களது கறுப்புக் கொடியை மகாசன்னிதானம் திராவிடர் கழகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவிழ்க்கச் செய்தார்கள்.
  • அதே அறந்தாங்கி ஆவுடையார்கோயிலில் திருவாசக விழா நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தின் இரு பக்கமும் திராவிடர் கழகத்தினர் கறுப்புக் கொடி காட்டியபடியே வந்தார்கள். கூட்டம் பதற்றமடைந்தது. மகாசன்னிதானம் ஒலிபெருக்கி முன்வந்து, “அவர்களுக்குப் பிடித்த கொடியால் நமக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்” என்று லாகவமாகக் கூறிக் கூட்டத்தை அமைதிப்படுத்தினார்கள்.
  • இந்த நிலையில் பெரியாருக்கும் அடிகளாருக்கும் இடையே விவாதங்கள் முற்றி வளர்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. பெரியாரும் அடிகளாரும் நட்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்காக முயன்றனர்.

முதல் சந்திப்பு:

  • பல சான்றோர்கள் முயற்சியால் ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் வீட்டில் 1956இல் பெரியாரைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. முற்றிலும் தனிச் சந்திப்பு. ஈரோட்டில் யாரை யார் முதலில் சந்திப்பது என்பது கேள்வி. ஐயத்துக்கு இடமின்றி, யோசனை செய்ய வேண்டிய அவசியம் இராமல், “மகாசன்னிதானம் இடத்துக்கு நான் வந்து சந்திக்கிறேன்” என்றார் பெரியார்.
  • மகாசன்னிதானம் மேல்மாடியில் தங்கியிருந்தார்கள். கீழே வந்து பெரியாரைச் சந்திக்க விரும்பினார்கள். “மகாசன்னிதானம் இருக்கும் அறையில் இருக்கட்டும். நான் மேலே வருகின்றேன்” என்று சொல்லி மாடி ஏறி வந்தார் பெரியார்.
  • மகாசன்னிதானம், “தானும் பெரியாரும் இருவர் அமரும் இருக்கையில் சேர்ந்து அமரலாம்” என்று சொன்னபொழுது, “மகாசன்னிதானம் தனி இருக்கையில்தான் அமர வேண்டும். எனக்கும் மரபுகள் தெரியும்” என்று கூறிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார் பெரியார். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு ஆத்திக - நாத்திகப் பக்கம் திரும்பியது.
  • “சமயம், கடவுள் எல்லாம் தீண்டாமையை ஒழிக்கவில்லையே? மனிதனை மனிதனாக்கவில்லையே? ஜாதிகளை அகற்றவில்லையே! கடவுள், சாமி என்றெல்லாம் வாழும் மக்கள் இழிவிலும் வறுமையிலும் கிடந்து உழல்கிறார்களே! இதற்குப் பரிகாரம் இதுவரையில் மதங்கள் தேடவில்லையே. கடவுளும் தேடவில்லையே. அது மட்டுமல்ல... கடவுள் பெயரால்தானே இந்த அவலமான காரியங்கள் செய்யப்படுகின்றன!” என்றார் பெரியார்.
  • இதற்கு மகாசன்னிதானம் “இவற்றைக் கடவுள் செய்யவில்லை” என்று சொன்னார்கள். “அப்படியானால் இந்த அநியாயத்தைக் கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை?” என்று கேட்டார் பெரியார்.
  • பேச்சின் முடிவில் “எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? அவரை நான் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்பட வேண்டும் என்பதே! நம்முடைய நாட்டில் இந்த இழிவை மாற்ற மத உலகத்திலும் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்ட பலன் தோல்வியே! நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். பலன் தருமா? சந்தேகம்தான்” என்றார் பெரியார்.
  • “இருவருமாகச் சேர்ந்து உழைப்போம்!” என்று மகாசன்னிதானம் சொன்னார்கள். பெரியார் சிரித்துக்கொண்டே, “எனக்கு ஆட்சேபணை இல்லை. உங்கள் சம்பிரதாயங்கள் இடம் தருமா?” என்றார்.
  • “முயற்சி செய்யலாம். சம்பிரதாயங்கள் என்பவை காலந்தோறும் மாறுபவைதானே” என்று மகாசன்னிதானம் சொல்ல, “சரி பார்ப்போம்! முயற்சி செய்வோம்” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற, பேச்சு முடிந்தது.

உடன்படும் பாங்கு:

  • இந்தச் சந்திப்புக்குப் பின் பெரியாருக்கும் மகாசன்னிதானத்துக்கும் இடையே சூடான விவாதங்கள் குறைந்தன. பெரியார் கொள்கையை மறுக்கும் போக்கு குறைந்து, அவரிடம் உடன்பட்டு நின்று பேசும் பாங்கு மகாசன்னிதானத்திடம் இருந்திருக்கிறது.
  • அதாவது, பெரியார் கொள்கைகளை எதிர்மறையாக அணுகாமல் உடன்பாட்டு முறையில் அணுகி, பெரியாரின் நியாயமான கொள்கைகளை ஏற்றும், உடன்படாதவற்றை நயம்பட விவாத வடிவிலும் பேசும் முறை வளர்ந்தது என்று மகாசன்னிதானம் குறிப்பிடுவார்கள்.
  • பெரியாருக்கும் மகாசன்னிதானத்துக்கும் இடையே சந்திப்புகளின்போதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் மகாசன்னிதானத்தின் மரபுகளுக்குக் குந்தகம் வராமல் பெரியார் பார்த்துக்கொள்வார்.
  • மகாசன்னிதானம் ஒருமுறை திருமடத்தில் பெரியாருக்கு வரவேற்புக் கொடுத்தபொழுது, அப்போது சின்னபட்டமாக இருந்த நடராச தேசிகர் திருநீறு பூசிவிட, பெரியாரும் எந்தத் தயக்கமும், மறுப்பும் இல்லாமல் பூசிக்கொண்டார்.
  • திருநீறு பூசிக்கொண்டதைப் பற்றிக் கேட்டபோது, “நான் திருநீறு பூசிக்கொண்டது மகாசன்னிதானத்திற்காக. நான் திருநீறு பூசிக்கொண்டது மகாசன்னிதானத்திற்கு கௌரவத்தைக் கொடுக்கும் என்றால், நான் திருநீறு பூசிக்கொண்டது சரியே” என்றார் பெரியார்.
  • திண்டுக்கல்லில் மாணிக்க நாடார் என்ற பெரியார் அன்பர், பெரியார் சிலையைத் திறந்து வைக்க மகாசன்னிதானத்தை அழைத்திருக்கின்றார். அப்போதெல்லாம் பெரியார் சிலையின் அடியில், “கடவுள் இல்லை... கடவுளைப் படைத்தவன் முட்டாள்” போன்ற வாசகங்கள் பொறிக்கும் பழக்கம் இருந்ததால், மகாசன்னிதானம் பெரியார் சிலை திறப்பு விழாவில் இதைக் காரணம் காட்டி, கலந்துகொள்ள இயலாமையைத் தெரிவித்து எழுதினார்கள்.
  • மாணிக்க நாடார் இக்கருத்தைப் பெரியாரிடம் கலந்ததில், “மகாசன்னிதானம் விரும்பவில்லை என்றால், அந்த வாசகங்களைப் பொறிக்க வேண்டாம். அவர்கள் விருப்பப்படி செய்க” என்று உடனடியாகப் பெரியார் பதில் எழுதிவிட்டார். கடவுள் மறுப்பு வாசகம் இல்லாமலேயே திண்டுக்கல்லில் பெரியார் சிலை மகாசன்னிதானம் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது.
  • மதுரையில் டி.கே.சண்முகம் சகோதரர்களின், ‘ராஜராஜ சோழன்’ நாடகம். மகாசன்னிதானமும் தந்தை பெரியாரும் கலந்துகொண்டார்கள். நாடக முடிவில் வாழ்த்துரை. பெரியார் பேசும்போது, “நாடகம் எல்லாம் சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால், வௌவால்கள் அடைகின்ற கோயிலைப் பற்றி நாடகம் அமைந்துவிட்டதே!” என்று சொல்லி ஆதங்கப்பட்டார்.
  • அவருக்குப் பின் பேசிய மகாசன்னிதானம், “வௌவால்கள் அடைகின்ற கோயிலைப் பற்றி நாடகம் அமைந்துவிட்டதே என்று ஆதங்கப்பட்டார் பெரியார். ஆனால், பெரியாரைப் போன்றவர்கள் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் கோயிலுக்குள் இருக்கின்ற வௌவால்கள் தானாக வெளியேறிவிடும்” என்று குறிப்பிட்டார்கள்.
  • அதற்கு, “மகாசன்னிதானம் குறிப்பிட்ட மாதிரி ஆன்மிகம் இருக்குமேயானால், அங்கு செல்கின்ற முதல் மனிதனாக நான் இருப்பேன்” என்று பெரியார் குறிப்பிட்டார். ஆன்மிகமும் பகுத்தறிவும் மனிதம் என்ற மையத்தில் சந்திக்கும்போதுதான் இப்படிப்பட்ட அரிய நிகழ்வுகள் நிகழ்கின்றன.

மகத்தான பணிகள்:

  • மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்பட வேண்டும் என்ற நிலையில், நம் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகள் பெருமான் ஆன்மிகத் தளத்தில் உறுதியாய் நின்று மனிதகுல சமத்துவம், தீண்டாமை விலக்கு, இறைவழிபாட்டில் தமிழ் ஏற்றம் பெறுதல், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் கூட்டுறவுப் பொருளாதார அமைப்பினை வலிமைப்படுத்துதல் என்று தம் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, ‘குன்றக்குடி மாதிரிக் கிராமம்’ என்று உருவாக்கியவர்கள்.
  • அதன் ஒரு அங்கம்தான் பெரியாரின் பெயரில், ‘பெரியார் முந்திரி தொழிற் கூட்டுறவுச் சங்கம்’ தொடங்கிச் சிறப்பாக இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • மனிதகுல மேம்பாடு என்ற இலக்குதான் பெரியாரையும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும் காலம் ஒரே மையத்தில் சந்திக்க வைத்தது. நமது மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார், “கடவுளைப் போற்று! மனிதனை நினை!”, “கோயிலைத் தழுவிய குடிகள்! குடிகளைத் தழுவிய கோயில்!” என்ற பிரகடனத்தைச் செயலாக்கினார்கள். அந்த லட்சியத்தை நோக்கி குன்றக்குடி ஆதீனம் தமது சமய, சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து இன்றும் சிறப்பாகச் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories