TNPSC Thervupettagam

பெருங்கடல்களின் பங்களிப்பை மறக்கக் கூடாது

June 6 , 2023 589 days 418 0
  • உயிரினங்களின் அன்றாட வாழ்க்கையில் பெருங்கடல்கள் ஆற்றும் முக்கியப் பங்கினை அனைவருக்கும் நினைவுபடுத்துவதற்கும் மனிதர்கள் பெருங்கடல்களைப் பாதுகாக்கக்கூடிய வழிகள் குறித்த விழுப்புணர்வை அதிகரிப்பதற்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8 அன்று ‘உலகப் பெருங்கடல் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 1992இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் - வளர்ச்சிக்கான ஐ.நா. (UNCED) மாநாடு நடைபெற்றது. இது புவி உச்சி மாநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
  • அம்மாநாட்டின் பகுதியாகச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த தமது கருத்துகளை முன்வைக்கச் சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றிவந்த அரசுசாரா அமைப்புகள், சிவில் சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் கனடா அரசின் ஆதரவுடன் கனேடியப் பெருங்கடல் மையம் (Oceans Institute of Canada) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநரும் கடல்சார் சட்டங்கள் துறையில் சர்வதேச ஆளுமையுமான ஜூடித் ஸ்வான் ஜூன் 8 அன்று உலகப் பெருங்கடல் நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்மொழிந்தார்.
  • அதற்குப் பிறகு பல நாடுகளில் ஜூன் 8 பெருங்கடல்கள் நாளாக அனுசரிக்கப்பட்டுவந்தது. 2002இல் முதல் முறையாக உலக அளவில் பெருங்கடல் நாள் கொண்டாடப்பட்டது. 2008இல் ஜூன் 8ஐ உலகப் பெருங்கடல் நாளாக ஐ.நா. அங்கீகரித்தது. 2009 ஜூன் 8இலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்நாளுக்கான நிகழ்வுகளை ஐ.நா.வும் ஒருங்கிணைத்துவருகிறது. 2023க்கான கருப்பொருள் ‘பெருங்கடல் கோள்: மாறும் அலைகள்’ (Planet Ocean: Tides are changing) என்பதாகும்.
  • புவியின் 70% பெருங்கடல் களால் நிரம்பியுள்ளது. பெருங் கடல்கள் இல்லாமல் மனிதர்கள் உள்பட எந்த உயிரினமும் இந்தப் புவியில் வாழ முடியாது. எனவே, பெருங்கடல்களை நாம் முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.

கடற்கரையில் நாம் கவனிக்கத் தவறுபவை

  • நடைபயிற்சிக்காகவோ, நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காகவோ, குடும்பத்தினருடன் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகவோ கடலுக்குச் செல்கிறோம். கடற்கரைக்குப் போய் ஓயாமல் அடிக்கும் அலைகளில் குழந்தைகளைப் போல் காலை நனைத்து மகிழ்கிறோம். வீடு திரும்பிவிடுகிறோம்.
  • முழுமையாக இல்லாவிட்டாலும் கடலின் சிறு பகுதியையாவது அறிய முற்படுகிறோமா? கடல் அனைத்து உயிரினங்களின் தொட்டில். இன்றைக்கும்கூடப் பல்வேறு வகையான உயிரினங்களின் வீடாக, மையமாக கடற்கரைகள் இருந்துவருகின்றன.
  • கரைப் பகுதியிலும், பொலபொலவென்ற மணல் பகுதியிலும் வளைக்குள் இருந்து நண்டுகள் எட்டிப் பார்ப்பதைப் பார்க்கலாம். ராணுவ வகை நண்டுகள் (Soldier Crab) ஈர மணலை உருட்டி உருட்டி மணற்பரப்பிலேயே கோலமிட்டிருப்பதையும் சில பகுதிகளில் பார்க்க முடியும்.
  • அப்படியே சற்று நடந்தால் பல வகையான சங்குகள், சிப்பிகள் காணப்படும். அந்தக் காலத்தில் வண்ண வண்ணமான இந்தச் சுண்ணாம்புச் சில்லுகளை குழந்தைகள் குதூகலத்துடன் சேகரிப்பார்கள். எல்லாச் சங்கு, சிப்பிகளும் ஏதோ ஒரு மெல்லுடலியின் கூடுதான். சிப்பியை மீனவர்கள் மட்டி என்கிறார்கள்.
  • சிப்பியின் மேற்புறம் ஒளி பாய்வதுபோல் வண்ணத் தீற்றல்கள் இருப்பது ஒளி மட்டி, வரிவரியாக இருப்பது வரி மட்டி, திருகாணியைப் போல இருக்கும் சங்குகள் திருகாணி ஊறி எனப்படு கின்றன. முள் முள்ளாக நீட்டிக்கொண்டிருக்கும் சங்கு வகை, சங்கு முள்ளி எனப்படுகிறது. அதேபோல் சில சங்குகளில் மெல்லுடலிக்குப் பதிலாகத் துறவி நண்டுகள் வீடாக்கி வசிக்கலாம்.
  • பறவைகளின் சுண்ணாம்புச் சத்துத் தேவைக்குக் கடைகளில் வெள்ளையாக ஓர் ஓட்டை வாங்கிப் போடுவோம். அதைக் கடல் நுரை எனச் சிலர் தவறாகக் கூறுகிறார்கள். இது கணவாய் (Squid) ஓடுதான். இதையும் கரையில் பார்க்கலாம்.
  • உடலில் காற்றை நிரப்பிப் பெரிதாக்கிக்கொள்ளும் வசதியைக் கொண்ட பேத்தை (Puffer), பங்குனி ஆமைகள், மீன்கள் போன்றவற்றின் சடலங்கள் சில நேரம் கிடைக்கலாம். சில கடற்கரைகளுக்குக் குறிப்பிட்ட காலத்தில் கடல் ஆலா, கடற்காகங்கள் போன்ற பறவைகள் வந்துசெல்லும்.
  • கடற்கரைக்கு முன்னதாகச் சிறு மணற்குன்றுகள், அங்கே ஆட்டுக்கால் கொடி (Ipomoea), ராவண மீசை (Spinifex) போன்ற தாவரங்கள், கழிமுகத் தண்ணீருக்கு வெளியே சுவாச வேர்களை நீட்டியிருக்கும் அலையாத்தித் தாவரங்கள் இப்படி விநோதமான தாவர வகைகளைப் பார்க்கலாம்.
  • ஒரு கடற்கரையில் இயற்கை சார்ந்து இப்படி எத்தனையோ அம்சங்களை நாம் அவதானிக்க முடியும். ஆனால், அவற்றை எல்லாம் கவனிக்கவோ அறிந்துகொள்ளவோ முயல்கிறோமா?
  • இந்த இயற்கை அம்சங்களை எல்லாம் மறைப்பது போலவோ அல்லது இவற்றைவிட அதிகமாகவோ மீதமான உணவு, மக்காச்சோளத் தட்டைகள், ஞெகிழிப் பைகள், ஞெகிழிப் புட்டிகள், ஞெகிழிக் கரண்டிகள் என நாம் குப்பைகளாகப் போட்டவை அதிகமாகக் கிடக்கின்றன. இவை கடலையும் கடல் உயிரினங்களையும் நிச்சயம் பாதிக்கும். இந்தச் செயற்கை அம்சங்களைக் குறைத்துக்கொண்டு, இயற்கை அம்சங்களைக் கவனிக்கத் தொடங்குவோம்.

நன்றி: தி இந்து (06 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories