TNPSC Thervupettagam

பெருங்கனவும் நிதர்சனமும்

January 17 , 2025 3 hrs 0 min 13 0

பெருங்கனவும் நிதர்சனமும்

  • சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. டெல்லியிலும் கொல்கத்தாவிலும் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தாலும், மொழிபெயர்ப்பு உரிமைகள் சார்ந்து வழிகாட்டுவது அந்த நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டும்தான். மாறாக, சென்னையில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு, மொழிபெயர்ப்பையும் அதற்கான உரிமைகளைப் பெறுவதையும் முதன்மையான இலக்காகக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழக அரசால் நடத்தப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி இந்திய அளவில் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க முயற்சி. தமிழ் நூல்களை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிற மொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கம். ஒரு மாநில அரசு இந்த முன்னோடி முயற்சியில் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே நம் செம்மொழிக்குப் பெருமை சேர்க்கக்கூடியது.
  • புத்தகக் காட்சியின் முதல் இரண்டு நாள்களில் பதிப்​பாளர்​களும் எழுத்​தாளர்​களும் மட்டுமே பங்கேற்க இயலும். மொழிபெயர்ப்பு உரிமைகள் சார்ந்த பேச்சு​வார்த்​தைகள் அப்போது நடைபெறும். இறுதி நாளில்தான் மக்கள் அனுமதிக்​கப்​படு​கின்​றனர். பொது நூலக இயக்குநரகமும் தமிழ்நாடு பாடநூல் - கல்வி​யியல் பணிகள் கழகமும் சேர்ந்து இந்நிகழ்வை நடத்து​கின்றன. ஆட்சி​யாளர்களது அக்கறை, சமூக முன்னேற்​றத்​துக்கும் இலக்கியத் துறைக்​குமான பிணைப்பைப் புரிந்​து​கொண்​டுள்ள சில அரசு அதிகாரி​களின் அர்ப்​பணிப்பு உணர்வு ஆகியவைதான் இந்த நிகழ்வுக்கு ஆதாரமாக விளங்​கு​கின்றன. எனினும் இவர்களது உழைப்​புக்கான முழுப்பலன் கிடைக்​கிறதா என்பது கேள்விக்​குறி​தான்.

நல்ல தொடக்கம்:

  • 2023இல் முதல் நிகழ்வுக்கு முன், அப்போதைய பொது நூலக இயக்குநர் இளம்பகவத் உள்பட சில அதிகாரிகள் உலக அளவில் மதிக்​கப்​படுகிற, ஜெர்மனியில் நடைபெறும் பிராங்​பர்ட் புத்தகக் காட்சியில் நேரடி​யாகப் பங்கேற்​றனர். நூல்களுக்கான பதிப்பு​ரிமை, மொழிபெயர்ப்பு சார்ந்த உலகளாவிய நடைமுறைகளை அறிந்​து​கொள்ளவும் முக்கியமான நூல் வெளியீட்​டாளர்​களுடனான அறிமுகத்தைப் பெறவும் இந்தப் பயணம் உதவியது. சென்னையில் ஆண்டு​தோறும் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பின் ஒத்துழைப்பும் கிடைக்​கும்​வகை​யில், இரண்டு புத்தகக் காட்சிகளும் ஒரே இடத்திலேயே நடத்தப்​பட்டன. அதில் பங்கேற்ற வெளிநாட்டுப் பதிப்​பகங்​களின் எண்ணிக்கையும் ஏமாற்​றமளிக்க​வில்லை.
  • எனினும் எழுத்​தாளர்​களுக்கும் பதிப்​பகங்​களுக்கும் இடையே பேச்சு​வார்த்​தையில் மொழி பெரும் தடையாக இருந்தது. இதற்காக 2024இல் நடைபெற்ற அடுத்த புத்தகக் காட்சி​யில், இலக்கிய முகவர்கள் என்னும் பொறுப்​பாளர்களை அரசு நியமித்தது. இலக்கிய ஈடுபாடும் ஆங்கில மொழியில் தேர்ச்​சியும் கொண்ட கல்லூரி மாணவர்கள் நேர்காணல் செய்யப்​பட்டு அவர்களில் 20 பேருக்குப் பயிற்சி அளிக்​கப்​பட்டது. இதனால், வெளிநாட்டுப் பதிப்பாளர்களுடனான உரையாடல் ஓரளவுக்கு மேம்பட்டது.
  • பரந்து விரிந்த நிகழ்​விடத்​துக்​காகவும் வெளிநாட்​ட​வர்​களின் வசதிக்​காகவும் இரண்டாம் சர்வதேசப் புத்தகக் காட்சி சென்னை நந்தம்​பாக்கம் வர்த்தக மையத்​துக்கு மாற்றப்​பட்டது. தமிழ் எழுத்​தாளர்​களுக்கும் பதிப்​பாளர்​களுக்கும் உதவும் வகையில், பிற நாடுகள் கொண்டுள்ள மொழிபெயர்ப்புத் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்​பட்டது. இதுவரை தமிழ் நூல்களை மொழிபெயர்க்காத நாடுகள், ஏற்கெனவே மொழிபெயர்த்த நாடுகள், அதற்காக விண்ணப்​பிக்க வேண்டிய காலம் போன்ற தகவல்கள் இதில் தரப்பட்​டிருந்தன. இப்போது நடைபெறும் மூன்றாம் நிகழ்வுக்கும் முன்த​யாரிப்புப் பணியாக அரசு சார்பில் ஒரு குழு பிராங்​பர்ட் புத்தகக் காட்சியில் பங்கேற்று வந்துள்ளது. அதில் ஓர் அரங்கு அமைக்​கப்​பட்டுத் தற்போதைய நிகழ்வுக்கு அரசு சார்பில் பலருக்கு அழைப்பும் விடுக்​கப்​பட்டது.

கள நிலைமை என்ன?:

  • இதுவரை முடிந்​துள்ள இரண்டு புத்தகக் காட்சிகளின்​போதும், நம்மூர் எழுத்​தாளர்கள் தங்கள் படைப்புகள் பிற மொழியில் வெளியிடப்படப் புரிந்​துணர்வு ஒப்பந்​தங்கள் போடப்​பட்​டுள்ளதாக மகிழ்ச்​சி​யுடன் அறிவித்​ததைச் சமூக வலைதளங்​களில் காண முடிந்தது. முதல் நிகழ்வில் ஏறக்குறைய 350 ஒப்பந்​தங்​களும் இரண்டாம் நிகழ்வில் 750 ஒப்பந்​தங்​களும் போடப்​பட்டன. தமிழ்ப் பதிப்புத் துறையில் இது பெரியதொரு மலர்ச்சி என்கிற நம்பிக்கையைப் பலர் வெளிப்​படுத்​தினர். எனினும் அனுபவம் உள்ள சில வெளியீட்​டாளர்கள், ‘இது முதல் படிதான்’ எனவும் புரிந்​துணர்வு ஒப்பந்​தங்​களுக்குப் பின்னர், பல கட்டப் பணிகளைக் கடந்தாக வேண்டும் என்பதையும் கவனப்​படுத்​தாமல் இல்லை. அவர்கள் கூறியபடியே, ஒப்பந்​தங்​களுக்கு உள்பட்ட நூல்கள் புத்தக​மாகக் கையில் வந்துசேர்வது இன்னும் நிறைவுறாத பயணமாகவே இருக்​கிறது. புரிந்​துணர்வு ஒப்பந்​தங்​களின் எண்ணிக்கைக்கும் வெளியான நூல்களின் எண்ணிக்கைக்கும் பெரும் இடைவெளி உள்ளது. “ஒப்பந்தம் போடப்​பட்​டதில் 5-10 சதவீத நூல்கள் வெளியாகி இருக்கலாம்” என்கிறார் ஒரு பதிப்பாளர்.
  • முதல் நிகழ்வில் மொழிபெயர்ப்​புக்கான நிதியாக ஒன்றரைக் கோடி ரூபாயை அரசு நிர்ண​யித்​திருந்த நிலையில், தற்போது நடைபெறும் நிகழ்வுக்கு ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்​படும் எனக் கூறப்​பட்​டுள்ளது. வழிகாட்​டவும் நிதியை அளிப்​ப​தற்கும் அரசு தயாராக இருந்​தும், நூல்கள் வெளியா​வதற்கு இவ்வளவு தாமதம் ஆவதற்குக் காரணம் என்ன? தமிழில் பல நூல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. அடுத்தபடியாக, எழுத்​தாளர்​களுக்கும் பதிப்​பாளர்​களுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லை எனவும் பதிப்புத் துறை வட்டாரத்தில் கூறப்​படு​கிறது. நூலின் பதிப்புரிமை எழுத்​தாள​ருக்கா, பதிப்​பாள​ருக்கா என்பது பல இடங்களில் முடிவு செய்யப்​ப​டாமலே உள்ளது. இந்தக் குழப்​பத்தைக் கடந்தால்​தான், வெளிநாட்டுப் பதிப்​பாளரிடம் மொழிபெயர்ப்பு குறித்துப் பேசவே தொடங்க முடியும்.
  • ஆங்கில மொழி என்கிற தடையைக் கடக்க இலக்கிய முகவர்கள் மூலம் அரசு உதவலாம். நூலை மொழிபெயர்க்கும் உரிமை யாருக்கு என்பதில் அரசு தலையிட முடியாது. எழுத்​தாளரும் பதிப்​பாள​ரும்தான் இதைக் கடந்துவர வேண்டும். தமிழ்ப் பதிப்பு​லகில் வெளியீட்டு நெறிமுறைகள் பெரும்​பாலும் சரியாகப் பின்பற்​றப்​படு​வ​தில்லை என்பதைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி மீண்டும் ஒரு முறை பட்டவர்த்​தனமாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறது.
  • மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குதல், எழுத்​தாளர்​/மொழிபெயர்ப்​பாளர்​களுக்கு உரிய உரிமத்​தொகை/கட்டணம் அளிக்​கப்​படுதல், எழுத்​தாளர்​களும் பதிப்​பாளர்​களின் சிரமங்களை உணர்​தல் என அடிப்​படை​யிலேயே பல ​மாற்​றங்​கள் நிகழ்ந்தாக வேண்​டும் என்​பதே இது உணர்த்​தும் செய்தி. ப​திப்​பாளர்​களும் எழுத்​தாளர்​களும் இந்தக் கட்​டத்​தைக் கடக்​காமல் தமிழ் நூல்​கள் பெரும் எண்​ணிக்கை​யில் உலக அரங்​குக்​குச் செல்​வது என்​பது தோற்​றமயக்​கமாகத்​ தேங்​கிவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories