- தவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைத்தால் மட்டும் போதாது. அந்தத் தண்ணீர் நல்ல தண்ணீராகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 15 முக்கியமான பெருநகரங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல என்று தெரிகிறது.
- இந்த அறிக்கை ஆச்சர்யப்படுத்தவில்லை. பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் தங்களது அடிப்படைக் கடமைகளில் ஒன்று என்பதையே மறந்து பல ஆண்டுகளாகின்றன.
குடிநீரின் தரம்
- குழாய் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பான குடிநீரின் தரம் மிக மோசமாகக் காணப்படும் நகரம் தலைநகர் தில்லி என்றால், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, புணே உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களிலும் குடிநீரின் தரம் மோசமாகவே இருக்கிறது. இந்தியாவிலேயே மும்பையில் மட்டும்தான் ஓரளவுக்கு தரமான குடிநீர் வழங்கப்படுவதாக நுகர்வோர் நல அமைச்சகத்தின் சார்பில் ஆய்வு நடத்திய இந்திய தர நிர்ணயத் துறை தெரிவிக்கிறது.
- இந்திய தர நிர்ணயத் துறை நடத்திய ஆய்வு பல்வேறு தகவல்களைத் தருகிறது. தண்ணீரின் நிறம், மணம் இரண்டிலுமே குறைபாடு காணப்படுகிறது. போதாக்குறைக்கு உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான உலோகங்கள், கனிமப் பொருள்கள் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
- குடிநீரில் நச்சுப் பொருள்களும், நோய்த்தொற்றுகளைப் பரப்பும் கிருமிகளும், நுண்ணுயிரிகளும் காணப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இதுபோன்ற குடிநீர்தான் குழாய் மூலம் பல நகரங்களிலும் வழங்கப்படுகிறது என்பது கவனக்குறைவு என்பதைவிட நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களின் அக்கறையின்மை என்றுதான் கூறத் தோன்றுகிறது.
- படித்த நடுத்தர வர்க்கத்துக்கு மேலேயுள்ள பெரும்பாலான மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீர், குடிநீர் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது நன்றாகவே தெரியும்.
- அதை இந்திய தர நிர்ணயத் துறையின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது, அவ்வளவே! ஆய்வு செய்யப்படாத ஏனைய நகரங்களிலும் நிலைமை இதுபோலத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
- குழாய் மூலம் வரும் தண்ணீரை பொதுமக்கள் கொதிக்க வைத்தோ அல்லது சுத்திகரிக்கும் கருவியைப் பொருத்தியோ பயன்படுத்துவது சாமானிய அடித்தட்டு மக்களுக்கு எப்படி சாத்தியம்? தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தண்ணீர் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க முடியும் என்பது பலரின் நம்பிக்கை.
தரக் கட்டுப்பாடு
- ஆனால், தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் குடிநீரும்கூட முறையான தரக் கட்டுப்பாடு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகம்தான்.
- ஐஎஸ்10500: 2012 என்பது குடிநீருக்கான தேசிய தர வரம்பு. ஆனால், எந்த உள்ளாட்சி அமைப்பும் இதைப் பின்பற்றுவதோ உறுதிப்படுத்துவதோ இல்லை. தனியார் நிறுவனங்களின் குடிநீர் விற்பனை ஒரு மிகப்பெரிய தொழிலாக மாறிவிட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வழங்குவது குறித்த அக்கறையைக் குறைத்துக் கொண்டுவிட்டன.
- தனியார் குடியிருப்புகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தத் துவங்கிவிட்ட காரணத்தினாலோ என்னவோ குழாய் மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது என்பது உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திலிருந்தே அகன்றுவிட்டதாகத் தோன்றுகிறது.
- நீதி ஆயோக்கின் அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 21 நகரங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிலத்தடி நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இருக்கின்றன. மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் ஆய்வின்படி, திட்டமிடாத வளர்ச்சி, கணிக்க முடியாத பருவநிலை, அளவுக்கு அதிகமான நிலத்தடி நீர்ப் பயன்பாடு ஆகியவற்றால் பல நகரங்கள் ஏற்கெனவே மிகப்பெரிய குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன.
- இந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதையும் நிறுத்திவிட்டால் தண்ணீர்கூட கடுமையான விலை உயர்வையும் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ளக் கூடும்.
- தரம் குறைந்த குடிநீர் வழங்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. குடிநீர் வழங்கும் துறையே, குடிநீரின் தரக் கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்துகொள்ளும் பொறுப்பையும் கையாள்கிறது. குடிநீரின் தர நிர்ணயம் ஒவ்வொரு மாநிலத்திலும் தனியான துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சுற்றுச்சூழல், காற்று மாசு போல, தண்ணீரின் தரமும் பொதுவெளியில் பகிரப்படுமானால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் ஓரளவுக்கு மேம்படும்.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று வழங்கப்படுவதும் முறையான சுத்திகரிப்புக்கு உள்ளாகிறதா என்றால் இல்லை. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் குளோரின் கலப்பதன் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டதாகக் கருதி பொதுமக்களுக்கு வழங்குகின்றன.
கொள்கை முடிவுகள்
- குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது, நவீனப்படுத்துவது, கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கான முதலீடு குறித்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
- பிரதமர் வாக்குறுதி அளித்திருப்பதுபோல, குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கும் திட்டம் என்பது அனைவருக்கும் மின்சாரம், கல்வி, எரிவாயு உருளை, மருத்துவக் காப்பீடு, உணவு போன்றதல்ல.
- கல்வி, உணவு போல குடிநீரும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் உரிமையாக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. அதற்கு முறையான நீர் மேலாண்மையும் உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புணர்வுடன் கூடிய அக்கறையும் இருந்தாக வேண்டும்.
நன்றி: தினமணி (23-11-2019)