- மனிதகுல வரலாற்றில் பெண்களின் கிரீடம் இறக்கி வைக்கப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 17ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகத்தின் விடியலில் தான் பெண்கள் உரிமை பற்றிய சிந்தனை, உலகில் மலரத் தொடங்கியது. முதலாளித்துவ வளர்ச்சி, பொதுவுடைமைச் சிந்தனை வளர்ச்சி ஆகிய இரண்டுமே வேறுபாடுகளுடன் இருந்தாலும், பெண்கள் உரிமைகளைத் தூக்கிப்பிடித்தன. அதன் பின் இந்த 21ஆம் நூற்றாண்டு வரை இடது - வலது எந்தச் சிந்தனையாக இருந்தாலும் பெண்களின் உரிமைகளை ஆதரித்துத்தான் ஆக வேண்டும் என்பது கருத்தளவில் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், நடைமுறையில் ஏராளமான முட்டுக்கட்டைகள் தொடரவே செய்கின்றன.
அடையாள நிமித்தமான அணுகுமுறை
- இந்தியாவின் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக, திரௌபதி முர்மு கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மகளிர் சமுதாயத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளிக்கப்பட்ட மாபெரும் மரியாதையாக இது முன்வைக்கப்பட்டது. எனினும், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் அவருக்குரிய மரியாதை அளிக்கப்படாதது இந்தியச் சமுதாயத்தின் உண்மை முகத்தை உணர்த்தியது. 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்த – நாடாளுமன்ற /சட்டமன்றங்களில் - பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த நிச்சயமாக இந்தச் சட்டம் வழிகோலும். ஆனால், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடனும் தொகுதி மறுசீரமைப்புடனும் தொடர்புபடுத்தப்பட்டு ஒரு இடியாப்பச் சிக்கலில் வைக்கப்பட்டுள்ளது.
பாலியல் கொடுமைகள்
- பெண்கள் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை - ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அடைந்துவரும் வளர்ச்சியைச் சகித்துக்கொள்ள முடியாத ஆண் மனதின் வன்மமாகவும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பொதுவாக, பாலியல் வன்கொடுமைகள் பெருகியிருப்பதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை பெண்கள் அடைந்துவருகின்ற வளர்ச்சி குறித்த நமது மகிழ்ச்சியைநிலைகுலையச் செய்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பான பெருநகரமாகச் சென்னை இருப்பது ஆறுதல் தரும் செய்தி.
போர்க்களத்தில் பெண்கள்
- பாலியல்ரீதியாகப் பெண்ணை இழிவுபடுத்துவது, மானுடவியல் வரலாற்றில் இன்றுகூட ஆழமான அரசியல் அலைகளை உள்ளடக்கியே நிகழ்கிறது என்பதற்கு மணிப்பூர் கலவரம் மீண்டும் சாட்சியானது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி, சித்ரவதைக்குள்ளாக்கி இழுத்துச் செல்லப்பட்டதை இந்த நாடு வேதனையுடன் பார்த்தது. இன்னொரு வகையில், உலகப் பெண்கள் வரலாற்றில் மணிப்பூர் கலவரம் ஒரு முக்கியமான அத்தியாயமாகவும் ஆனது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பெண்கள் போராட்டக் களத்தில் நின்றார்கள். தீவிரவாதிகள் என்றுசிறைப்படுத்தப்பட்ட தம் வீரர்களை ஆண்களின் ராணுவத்திடமிருந்து மீட்டார்கள்.
ராணுவத்தில் பெண்கள்
- இரண்டு ஆண்டுகளுக்கு முன், “ஏன் நாங்கள் ராணுவத்தில் உயரதிகாரிகளாக வரக் கூடாது?” என்று உச்ச நீதிமன்றத்தில் கேட்டார்கள், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண்கள். ராணுவம் அளித்த பதில்களைப் புறந்தள்ளிய உச்ச நீதிமன்றம், பெண்களை உயர்மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கான குழுக்களை நியமியுங்கள் என உத்தரவிட்டது. தற்போது இக்கனவு கனிந்து முப்படைகளிலும் உயர் பதவிகளில் பெண்கள் இடம்பெற்றுள்ளார்கள். அறிவியலின் மறுமலர்ச்சிதான் நவீனப் பெண் விடுதலைச் சமுதாயம் எழுதப்படுவதற்கான அடித்தளத்தை இட்டது. அறிவியலில் பெண் அடைகின்ற முன்னேற்றம் வெறும் நிகழ்கால வெற்றியல்ல; எதிர்காலத்தில் பெண் ஆளுமையின் மீட்சியை உறுதியாக எழுதிச் செல்லும் வழித்தடமாகும். அந்த வகையில், சமீபத்தில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் விண்வெளித் துறையில் சந்திரயான் 3, ஆதித்யா எல்1 திட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது; அவர்கள் உரிய முறையில் ஊடக வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் பெருமைக்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகள்
- சமுதாயத்தின் நிலையை அளப்பதற்கு நீதிமன்றத் தீர்ப்புகள் முக்கியமான அளவுகோல் ஆகும். 2023இல் இவ்வாறு கூர்ந்து நோக்கத்தக்க தீர்ப்பு, தன்பாலினத் திருமணங்களை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் முடிவு செய்ததாகும். ஆனால், அந்தத் தீர்ப்பு அத்திருமணங்களை ஏற்பது குறித்த நியாய அநியாயங்கள் பற்றியதல்ல; மாறாக அத்திருமணங்களை அங்கீகரிப்பது குறித்த தேவையைப் பற்றியும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், நாடாளுமன்றம்தான் இது குறித்து விவாதித்துத் தக்க சட்டங்களை அல்லது சட்ட மாறுதல்களை இதில் ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- சுயமரியாதைத் திருமணம் எங்கு நடந்தாலும் - அதாவது, காவல் நிலையத்திலோ வழக்கறிஞர் அலுவலகத்திலோ எங்கு நடந்தாலும் - செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 2023 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. வழக்கறிஞர் அலுவலகங்கள் அல்லது காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்படும் திருமணங்களை அனுமதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது பெண்களுக்கான காதல் விடுதலையில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். பெண்களின் கோயில் நுழைவு, திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் கொடுமைகள் இவை பற்றியெல்லாம் இன்னும்தெளிவான பார்வைகளையும் முடிவுகளையும் நீதிமன்றங்கள் தரவில்லை.
அதிகாரவர்க்கத்தில் பெண்கள்
- பெண் கல்வி மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அதே போல் உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்களிப்பும் தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தியாவின் உழைக்கும் மகளிரில் 40%க்கும் மேலானோர் பணிபுரிந்துவருவதாகக் கணக்கெடுப்புகள் உரைக்கின்றன. தமிழ்நாட்டின் தனிக் கலாச்சாரமாக வளர்ந்துவந்துள்ள பெரியாரின் பகுத்தறிவு-பாலின சமத்துவக் கலாச்சாரம் இதற்குப் பேருதவி புரிந்துள்ளது. ஆனால், மேலதிகாரிகள் மட்டம் என்று வருகின்றபோது தமிழ்நாடு மாறுபட்ட உதாரணத்தைத் தருகிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 20%-ஐக்கூடத் தொடவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.
- பெண்களுக்கான தனி ஸ்டார்ட்-அப் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதில் வெற்றி பெற நம் சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிறையத் தேவைப்படுகின்றன. தொழில்முனைவோர்களாகப் பெண்கள் பெறும் வெற்றி அதிகாரத்தை நோக்கிய அவர்கள் நகர்வில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். ஜிண்டால் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாவித்திரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு அம்பானியைவிட அதிகம். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் பெண்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளனர். ஆனால், இவர்களின் வளர்ச்சியை நாம் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ள முடியாது. இன்றும்கூடப் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் அறியாமை / வறுமை இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உலக அளவிலேயே பெண்கள் வளர்ச்சி அனைத்து மக்களுக்குமான சம விகிதத்துடன் இல்லை என்பதைச் சிந்தனையாளர்களும் அரசாங்கங்களும் எப்போதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2023)