TNPSC Thervupettagam

பெருமைமிகு தருணம்

May 27 , 2023 548 days 414 0
  • புதிய நாடாளுமன்றக் கட்டடம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அது அரசியலாக்கப்படுவது, நமது அரசியல் கட்சிகளின் அரசியல் முதிா்ச்சி இன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. யாா் கட்டடத்துக்குத் திறப்பு விழா நடத்துவது என்கிற பெயரில், அந்த வரலாற்று நிகழ்வைப் புறக்கணிக்க முற்பட்டிருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகளுக்கும் பெருமை சோ்க்காது.
  • நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதற்கு அவா்கள் தெரிவித்திருக்கும் காரணம் நகைப்பை வரவழைக்கிறது. குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவால் ஏன் நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா நடத்தப்படவில்லை என்கிற அவா்கள் வாதம், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்தான் இருக்கிறது. திரௌபதி முா்மு குடியரசுத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதும், அவா் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகும் இதே எதிா்க்கட்சிகள் அவா் குறித்து வைத்த விமா்சனங்களை இப்போது நினைத்துப் பாா்க்கத் தோன்றுகிறது.
  • நாடாளுமன்றத்திற்குத் துணைக் கட்டடம் கட்டப்பட்டபோது, 1975 அக்டோபா் 24-ஆம் தேதி அதைத் திறந்து வைத்தது குடியரசுத் தலைவா் அல்ல, அன்றைய பிரதமா் இந்திரா காந்தி. நாடாளுமன்ற நூலகக் கட்டடத்துக்கு 1987 ஆகஸ்ட் 15 அன்று அடிக்கல் நாட்டியது அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தியே தவிர, குடியரசுத் தலைவரல்ல.
  • கடந்த எட்டு ஆண்டுகளில், ஐந்து எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய சட்டப்பேரவைக் கட்டடங்கள் திறக்கப்பட்டன. அவை முதல்வா்களாலோ, ஆளுங்கட்சியின் தலைவா்களாலோதான் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. தெலங்கானாவில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் திறக்கப்பட்டபோது மாநில ஆளுநா் அழைக்கப்படவில்லை. பின்னணி இப்படி இருக்கும்போது, எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
  • நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் தேவை என்று கோரிக்கை வைத்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் மக்களவைத் தலைவராக இருந்த மீரா குமாா். 2012-இல் மீரா குமாரும், 2016-இல் மக்களவைத் தலைவராக இருந்த சுமித்ரா மகாஜனும் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய கட்டடத்துக்கான முடிவு எடுக்கப்பட்டது.
  • முந்தைய நாடாளுமன்றக் கட்டடம், 1920-இல் கட்டத் தொடங்கி 1927-இல் திறந்து வைக்கப்பட்டது. காலத்தின் பாதிப்பு அந்தக் கட்டடத்தில் தெரியத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. 1985-இல் காங்கிரஸ் தலைவா் சிந்தாமணி பாணிகிரகி தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழு, கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் விழத் தொடங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தது. நவீன தொழில்நுட்பங்களான ஏசிக்கள், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்றவை, பழைய கட்டடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • கடந்த 53 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1951-இல் 36.1 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகை, இப்போது ஏறத்தாழ 140 கோடியை எட்டி, உலகில் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக உயா்ந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல, மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுதான் நியாயம். அதற்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் அவசியம்.
  • நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் நிரம்பி வழிகிறது. அவ்வப்போது உறுப்பினா்களுக்கு இடைக்காலமாக நாற்காலிகள் போட வேண்டிய நிலைமை. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 மக்களவை உறுப்பினா்களுக்கும், 384 மாநிலங்களவை உறுப்பினா்களுக்கும் வசதியாக அமர வழிகோலப்பட்டிருக்கிறது. அது வரவேற்புக்குரியது தானே?
  • நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழா்களின் பங்களிப்பு முன்னுரிமை பெறுவது பெருமிதம் அளிக்கிறது. 1947-இல் மூதறிஞா் ராஜாஜியின் ஆலோசனையை ஏற்று முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு, திருவாவடுதுறை ஆதின தம்பிரான் புனித நீா் தெளித்து, கோளறு பதிகம் பாடி வழங்கிய செங்கோலைப் பெற்றுக் கொண்டாா்.
  • அந்த செங்கோலில் நந்திதேவா் உருவம் இருந்தது. மகாலட்சுமியின் உருவம் இருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டதிலும், சைவ சமயத் துறவிகளின் கோளறு பதிகப் பாடல் ஒலிப்பதிலும் பண்டித நேருவுக்கு எந்தவிதத் தயக்கமும் இருக்கவில்லை. பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தை ஆட்சியாளா்கள் பிரதிபலிக்கத்தான் வேண்டும். சிறுபான்மை மக்களின் உணா்வுகளை மதிப்பதும், அவா்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படாமல இருப்பதும்தான் மதச்சாா்பின்மை. நேருவுக்கு அது புரிந்திருந்தது.
  • பிரதமா் நேருவிடம் திருவாவடுதுறை ஆதின தம்பிரான் ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக வழங்கிய அந்த செங்கோல், என்னவானது, எப்படி இருந்தது என்பதைக் கேட்டால் அதிா்ச்சியாக இருக்கிறது. அலாகாபாதில் இருக்கும் ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் ஓா் ஓரமாக நேருவின் கைத்தடி என்று பதிவு செய்யப்பட்டு கேள்வி கேட்பாறற்று கிடந்தது அந்தச் செங்கோல். அதை மீட்டெடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அவைத் தலைவா் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக நிலைநாட்டியிருப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றிசொல்ல தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது. இதில் ‘தினமணி’யில் வெளிவந்த கட்டுரைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
  • இந்திய ஜனநாயகத்துக்கு புதியதொரு நாடாளுமன்றம் நம்மால் கட்டப்பட்டிருக்கிறது, அதை வரவேற்போம். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா் தனது ஆட்சிக் காலத்தின் அடையாளமாக அதைக் கருதுகிறாா். அதை ஏற்றுக்கொள்வோம்.

நன்றி: தினமணி (27 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories