பேராசிரியர்களுக்கு அவசியமா பணி நீட்டிப்பு?
- அண்மையில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை வெளியிட்ட கல்லூரிப் பேராசிரியர்களின் மறுநியமனம் தொடர்பான அரசாணை (செய்தி வெளியீட்டு எண். 1983, நாள்:18.11.2024), இன்றைய சூழலுக்குப் பொருத்தமானதுதானா என்கிற கேள்வியை எழுப்புகிறது. அரசின் அறிவிப்பில், கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வுபெறும் பேராசிரியர்களின் பணிக்காலம் மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆண்டின் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற்ற ஆயிரக்கணக்கானோர் இன்னமும் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டுவரும் நிலையில், பதவியில் இருக்கின்ற பேராசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்வது ஏற்புடையதாக இல்லை. கல்வியாண்டின் இடையில் பேராசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாக உயர் கல்வித் துறை இதற்கு விளக்கம் அளிக்கிறது.
- உண்மையில் இவ்வாறாகப் பணி நீட்டிப்பு பெறுபவர்கள் அனைவரும் துறைத் தலைவர் என்கிற பதவியில் இருப்பவர்கள். இவர்களுடைய கற்பிக்கும் பணி நேரம் என்பது அதே துறையில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களின் பணி நேரத்தைக் காட்டிலும் குறைவு. கற்பித்தல் பணியைத் தவிர்த்து கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர், கல்லூரியில் அமைக்கக்கூடிய பல்வேறு குழுக்களின் தலைவர் என்கிற மற்ற பணிகளில்தான் துறைத் தலைவர்கள் ஈடுபடுகின்றனர். ஆக, கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இவர்களுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது என்ற வாதம் நீர்த்துப்போகிறது.
- ஏற்கெனவே உள்ள பேராசிரியர் காலிப் பணியிடங்களைக் கெளரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்பும்போது, இடையில் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களையும் ஏன் கெளரவ விரிவுரையாளர்களைக் கொண்டு அரசு நிரப்பக் கூடாது? கடந்த அதிமுக ஆட்சியில், அரசின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58இல் இருந்து 60ஆக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது.
- இந்நிலையில், கல்லூரிப் பேராசிரியர்களின் பணி ஓய்வைக் கல்வி ஆண்டின் இறுதிவரை நீட்டிப்பதால் அரசுக்கு நிதிச் சுமை ஏற்படாதா? கல்லூரிகளில் கல்வி ஆண்டானது ஜூனில் தொடங்குகிறது. கல்வி ஆண்டு தொடங்கிய ஜூலை மாதத்திலோ, ஆகஸ்ட்டிலோ ஒரு பேராசிரியர் ஓய்வு பெற்றால் அவருக்கு அந்தக் கல்வியாண்டு முடியும் ஏப்ரல் வரை கிட்டத்தட்ட 9 மாதங்கள் பணி நீட்டிப்பை அரசு வழங்குமா? இவ்வாறாக தமிழ்நாடு முழுவதும் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பதால் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படாதா?
- பல ஆண்டுகளாக அரசுக் கல்லூரிகளில் நிரந்தரப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், இருக்கின்ற பேராசிரியர்களுக்கு இவ்வாறு பணி நீட்டிப்பு செய்து கொண்டே செல்வது ஏற்புடையது அல்ல. இடையில் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களை அக்கல்லூரியின் முதல்வர்களே கெளரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு அனுமதி வழங்க வேண்டும். மேற்கண்ட அரசாணையை ரத்து செய்து இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2024)