பேராசிரியர் பணியிட மாறுதல்: மாணவர் நலனிலும் கவனம் வேண்டும்
- தங்களுக்குப் பணியிட மாறுதல் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வரும் சூழலில், தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சகம் அதற்காக விரைவில் இணையவழிக் கலந்தாய்வு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதேவேளையில், அதைச் செயல்படுத்தும்போது மாணவரின் நலன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிற கல்விச் செயல்பாட்டாளர்களின் கருத்தும் புறக்கணிக்க இயலாதது.
- தமிழகத்தில் 171 அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் உள்ள 13,000 பணியிடங்களில் 4,500 பணியிடங்களில் மட்டுமே நிரந்தரப் பேராசிரியர்கள் இருப்பதாகவும் மீதமுள்ள 8,500 இடங்களில் கௌரவப் பேராசிரியர்கள் பணிபுரிவதாகவும் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கம் கூறுகிறது.
- நிரந்தரக் கல்லூரிப் பேராசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன், எஞ்சியிருக்கும் ஒருசில பேராசிரியர்களைப் பணியிட மாறுதலுக்காக ஆண்டுக்கணக்காகக் காத்திருப்பில் வைத்திருக்கக் கூடாது என்பதும் கல்லூரிப் பேராசிரியர் சங்கங்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
- போதுமான பொருளாதாரப் பலன்கள் இன்றிக் குறைந்த வருவாயில் பணிபுரிந்துவரும் கௌரவப் பேராசிரியர்களின் நிலை இன்னும் வருந்தத்தக்கதாக உள்ளது. இவர்கள் நடைமுறை ஊழியர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருப்பதால், பணியிட மாறுதலின்போது இவர்கள் பரிசீலிக்கப்படுவதே இல்லை. பலர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றனர். 2022இல் இவர்களில் 200 பேர்தான் பணியிட மாறுதல் பெற முடிந்தது.
- குறிப்பிட்ட கல்லூரியில் அமர்த்தப்பட்ட பேராசிரியர்கள், மாற்றுப்பணி (டெபுடேஷன்) என்கிற பெயரில் அருகமைக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதும் அதிகம் நடக்கிறது. ஆனால், நடைமுறையில் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அல்லாமல், ஒரு நாளைக்கு 50 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டிய இடங்களில் மாற்றப்படுவதாகவும் தாய்க் கல்லூரிகளுக்குத் திரும்புவதும் மிகவும் தாமதம் செய்யப்படுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
- பள்ளி ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான இணையவழிக் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு அவ்வப்போதைய தேவையைப் பொறுத்து நேரடிக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கும் வெளிப்படைத்தன்மையோடு கூடிய இணையவழிக் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை ஒலித்துவந்தது.
- அதற்குச் செவிமடுக்கும்வகையில், அரசுக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு இணையவழிக் கலந்தாய்வை நடத்தவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அண்மையில் கூறியுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. நிரந்தரப் பேராசிரியர் மட்டுமல்லாமல், கௌரவப் பேராசிரியர், மாற்றுப்பணியில் பணிபுரிவோர் போன்றோரின் பணி மாற்றிடக் கோரிக்கைக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
- இத்தகைய பணியிட மாறுதல் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக்கு உரியது. பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மே, ஜூன், ஜூலையில் முடிவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிடுகின்றனர். அரசுக் கல்லூரிகளுக்கும் அதே காலக்கட்டத்தில் பணியிட மாறுதல் பின்பற்றப்பட்டால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும்.
- மாணவர்கள் பருவத் தேர்வுகளுக்குத் தயாராகும் காலத்தில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டால், கற்பித்தலில் தேக்கம் நிகழச் சாத்தியம் உள்ளது. இணையவழிக் கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்க உள்ள அரசு, இத்தகைய சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கற்பித்தல் பணியில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்களும் மாணவர்களைப் பாதிக்காதவண்ணம் இடமாற்றம் தேட முயல வேண்டும்.
- நன்றி: இந்து தமிழ் திசை (20 – 11 – 2024)