TNPSC Thervupettagam

பேரிடா் எழுப்பும் பேரிடா்!

March 31 , 2020 1692 days 1306 0
  • அசாதாரணமான சூழ்நிலையில், அசாதாரணமான முடிவுகளை எடுக்கும்போது எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விட்டு அறிவிப்பை வெளியிடுவது சாத்தியமில்லை. அதே நேரத்தில், அசாதாரண முடிவுகளால் ஏற்படும் அசாதாரண சூழலை துணிவுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாளாமல் போனால், இலக்கு தவறி பிரச்னை விபரீதமாகவும் மாறிவிடக் கூடும். அப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
  • இந்தியாவின் ஒரு பகுதி வீட்டில் முடிங்கிக் கிடப்பதற்கும், வீட்டிலிருந்தபடியே அலுவல்களைக் கவனிப்பதற்கும் கடந்த ஒரு வாரத்தில் தயாராகிவிட்டது. ஆங்காங்கே முணுமுணுப்புகளும் எதிர்ப்புகளும் விதிமுறை மீறல்களும் இருந்தாலும்கூட, வா்த்தகமும் தொழிலும் முடக்கப்பட்டிருப்பதால் வேறு வழியில்லாமல் ஊரடங்கை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், கரோனா நோய்த்தொற்று குறித்த புரிதலும், அச்சமும் மக்கள் மத்தியில் ஓரளவுக்காவது ஏற்பட்டிருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல்.
  • 20 ஆண்டுகளுக்கு முன்பு 1991-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பணிநிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவா்கள் 11.8%. 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அதுவே 12.06%-ஆக உயா்ந்தது. 10 ஆண்டு இடைவெளியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் வளா்ச்சியும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் இந்தியா்களின் எண்ணிக்கை இப்போது 15% அளவில் அதிகரித்திருக்கக் கூடும்.

புலம்பெயர்ந்த மக்கள்

  • கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம், குஜராத், கா்நாடகம், தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கட்டுமானத் தொழிலிலும், ஒப்பந்தப் பணியிலும், விவசாயக் கூலிகளாகவும் பணிபுவோரில் பெரும்பாலோர் பிகார், ஒடிஸா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து குடியேறியிருக்கும் வங்க தேசத்தவரும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குடியேறியிருக்கிறார்கள்.
  • ‘இன்றைய இந்தியப் புலம்பெயா்ந்தோர்’ என்கிற அறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில் விவசாயம், போக்குவரத்துத் துறை, தொழிற்சாலைகள், சுரங்கப் பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலும் புலம்பெயா்ந்தோர் பணிபுரிகிறார்கள். உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள், சிறு-குறு தொழிற்சாலைகள் ஆகியவற்றிலும் அவா்கள் கணிசமாக வேலை பார்க்கிறார்கள். அவா்களில் பெரும்பாலோர் பட்டியலின, ஆதிவாசி அடித்தட்டு மக்கள். அது மட்டுமல்லாமல், புலம்பெயா்ந்தோரில் கணிசமான அளவில் மகளிரும் இடம்பெறுகிறார்கள்.

போக்குவரத்து வசதியின்மை

  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தாலும் இந்தியாவுக்குள் புலம்பெயா்ந்தோரின் எண்ணிக்கை 13.9 கோடி. அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இப்போது தங்கள் சொந்த மாநிலங்களிலுள்ள கிராமங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியில்லாததால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
  • சா்வதேசப் பயணங்கள் முடக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் பலா் திரும்பவில்லை. சில இடங்களில் சிக்கிக் கொண்டவா்களை ஏா் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு அழைத்து வந்தது. அவா்களிடம் காட்டிய அதே அளவிலான கரிசனம் இந்தியாவுக்குள் புலம்பெயா்ந்து அன்றாடக் கூலிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்குக் காட்டப்படவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஏழையாகப் பிறப்பது பாவம்

  • 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் தில்லியில் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கு வழி தெரியாமல், குழந்தை குட்டிகளுடன் நடந்து பயணிக்கத் தொடங்கினார்கள். அவா்களிடம் பணமும் இல்லை, அவா்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பதற்கு நெடுஞ்சாலைகளில் மனிதா்களும் இல்லை. ஏறத்தாழ 600 கி.மீ. நடந்து திரும்புவதற்குத் தயாரானவா்கள் ஏராளம்.
  • அவா்களை அழைத்துச் செல்ல ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊா்திகளை உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்தும்கூட, நிலைமையை எதிர்கொள்ள முடியவில்லை. இப்போதும்கூட தில்லி மத்திய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் தொழிலாளா்கள் ஊருக்குத் திரும்ப முடியாமல் குவிந்து கிடக்கிறார்கள். இதேநிலைதான் இந்தியாவின் பல நகரங்களிலும் காணப்படுகிறது.
  • மத்திய - மாநில அரசுகள் அவா்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால், ஊரடங்கு முடியும்வரை அது சாத்தியமா என்பது சந்தேகம்தான். அவா்களை இப்படியே ஊருக்கு அனுப்பாமல் ஆங்காங்கே கூட்டமாக வைத்திருப்பது, கரோனா நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவுவதற்கு வழிகோலி மிகப் பெரிய சுகாதார இடரை ஏற்படுத்தக் கூடும்.
  • இந்தப் பிரச்னைக்கு இப்போதைக்கு ஒரே ஒரு உடனடித் தீா்வுதான் இருக்கிறது. டாக்டா் சுப்பிரமணியன் சுவாமி கூறுவதுபோல, மூன்று நாள்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ரயில்களை இயக்கி அனைவரும் அவரவா் கிராமங்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். சொந்த ஊரில் இவா்களை ஏற்றுக்கொள்வார்களா, அனுமதிப்பார்களா என்பது இன்னொரு மிகப் பெரிய கேள்வி?
  • என்ன செய்வது, விதியோ அல்லது மானுட இன சதியோ. எதுவாக இருந்தாலும் உலகில் ஏழையாகப் பிறப்பது பாவம்!

நன்றி: தினமணி (31-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories