பொதுத் துறை நிறுவனங்களை இழந்துவிடக் கூடாது!
- காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மத்திய அரசு அதிகரிக்கப்போவதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.
- வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிற பிரிமியம் தொகை முழுவதையும் இந்தியாவிலேயே முதலீடு செய்கிற நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்கிற நிபந்தனையுடன் இந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், இதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகளையும் அரசு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- எதிர்பாராத பேரிழப்பின்போது பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி கிடைக்கச் செய்வதுதான் காப்பீட்டின் அடிப்படை. இந்தியக் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு முதன்முதலாக 2000இல் அனுமதிக்கப்பட்டது. முதலில் 26 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு, 2015இல் 49 சதவீதமாகவும் 2021இல் 74 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. ‘2047க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்கிற இலக்கை அடைவதற்கான ஒரு நடவடிக்கையாகத் தற்போது 100 சதவீதத்துக்கு நிதி அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
- 2016-2017 கணக்கெடுப்பு ஒன்றின்படி, இந்திய மக்கள்தொகையில் 75 சதவீதத்தினர், எந்த ஓர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திலும் தம்மை இணைத்துக்கொள்ளவில்லை. 2023 தரவுகளின்படி, 31 சதவீதம் பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிமியம் தொகையின் சதவீதத்தைக் கொண்டு கணக்கிடப்படும் காப்பீட்டின் பரவல், மொத்த மக்கள்தொகைக்கும் பிரிமியம் தொகைக்குமான விகிதமான காப்பீட்டு அடர்த்தி ஆகிய இரண்டிலும் ஐரோப்பிய நாடுகளைவிட, இந்தியா பின்தங்கியே உள்ளது.
- பெரும்பான்மையினரைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதோடு, தங்களுக்கான திட்டத்தையும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுப் பதில் வாடிக்கையாளர்களுக்குப் பல வகைப்பட்ட வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்கிற கருத்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
- நாட்டின் பொருளாதாரத்துக்கு ரத்த ஓட்டமாகக் கருதப்படும் வங்கித் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக இருக்கையில், காப்பீட்டில் மட்டும் 26 சதவீதமாக ஏன் இருக்க வேண்டும் என 2013இல் மத்திய அரசின் அப்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்கூட அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகக் கேள்வி எழுப்பினார்.
- இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதுமிருந்து இந்தியாவுக்கு அதிக முதலீட்டைப் பெற்றுத்தரும் என்பதோடு, காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே போட்டிச்சூழலை அதிகரித்து, அவற்றின் சேவைகள் தரமடைய வழிவகுக்கும் எனவும் அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
- காப்பீட்டுத் திட்டங்களுக்கான சராசரி பிரிமியம் தொகை குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. நிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்; காப்பீட்டுத்தொகை தாமதமின்றி அளிக்கப்பட இயலும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- காப்பீட்டுச் சந்தையில் தனியார் நிறுவனங்கள் ஏறக்குறைய 37 சதவீதத்தைக் கொண்டுள்ளபோது, பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி 63 சதவீதத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் தனியார் நிறுவனங்களைவிட, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மீது அதிகப் புகார்கள் பதிவாகின்றன.
- ஆனால் நேர்மையற்ற வணிக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடர்பான புகார்களுக்கு அதிகளவில் தனியார் நிறுவனங்களே உள்ளாவது கவனிக்கத்தகுந்தது. சேவை மனப்பான்மையோடு செயல்படும் பொதுத் துறை நிறுவனங்கள் அவ்வப்போது தவறுகள் இழைத்தாலும், அவற்றின் இடத்தை வணிக நோக்கத்துடன் மட்டுமே செயல்பட முடிகிற வெளிநாட்டு நிறுவனங்கள் நிரப்ப முடியாது.
- சேவை வழிமுறைகளை இயன்றவரை எளிமைப்படுத்துவது, இன்னும் மின்னணுமயமாக்கம் செய்ய வேண்டிய யதார்த்தம்; அதனால் சைபர் குற்றங்களுக்கு உள்ளாகும் சாத்தியம், காப்பீட்டுத் திட்டங்கள் இயற்கைப் பேரிடர் நெருக்கடிகளால் குலைந்துபோவது போன்ற சவால்கள் இரு தரப்புக்குமே உள்ளன. இந்தச் சூழலில், அந்நிய நிறுவனங்களின் கூடுதல் பங்கேற்பால் பொதுத் துறை நிறுவனங்கள் முடங்கிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2025)