TNPSC Thervupettagam

பொது சிவில் சட்ட எதிர்ப்பு தவறானது

June 29 , 2023 568 days 960 0
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் ‘பொது சிவில் (உரிமையியல்) சட்டம்’ என்று மீண்டும் ஒரு தேசிய சர்ச்சையைப் பற்றவைக்க பாஜக அரசு தொடங்கியுள்ள முயற்சிக்கு, எதிர்பார்த்ததைப் போலவே பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அது விரித்த வலைக்குள் விழுகின்றன.
  • பொது சிவில் சட்டம் கூடாது என்று எல்லா பெரிய எதிர்க்கட்சிகளுமே கண்டித்துள்ளன. மத்திய சட்ட ஆணையம் ஏன் இந்தப் பிரச்சினையை மீண்டும் ஆராய வேண்டும் என்று கேட்டு, பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அணி திரண்டுள்ளன. இந்த முயற்சி சிறுபான்மைச் சமூகத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது என்று, பல முஸ்லிம் அமைப்புகள் ஒருபடி மேலே சென்று கண்டித்துள்ளன. ஆக, மிகவும் சோகமானதும் நகைமுரண் மிக்கதுமான ஒரு சித்தாந்த போராட்டத்துக்குக் களம் தயாராகிக்கொண்டிருக்கிறது; அரசமைப்புச் சட்டமே வாக்குறுதி தந்த பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வலதுசாரி கட்சியான பாஜக கோருகிறது, மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடிக்கும் எதிர்க்கட்சிகள் - அது கூடாது என்று எதிர்க்கின்றன!

பொது சிவில் சட்டம்

  • பொது சிவில் சட்டம் என்பது எந்த மதத்தின் மரபுகளையும் நடைமுறைகளையும் தடுப்பது அல்ல; அவரவர் மதங்களுக்கான உரிமைகளைப் பின்பற்றும் அதேவேளையில், ‘அரசமைப்புச் சட்டம் முன் அனைவரும் சமம்’ என்பதையும்  உறுதிசெய்வதே பொது சிவில் சட்டம்.  ஆண் – பெண் பால் அடிப்படையிலான உரிமை மறுப்புகளை நீக்குவதும் அதன் நோக்கம்.
  • பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் மோசமான அரசியல் உத்தி. மக்களவைக்கு 2024 பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பொது சிவில் சட்டம் கூடாது என்று பேசுவது தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் திரும்பவே வழி செய்யும்.
  • நாடு முழுவதற்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எளிமையானது, வலுமிக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் தண்டனைச் சட்டம் பொதுவாக இருக்கும்போது சிவில் சட்டம் மட்டும் ஏன் பொதுவாக இருக்கக் கூடாது? பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த பிறகும்கூட அவரவர் மத வழக்கப்படியான சடங்குகளை நிறைவேற்றவும் மரபுகளைக் கடைப்பிடிக்கவும் தடை ஏதும் வரப்போவதில்லை. ஆனால், தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக யாரும், எதுவும் செய்ய முடியாமல் தடுப்பதே பொது சிவில் சட்டம். ஒரு மதத்தினரின் மரபுகளையும் சடங்குகளையும் நிறைவேற்றும்போது, மகளிருக்கு அளித்துள்ள சம உரிமைகளை அந்த மதமோ சமூகமோ மறுப்பது சரியா? 
  • இவையெல்லாம் பாஜக முன்வைக்கும் வாதங்கள் அல்ல; இவையெல்லாம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கோரும் மகளிர் அமைப்புகளின் வாதங்கள். இந்தக் கோரிக்கைகள், அரசமைப்புச் சட்ட தேசியப் பேரவையில் கருத்தொற்றுமை மூலம் ஏற்கப்பட்டவை. இந்தக் கோரிக்கைகளை அரசமைப்புச் சட்டத்தின் ‘வழிகாட்டு நெறிகள்’ பட்டியலில் சேர்க்கவும் உத்தேசிக்கப்பட்டது.
  • இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை காரணமாக இந்த முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. பொது சிவில் சட்டத்துக்கான வாதங்களை முன்வைத்தவர்கள் ஜவாஹர்லால் நேரு, பாபா சாஹேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா போன்றவர்கள். இந்த அடிப்படையில்தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் சுதந்திர இந்தியாவில் வலியுறுத்தின.
  • நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து அமல்படுத்துமாறு கூற முடியாத வழிகாட்டு நெறிகளில் உள்ளடங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 44வது கூறு: “இந்தியா முழுவதற்கும் செல்லுபடியாகக்கூடிய அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டத்தை உருவாக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”
  • அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் நாம், அதில் ஒரு அம்சம் மட்டும் கூடாது என்று விலக்கு கோர முடியாது. சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளுக்குப் பிறகும், பொது சிவில் சட்டத்துக்கு நாடு இன்னமும் தயாராகவில்லை என்றும் கூற முடியாது.

உள்ளடக்கத்தைக் கேளுங்கள்

  • பொது சிவில் சட்டம் இப்போது கூடாது என்ற எதிர்ப்பு நியாயமாக இருந்தாலும், அது தவறாகவே பொருள் கொள்ளப்படும். மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் - மோடி அரசு பதவிக்கு வந்த உடனேயே நியமித்த மத்திய சட்ட ஆணையம் இந்த கோரிக்கையை விரிவாக விவாதித்து நிராகரித்துவிட்டபோதிலும் - இதைக் கொண்டு வருவதற்கான ஒரே நோக்கம் சிறுபான்மைச் சமூகத்தை தேர்தல் மேடைகளில் சாடுவதுதான்.
  • இந்துக்களுடைய குடும்பச் சட்டங்களைத் திருத்தி வலுக்கட்டாயமாக அதைத் திணித்த காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் – கிறிஸ்தவர்களுடைய உரிமைகளைத் திருத்தவோ, மாற்றவோகூட தயங்குகிறது என்று அதன் எதிர்ப்புக்கு உள்ளர்த்தம் கற்பிக்க இந்த எதிர்ப்பு உதவும்.
  • பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற உணர்வில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடைகளில் கைகோப்பதும் ஒன்றுசேர்ந்து முழுங்குவதும் எதிர் அணிக்கு சாதகமாகவே மாறும். முத்தலாக் தடை சட்டத்துக்கு தெரிவித்த எதிர்ப்பு, முனை மழுங்கி தோற்றதைப் போலவே இதிலும் நேரிடும். பாஜகவின் அரசியல் கண்ணி வெடியில் எதிர்க்கட்சிகள் மீண்டும் சிக்குவதுதான் நடக்கும்.

என்ன செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகள்?

  • பொது சிவில் சட்ட முயற்சியை எதிர்ப்பதற்குப் பதிலாக, பொது சிவில் சட்டம் என்பதை எந்த வடிவில் என்னென்ன கூறுகளுடன் கொண்டுவர விரும்புகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டும். அந்தப் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேலையை விட்டுவிட்டு அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டது என்று ஆராய வேண்டும். அது தொடர்பாக பொது விவாதம் கோர வேண்டும். மரபுவழி நடக்கும் மத அமைப்புகளின் கட்டுப்பெட்டித்தனத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பும் மகளிர் அமைப்புகளிடம் இருந்து இதற்கான பாடங்களை எதிர்க்கட்சிகள் கற்க வேண்டும். கண்ணியமான முறையில், அரசின் நோக்கம் குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டும். 21வது சட்ட ஆணையம் தயாரித்த விரிவான, தெளிவான, தர்க்கரீதியிலான அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு விவாதிக்க வேண்டும்.
  • ‘பொது சிவில் சட்டம்’ என்பதன் உட்பொருளை அறியாமல், ‘அது எல்லோருக்கும் பொதுவானது’ என்று மட்டும் புரிந்துகொண்டு பாரதிய ஜனதா இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறது. ‘பொது’ என்றால் எல்லோருக்கும் ஒரே சட்டம், நடைமுறை என்றே அது புரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் எல்லா குடும்பங்களுக்கும் ஒரே குடும்பச் சட்டம் என்று அது நினைக்கிறது. திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல் (ஸ்வீகாரம்), வாரிசுரிமை அடிப்படையில் குடும்பச் சொத்தைப் பகிர்ந்து கொள்ளுவது ஆகியவை தொடர்பாக ‘குடும்பச் சட்டங்கள்’ என்ற பொதுப் பெயரில் சிவில் சட்டங்கள் இருந்தாலும் அவை அந்தந்த மதங்களுக்கு உரிய வகையிலேயே இருக்கும். ஆனால், அப்படியல்லாமல் அனைத்து மதத்தவருக்கும் ஒரே – பொது சிவில் சட்டமாக இருக்க வேண்டும் என்றே திணிக்க பாஜக விரும்புகிறது. இதைத்தான் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்களும் எதிர்க்கிறார்கள். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறி கூறுவது பாஜக விரும்பும் பொது சிவில் சட்டத்தை அல்ல.

பொது சிவில் சட்டத்தில் எது பொது?

  • சமூக சீர்திருத்தர்கள், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், மகளிர் அமைப்புகள் வலியுறுத்திய பொது சிவில் சட்டம் என்ற கருத்தில், பொது என்பதற்கு விரிவான பொருள் உண்டு. இங்கே பொது என்பது ஒற்றைச் சட்டம் என்றோ, ஒரே மாதிரியான சட்டம் என்றோ பொருள் கிடையாது. ‘பொதுவான லட்சியங்கள் ஆனால் வெவ்வேறு விதிகள்’ என்பதே அதன் இலக்கணம்.
  • பருவநிலை மாறுதல்கள் தொடர்பான சட்டங்களை இயற்ற நிகழ்த்தும் விவாதங்களில் கூறப்படுவதைப் போல, ‘நோக்கம் பொது - வழிமுறைகளும் நடைமுறைகளும் அவரவர் நாடுகளுக்கு ஏற்ப’ என்பதைப் போலத்தான் பொது சிவில் சட்டமும். எல்லா மதங்களும் சமூகங்களும் ஒரே மாதிரியான அரசமைப்புச் சட்ட வழிகாட்டல் நெறிகளுக்கு உள்பட்டவர்கள். எந்த மதத்தின், சமூகத்தின் குடும்ப சட்டமும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையோ, பாரபட்சமாக நடத்தக் கூடாது என்பதையோ, பாலின சமத்துமின்றியோ செயல்பட பொது சிவில் சட்டம் அனுமதிக்காது. இந்த லட்சியங்களுக்கு எதிரான மரபுகளோ சட்டமோ எந்த மதத்திலாவது சமூகத்திலாவது இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும். அதேசமயம், இந்தப் பொதுக் கொள்கைகளும் வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு வடிவிலும், அவர்களுடைய வழக்கம் அல்லது விதிகளின் தொகுப்புகளுக்கேற்ப மாறுபடும்.
  • இந்து மதத்தில் உள்ளதைப் போல அல்லாமல் இஸ்லாமியத் திருமணங்கள் வாழ்க்கை ஒப்பந்தமாகும். பொது சிவில் சட்டம் வந்தால் முஸ்லிம்கள் இப்போதைய நிக்காநாமாவைக் கைவிட வேண்டியதுமில்லை, இந்துக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டியதும் இல்லை. திருமணம், மணவிலக்கு, ஸ்வீகாரம், சொத்துரிமை ஆகியவற்றில் வெவ்வேறு மரபுகளையும் வழிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றலாம் - அவை அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளுக்கு முரணாக இல்லாதவரை.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவர அனைவரும் ஒப்புதல் அளித்தாலும் அது ஒரே இரவில் வந்துவிடாது. ஒரேயொரு சட்டம் மூலம் முன்பிருந்த சட்டங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிடவும் முடியாது. பொது சிவில் சட்டம் வர வேண்டும் என்றால் மூன்று முக்கியமான - விரிவான சட்ட மாற்றங்களும் அவசியம். முதலாவதாக, இப்போதுள்ள தனிச் சட்டங்களை 21வது சட்ட ஆணையம் பரிந்துரைத்தபடி பெருமளவில் சீர்திருத்தியாக வேண்டும்.
  • இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிற - சிலரால் மட்டும் இன்னமும் கடைப்பிடிக்கப்படுகிற - பலதார மணத்தைக் கட்டுப்படுத்தவும் அதை கைவிடும் வகையிலும் சட்டத்தைத் திருத்த வேண்டும்; முஸ்லிம் மகளிரின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சட்டப்படி அனுமதியில்லை என்றாலும் இந்து மதத்திலும் சிலரால் நடைமுறையில் இருக்கும் பலதார திருமண வழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், இந்துப் பெண்களின் நலனையும் உறுதி செய்ய வேண்டும், கிறிஸ்தவ சமூகத்தில் மணவிலக்கு நடைமுறையையும் ஸ்வீகார நடைமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும், சிறப்புத் திருமணச் சட்டப்படி மணம் செய்து கொள்வதற்கான முன்னறிவிப்பு காலத்தைக் குறைக்க வேண்டும்.
  • இந்து சட்டத்தில் உள்ள மரபுவழி வாரிசுகளுக்கான இணையுரிமையை ரத்துசெய்வது, கூட்டுக் குடும்பங்களுக்கு வரி விதிப்பில் அளிக்கும் சலுகையை ரத்துசெய்வது ஆகியவற்றையும் மேற்கொண்டாக வேண்டும். இந்த மாற்றங்களுக்கு பெரும்பான்மை மதமும் சிறுபான்மை மதங்களும் கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவிக்கும். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்த அழுத்தங்களுக்கு இரையாகிவிடாமல் சீர்திருத்த உணர்வுடன் எதிர்த்து நிற்க வேண்டும்.
  • இரண்டாவது சட்ட மாறுதல், இதுவரை வெவ்வேறு சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் மரபுரிமைகள், சடங்குகள் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து சட்டத்தில் சேர்ப்பது. பல வழக்கங்கள் இன்னமும் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாதவை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால் எந்த மதச் சட்டமாக இருந்தாலும் குழந்தையின் எதிர்கால நலனைக் கருதித்தான் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.
  • மூன்றாவது, சிறப்புத் திருமணச் சட்டத்தின் எல்லையை விரிவாக்குவது. இப்போதுள்ள எந்தச் சமூக சட்டத்தையும் விரும்பாதவர்களும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். கோவாவில் இது நடைமுறையில் உள்ளது. கோவாவைச் சேர்ந்த எந்த மதத்தவரும் இந்த சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம். இந்த வகையில்தான் மக்கள் தாங்களாகவே ஏற்கும் வகையில் சிவில் சட்டத் தொகுப்பு இருக்க வேண்டும் என்று விரும்பினார் அம்பேத்கர்.
  • நீண்ட காலமாகவே மதச்சார்பற்ற அரசியல் காலிசெய்யும் இடத்தை பாஜக ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொது சிவில் சட்டமும் அப்படியாகிவிடக் கூடாது. பொது சிவில் சட்டமே கூடாது என்று ஓடிப்போவதைவிட, இந்த வகையில்தான் இது இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது அவசியம்.
  • பாஜகவின் அரசியலை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மதவாதிகளுடன் கைகோப்பது பாஜக எதிர்பார்க்கும் வசனங்களை அப்படியே ஒப்பிப்பதாக ஆகிவிடும். பாஜகவின் மோசடியை மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் அம்பலப்படுத்த வேண்டும் என்றால் அர்த்தமுள்ள பொது சிவில் சட்டத்துக்கான வரைவு வாசகங்களைத் தயாரிக்க வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (29  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories