TNPSC Thervupettagam

பொது வாழ்விலிருந்து ஓய்வு எப்போது?

July 28 , 2024 6 hrs 0 min 39 0
  • அமெரிக்காதான், என் தாய் நாட்டைப் போலவே நான் அதிகம் அறிந்த நாடு. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை சென்றேன், அதற்குப் பிறகு பல முறை சென்றிருக்கிறேன். கடைசியாக 2023இன் வசந்த காலத்தில் அங்கிருந்தேன், அப்போது ஜோ பைடன் அதிபராகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மூன்று வாரங்கள் அங்கிருந்தபோது நண்பர்களுடன் உரையாடியது மட்டுமல்லாமல் ஊடகங்கள் வாயிலாகவும் அங்கு நடப்பதைத் தெரிந்துகொண்டேன்.
  • நாட்டின் அதிபராக ஜோ பைடன் சிறப்பாகச் செயல்பட்டுவந்தார். டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் மக்களிடையே ஏற்பட்டிருந்த விஷப் பிளவை சரிசெய்திருந்தார். வயது மூப்பு, உடல்நிலையில் தளர்வு காரணமாக இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு அவர் போட்டியிட்டிருக்கவே கூடாது, தனக்குப் பதிலாக இன்னொருவரை வேட்பாளராக கட்சி தேர்ந்தெடுக்க அனுமதித்திருக்க வேண்டும்.
  • மூப்பு காரணமாக தன்னுடைய உடல், மனநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அவதானிக்கத் தவறிவிட்டார் பைடன். இரண்டாவது முறை அதிபராகப் போட்டியிட அடம்பிடித்தார். டொனால்ட் டிரம்புடனான தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் அவருக்கு சரியாக ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். அவர் சார்ந்த ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களுமே, ‘போதும் நீங்கள் போட்டியிட்டது விலகிவிடுங்கள்’ என்று வற்புறுத்தி அழுத்தங்களை அதிகரித்தனர்.
  • மக்களிடையேயான கருத்துக் கணிப்பில் அவர் செல்வாக்கு வேகமாக சரியத் தொடங்கியது. அப்படியும்கூட மேலும் சில வாரங்களுக்கு, போட்டியிலிருந்து விலக மாட்டேன் என்றே தீவிரம் காட்டினார், கடைசியில் அவருடைய குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களுமே செலுத்திய செல்வாக்கால் வெளியேற சம்மதித்தார்.
  • பதவியில் ஒட்டிக்கொள்ள பைடன் முயன்றது, ஏதோ அவர் மட்டும் செய்த காரியம் அல்ல. மிக உயர்ந்த பதவியில் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றவர்கள் அனைவருமே, தங்களுடைய உடல் - மனநிலை இடம் தராவிட்டாலும் தங்களுடைய ஆட்சியால் மக்களுக்குத் திருப்தியும் நாட்டுக்கு நன்மையும் இல்லாவிட்டாலும் பதவியைத் துறக்க அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
  • அரசு நிர்வாகமும் மக்கள் சமூகமும் எவ்வளவு பாதிப்பு அடைந்தாலும், மக்களிடையே அவர்களுடைய ஆதரவு மேலும் சரிந்தாலும்கூட பதவியை விட்டு விலக மனம் இடம் தராது.

கிரிக்கெட்டில் இது வழக்கம்

  • இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதில் கசப்பான அனுபவங்கள் நிறைய உண்டு. முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்டால் எந்தக் கிரிக்கெட் வீரராலும் தொடக்க காலம்போல் உடலை வில்லாக வளைக்கவோ, ஓடவோ, பந்துகளை வீசவோ – அடிக்கவோ முடியாது. முந்தைய காலம்போல் அவர்களால் ஆட்டத்தில் சோபிக்கவும் முடியாது. மிகச் சிலர்தான் இதைத் தாங்களாகவே உணர்கின்றனர். சுநீல் காவஸ்கர் இதில் விதிவிலக்கு. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடிய பிறகு, ஓய்வை அறிவித்தார்.
  • அவருடைய தங்கைக் கணவரும் அணித் தோழருமான ஜி.ஆர்.விசுவநாத், ஓய்வுபெற்ற காலத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக - தானாகவே விலகியிருக்க வேண்டியவர். கபில் தேவ்கூட இதில் காலம் தாழ்த்தினார், சச்சின் டெண்டுல்கரும் அப்படியே. அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தும் சாதனைக்காகவும் அதிக மேட்சுகளில் விளையாடியவர் என்ற சாதனைக்காகவும் இருவரும் அப்படித் தொடர்ந்தனர்.
  • போதும் இந்தப் பொறுப்பு, இளைய தலைமுறைக்கு வழிவிடுவோம் என்று முடிவெடுக்காமல் - இன்னும் சில காலம் சில ஆண்டுகள் இப்படியே பதவியில் நீடிப்போம் என்ற ஆசை, அரசியல் – கிரிக்கெட் தவிர பிற துறைகளில் உள்ளவர்களிடமும் காணப்படுகிறது. நம் நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவிய தொழிலதிபர்கள் அடுத்து பொறுப்புகளை ஏற்க மகன், மருமகன், பேரன்கள் என்று இளைய தலைமுறையினர் வந்த பிறகும்கூட தலைமைப் பொறுப்பை விட்டுக்கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
  • தன்னால் நிறுவனத்துக்கு இனி அதிகம் நன்மைகளைச் செய்துவிட முடியாது என்று தெரிந்தும்கூட, ஏற்கெனவே பழகிய வட்டங்களில் கிடைக்கும் மதிப்பு, மரியாதை, கௌரவத்துக்காகத் தொடரவே விரும்புகிறார்கள். இது உலக சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் பரவியிருக்கிறது.

அறிவுலகிலும் கூட ஆசை…

  • அரசியல், விளையாட்டு, தொழில் துறை மட்டுமல்ல அறிவுலகிலும் இப்படி தலைமையை விட்டு இறங்க மனமில்லாத பற்று தொடர்கிறது. ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ (இபிடபிள்யு) என்பது இந்திய அறிவாளிகளால் மிகவும் போற்றப்படும், சமூக ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரிக்கும் வாரப் பத்திரிகை. பாம்பே நகரிலிருந்து வெளிவரும் இந்தச் சமூக அறிவியல் வாரப் பதிப்புக்கு, சர்வேதச அரங்கில்கூட மதிப்பும் மரியாதையும் உண்டு.
  • இந்தப் பத்திரிகையில் தங்களுடைய கட்டுரை வெளியாக வேண்டும் என்று இந்திய அறிஞர்களும் வெளிநாட்டு இளம் அறிஞர்களும் போட்டிப் போடுவார்கள், அதேபோல அதில் வரும் கட்டுரைகள் அனைத்தையும் உடனுக்குடன் படித்துவிட வேண்டும் என்றும் துடிப்பார்கள். சமீப ஆண்டுகளாக இந்த வாரப் பத்திரிகை பொலிவிழந்துவருகிறது. இப்போது அதில் வரும் கட்டுரைகளில் ஏதாவதொன்று சில வேளைகளில் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறது. அறிவாளிகளிடையே விவாதங்களை மூட்டுவதில் முக்கியப் பங்கு வகித்த அந்தப் பத்திரிகை இப்போது களையிழந்து, ஆதரவும் குறைந்து தேய்ந்துவருகிறது.
  • இதற்கு முக்கிய காரணம் இந்தப் பத்திரிகையை நீண்ட காலமாக நடத்திவரும் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் இதில் ‘ஆயுள்கால’ உறுப்பினர்கள், அவர்களில் பலர் நீண்ட ஆயுளால் இதில் தொடர்கிறார்கள். அந்த அறக்கட்டளை உறுப்பினர்களிலேயே மிகவும் இளையவருக்கே வயது 67தான்; மிக மூத்தவருக்கு வயது 93! மொத்த உறுப்பினர்கள் பத்து பேரில் ஒன்பது பேர் ஆண்கள். அறக்கட்டளை உறுப்பினர்களின் சராசரி வயது எழுபது அல்ல - எண்பது.
  • சமூக அறிவியல் துறைகளில் மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை தங்களுடைய முப்பதுகள் அல்லது நாற்பதுகளில்தான் அதிகம்பேர் எழுதுகின்றனர். இவ்வாறு கட்டுரைகளைத் தருவோரின் வயது இளமையாகவும், அதைத் தேர்வுசெய்கிறவர்கள் வயது மூப்பாகவும் இருந்தால் மிகச் சிறந்த ஆக்கங்கள் எப்படித் தேர்வுபெறும்? இத்தகைய பொருத்தமற்ற தேர்வால் அந்தப் பத்திரிகைதான் எப்படி வாசகர்களால் போற்றப்படும்?

தேசிய உயிரியல் ஆய்வு மையம்

  • தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் ‘இபிடபிள்யு’ இப்படி மதிப்பிழந்ததற்கு மாறாக, பெங்களூருவில் உள்ள ‘உயிர்-அறிவியல் தேசிய ஆய்வு மையம்’ (என்சிபிஎஸ்) மிகத் துடிப்பாக இன்றளவும் செயல்படுகிறது. 1940களில் பம்பாயில் ‘டாடா அடிப்படை அறிவியல் ஆய்வுக் கழகம்’ (டிஐஎஃப்ஆர்) தொடங்கிய பிறகு பெங்களூருவில் தொடங்கப்பட்டதுதான் ‘என்சிபிஎஸ்’. அதன் முதல் பதினைந்தாண்டுகளில் இயற்பியல் – கணித அறிஞர்கள் நிறுவனத்தில் கோலோச்சினார்கள்.
  • 1960களில் உபைத் சித்திகி என்ற இளம் உயிரியல் அறிஞர் இந்த நிறுவனத்துக்குத் தேர்வானார். வேறு ஆய்வு நிறுவனங்களில் இருபதாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி பயிற்சி பெற்ற சித்திக், இந்த ஆய்வு நிறுவனத்துக்குப் புதிய சிந்தனைகளோடு புதிய தேடல்களோடு வந்தார்.
  • எனக்கு சமூக அறிவியல் பாடங்களில்தான் பயிற்சி அதிகம் என்றாலும் அறிவியல் அறிஞர்களுடன் நட்புடன் தொடர்கிறேன். என்னுடைய பெற்றோரில் ஒருவரும் மூதாதையரும் அறிவியலாளர்கள். ஆரம்ப காலத்தில் நானும் இந்திய அறிவியல் ஆய்வுக் கழகத்தில் படித்தேன். எனக்குத் தெரிந்து இந்திய ஆய்வு நிறுவனங்களிலேயே என்சிபிஎஸ்ஸில் மட்டுமே அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் அல்லது வீச்சு குறைவு. இங்கே அறிஞர்கள் சுமுக உணர்வோடு எதையும் கலந்து விவாதிக்கும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவர்கள்.
  • ஒன்றிய அரசின் அறிவியல்-தொழில் துறை ஆய்வுகளுக்கான 36 தேசிய ஆய்வகங்களில் இப்படியொரு சூழலைப் பார்ப்பது அரிது. மிகவும் பெரிதாக புகழப்படும் ஐஐடி போன்ற இந்தியத் தொழில்நுட்ப உயர்கல்விக்கூடங்களில்கூட டீன்களாகவும் இயக்குநர்களாகவும் இருக்கும் மூத்த ஆண்மக்கள், அவர்களுடைய ஆய்வுலக சகாக்களாலும் இயக்குநர்களாலும் மிகவும் மரியாதையாகவும் போற்றுதலுடனும் நடத்தப்படுகின்றனர். அந்த டீன்கள், இயக்குநர்களைவிட இளவயது ஆராய்ச்சியாளர்கள் நிறைய சாதனைகள் படைத்திருந்தாலும், சமமாகப் பழகுவதில்லை.
  • உபைத் சித்திகியைப் பலமுறை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன், நிறுவனத்தில் முழு ஜனநாயகத்தன்மையும் பங்கேற்பு மரபுகளும் வேரூன்ற அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அவர் பகட்டையோ, அதிகார வர்க்க செல்வாக்கையோ விரும்பியதில்லை. அறிவியல் ஆய்வுகளை மிகச் சிறப்பாக செய்பவர்கள் இளைஞர்களே என்பதை அறிந்திருந்தார். அவர்களுடைய திறமை வெளிப்பட உரிய இடத்தையும் ஊக்குவிப்புகளையும் அளித்தார். அவர்களையும் தன்னைப் போலவே ‘வார்க்க’ முயற்சிக்கவில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட உலகிலும் நடப்பவற்றை அறியும் ஆர்வம் அவருக்கிருந்தது. எனவே மெய்யியலாளர்கள், வரலாற்று அறிஞர்கள், சமூக அறிவியலாளர்களுடன் உரையாடி கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்.
  • இயக்குநராக பதவி வகித்த காலம் முடிந்தவுடன், அதிகார மையத்தை (பதவி நீட்டிப்புக்காக) வட்டமடித்துக்கொண்டிருக்கவில்லை சித்திகி. பொறுப்பை தன்னைவிட வயதில் இளையவரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். அவருக்குப் பிறகு இரண்டாவதாக வந்த இயக்குநர் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மிகச் சிறந்த அறிவியலாளரிடம் பொறுப்பை அதேபோல ஒப்படைத்தார். நான்காவதாக இந்தப் பதவிக்கு வந்துள்ள இயக்குநர், என்சிபிஎஸ் அமைப்பில் இருந்தே இல்லை. புதிய எண்ணங்கள் – அனுபவங்களோடு தலைமைக்கு வந்திருக்கிறார்.

பைடனும் சித்திக்கும்

  • வழக்கமான இந்தியர்களைப் போல சித்திகி இருந்திருக்காவிட்டால், என்சிபிஎஸ் இந்த அளவுக்குத் துடிப்பும் வளர்ச்சியும் பெற்றிருக்காது.
  • நிறுவன வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் - அதன் கட்டமைப்பு. நிறுவன இயக்குநர் அன்றாடப் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வார். அவருக்கும் மேல், வழிகாட்டவும் தீர்மானிக்கவும் 15 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக வாரியம் இருக்கிறது. அதில் ஐந்து பேர் இந்திய அரசின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் – பதவி வழி உறுப்பினர்கள் (எக்ஸ் அஃபிஷியோ), டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையம் போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய பத்து பேரும் அறிவியலாளர்கள், அவர்களில் ஐந்து பேர் பெண்கள்.
  • என்சிபிஎஸ் வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். ஓரிரு முறை மட்டுமே நீட்டிப்பு இருக்கும், நிரந்தரமாகவோ, நீண்ட காலமாகவோ இருந்துவிட முடியாது. இபிடபிள்யுவைப் போல இங்கே ஆயுள்கால உறுப்பினர்கள் இல்லை. என்சிபிஎஸ்ஸில் அதிகபட்சம் 9 ஆண்டுகள்தான் உறுப்பினராக இருக்க முடியும். ‘இபிடபிள்யு’வில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர்.
  • சக்திவாய்ந்த பெண்கள் – செல்வாக்கு மிக்க பெண்களும் உயர் பதவிக்கு வந்தால் இந்த மனப்போக்குக்கு விதிவிலக்கு அல்ல என்றாலும், ஆடவர்களிடம் இது அதிகமாகவே இருக்கிறது. இதில் உபைத் சித்திகி விதிவிலக்கு.
  • அரசியல், விளையாட்டு, தொழில், சமூக அமைப்புகள், கல்வி அமைப்புகள் ஆகியவற்றில் ஏராளமானவர்கள் ஜோ பைடனைப் போலத்தான் முதுமையும் தளர்வும் வந்த பிறகும் பதவியை விட்டுக்கொடுக்காமல் நீடிக்கவே விரும்புகின்றனர். அவர்களுடைய இந்தக் குறுகிய பார்வையுள்ள சுயநல நோக்கத்தால் திறமை வாய்ந்த அவர்களுடைய இளம் தோழர்களும் சமூகமும் ஒட்டுமொத்தமாக இழப்புகளைத் தாங்க நேர்கிறது.

நன்றி: அருஞ்சொல் (28 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories