TNPSC Thervupettagam

பொருத்தமானவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது அமைதிக்கான நோபல் பரிசு

October 18 , 2019 1897 days 933 0
  • இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அதற்குப் பொருத்தமானவரான எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைதி ஏற்பட அவர் மேற்கொண்ட சீரிய முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இந்த விருது அமைந்திருக்கிறது.
  • கடுமையான அரசியல் நெருக்கடி, சமூக அமைதியின்மையை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஹைலேமரியம் தேசலான் விலகிய பிறகு, 2018 ஏப்ரலில் அப்பதவியை ஏற்றார் 43 வயதேயான அபி அகமத். நாட்டுக்குள் அரசியல் சூழலை நிலைப்படுத்தியதுடன் எல்லைப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தப் பல நடவடிக்கைகளை எடுத்தார்.
  • எரித்ரியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து சுமுகத் தீர்வு காண அவர் எடுத்த நடவடிக்கைகளை நோபல் விருதுக் குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது.

எத்தியோப்பியா – எரித்ரியா

  • எத்தியோப்பியாவிடமிருந்து 1991-ல் சுதந்திரம் பெற்ற எரித்ரியா, 1998-2000 காலகட்டத்தில் எத்தியோப்பியாவுடன் கடுமையான போரை நடத்தியது.
  • இந்தப் போரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அகதிகளாயின. 80,000-க்கும் மேற்பட்டோர் இருதரப்பிலும் உயிரிழந்தனர். எல்லையில் நீண்ட காலம் தொடர்ந்த அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொண்ட எரித்ரியா, அங்கே சர்வாதிகார ஆட்சியை நீட்டித்துக்கொண்டே போனது.
  • அரசை எதிர்த்தவர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர். இந்தச் சூழலில்தான், பிரதமராகப் பதவியேற்ற அபி அகமத், சமரசப் பேச்சுகளை உடனடியாகத் தொடங்கினார்; பதற்றத்தைத் தணித்தார். எரித்ரியாவுக்குச் சென்று அதிபர் இசையாஸ் அஃப்வெர்கியுடன் பேசினார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
  • பிறகு, உள்நாட்டிலும் பல சீர்திருத்தங்களை அமலுக்குக் கொண்டுவந்தார் அபி. எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் தடை நடவடிக்கைகளை விலக்கினார். பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமான அரசியல் கைதிகளை விடுதலை செய்தார். செய்தி ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

சீர்திருத்தங்கள்

  • அரசுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட எத்தியோப்பியக் குடிமக்கள், வெளிநாடுகளிலிருந்து தாய்நாடு திரும்பலாம் என்று அறிவித்தார். அமைச்சரவையில் சரிபாதி எண்ணிக்கையில் பெண்களுக்கு இடம் அளித்திருக்கிறார். ஒரோமா என்ற இனக் குழுவைச் சேர்ந்த அபி, அரசுடன் சமாதானப் பேச்சில் ஈடுபடுமாறு தனது இனக் குழுப் போராளித் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்து அமைதியை ஏற்படுத்தியிருக்கிறார்.
  • வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களால் 5,22,000 எத்தியோப்பியர்கள் அகதிகளாகிவிட்டனர்.
  • அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால், இந்த வன்முறை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மோதல்களையும் வன்செயல்களையும் முடிவுக்குக் கொண்டுவர புதிய செயல்திட்டத்தை அபி வகுத்தாக வேண்டும்.
  • உள்நாட்டு, எல்லைப்புறப் போர்களால் வெளியேறிய லட்சக்கணக்கான எத்தியோப்பியர்களை மீண்டும் அவர்களுடைய இடங்களில் குடியமர்த்த வேண்டும். எரித்ரியாவுடனான போரை நிறுத்தியதைப் போல இதற்கும் அவர் முன்னுரிமை தர வேண்டும்.
  • இதையெல்லாம் அவர் செய்யும்பட்சத்தில் அமைதி நோபல் பரிசுக்கு மேலும் தகுதியானவராக அபி இருப்பார்.

நன்றி: இந்து தமிழ் திசை (18-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories