TNPSC Thervupettagam

பொருளாதாரச் சுணக்கத்தை நோக்கி இழுத்துச்செல்கிறதா மோட்டார் வாகனத் துறை வீழ்ச்சி?

August 9 , 2019 1980 days 1149 0
  • இந்தியாவுக்கு இது கெட்ட செய்தி என்றால், தமிழ்நாட்டுக்கு மேலதிகம் கூடுதல் கெட்ட செய்தி. உலகமே, அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி நாடுகளே பொறாமையுடன் பார்க்கும் அளவுக்கு இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் பெருகி உச்சம் தொட்ட மோட்டார் வாகன உற்பத்தித் துறை இப்போது பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானோருக்கு வாய்ப்பளிக்கும் இத்துறையில் ஏற்படும் எந்த மாற்றமும் சங்கிலித் தொடராகப் படிப்படியாக மற்ற துறைகளுக்கும் பாதிக்கக்கூடிய வல்லமை மிக்கது என்பதால், மிகப் பெரிய பொருளாதாரச் சுணக்கத்தை இது ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் இப்போது சூழ ஆரம்பித்திருக்கிறது.
  • இந்திய மோட்டார் வாகன உற்பத்தித் துறை ரூ.8.5 லட்சம் கோடி பணம் புழங்கும் துறை. நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்றரைக் கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறை. 2021-ல் இந்திய மோட்டார் வாகன உற்பத்தித் துறைதான் உலகிலேயே மிகப் பெரிய தொழில் துறையாக இருக்கும் என்று கடந்த ஆண்டுகூட ‘மெக்கின்சி அண்ட் கோ’ அறிவிக்கும் அளவுக்குச் செல்வாக்கோடு இருந்த துறை. ஆனால், அரசின் கொள்கைகள், நிதித் துறை நிலைமை உள்ளிட்ட காரணங்களால், இன்று நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பெரிய வேலைக்களம்

  • இந்திய உற்பத்தி மதிப்பில் 7.5% பங்களிப்பு, மோட்டார் வாகன உற்பத்தித் துறையுடையது. நாட்டின் முதல் 5 பெரிய மோட்டார் வாகன நிறுவனங்கள் மட்டுமே நேரடியாக 1,50,000 பேருக்கு வேலை தருகின்றன. மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் தரும் மொத்தமுள்ள 64,000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் 6 லட்சம் பேருக்கு வேலை தருகின்றன. பழைய கார்களின் சந்தை மதிப்புமே ரூ.90,000 கோடியாக இருக்கிறது.
  • மோட்டார் வாகனங்களுக்கான பாகங்களையும் சாதனங்களையும் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டும் தனியாக 50 லட்சம் பேருக்கு வேலை தருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் இவற்றின் பங்களிப்பு மட்டுமே 2.3%. இது தவிர, நாடு முழுக்க 25,000 மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றில் மட்டும் 50 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். இவற்றில் பல விற்பனை மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு சேவைகளையும் அளிக்கின்றன. மாருதி கார் நிறுவனம் மட்டும் 3,200 பழுதுபார்ப்பு, சேவை நிறுவனங்களை நடத்திவருகிறது என்றால், அதிகாரபூர்வமாகவும் அதிகாரபூர்வமற்ற வகையிலும் இத்துறையின் வீச்சைப் புரிந்துகொள்ளலாம்.

வேகமான சரிவும் வேலைவாய்ப்பின்மையும்

  • இன்றைக்கு இந்தியாவில் உள்ள வாகன நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் வாகனங்களின் எண்ணிக்கை 7.2 கோடி. ஆனால், புதிய வாகனங்கள் வாங்கப்படுவது வேகமாகக் குறைகிறது. ஜூன் மாதம் மட்டும் இப்படி 3.2 லட்சம் வாகனப் பதிவு குறைந்திருக்கிறது. 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 5 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியிருக்கின்றன. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ‘மாருதி சுஸுகி’யில் மட்டும் விற்பனை மூன்றில் ஒரு பங்கு – 1.09 லட்சம் வாகனங்கள் – குறைந்திருக்கிறது. விலையில் தள்ளுபடி, சேவையில் சலுகை என்றெல்லாம் அறிவித்தும்கூட வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை என்கிறார்கள்.
  • வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களைச் சுதாரித்துக்கொள்ளும் வகையில், விரிவாக்கப்பட்ட உற்பத்தியகங்களின் இயக்கத்தை நிறுத்திவருகின்றன. தொடர்ந்து ஆட்குறைப்பையும் தொடங்கிவிட்டிருக்கின்றன. ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோர்தான் முதல் குறி என்று அம்பத்தூர், ஒரகடம் தொழிற்பேட்டைகளில் சொல்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைத் தரும் சிறு நிறுவனங்களுக்கு அவற்றுக்கான உரிய பணம் வந்தடைவதிலும் பெரும் தேக்கம் உண்டாகியிருப்பதோடு, அங்கும் உற்பத்தி நிலைகுலையத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள்.
  • நான்கு மாதங்களில் மட்டும் 3.5 லட்சம் பேர் இத்துறையில் வேலை இழந்திருக்கின்றனர். “நிலைமை இப்படியே சென்றால், அடுத்த சில மாதங்களுக்குள் 10 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்” என்கிறார் இந்திய மோட்டார் வாகன உதிரிபாக உற்பத்தியாளர் சம்மேளனத் தலைமை இயக்குநர் வின்னி மேத்தா.

தமிழகத்துக்குக் கூடுதல் தலைவலி

  • ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இது சிக்கல் என்றாலும், தமிழ்நாட்டுக்குக் கூடுதல் சிக்கல். ஏனென்றால், இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தித் துறையின் மையம் சென்னைதான். ஆசிய அளவில் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூரிலும் ஒரகடத்திலும் 22 மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளும், 45 மோட்டார் வாகன பாகங்கள் உற்பத்தி ஆலைகளும், 6 டயர் உற்பத்தி ஆலைகளும் இருக்கின்றன.
  • இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கும் விதத்தில் தமிழகம் திகழ்கிறது. ஆண்டுக்கு இங்கிருந்து 13,80,000 கார்கள், 3,61,000 கனரக வணிக வாகனங்கள் உற்பத்தியாகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் இத்தொழிலில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது, ஆண்டு விற்றுமுதல் ரூ.1,65,000 கோடியாக இருக்கிறது.
  • நாட்டில் ஏற்கெனவே வேலைவாய்ப்புகளுக்கான பெரிய நெருக்கடி உருவாகிவருகிறது. ஒவ்வொரு நாளும் வேலை தேடிக் களத்தை நோக்கி, கோடிக்கணக்கான இளைஞர்கள் வீதியில் காலடி எடுத்துவைத்துவரும் நிலையில், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், வேலைவாய்ப்புக்கான முக்கியக் களங்களில் ஒன்றாக இருக்கும் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் ஏற்கெனவே உள்ள வேலைகளும் காலியாக ஆரம்பித்திருப்பது பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

காரணமும் தீர்வும்

  • இந்திய அரசின் பணமதிப்புநீக்க நடவடிக்கையும், பொதுச் சரக்கு சேவை வரி அமலாக்கமும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும் சிதைவுகள் இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன; மேலதிகம், மோட்டார் வாகன உற்பத்தித் துறை சார்ந்த அரசின் குழப்பமான கொள்கைகளும் பிரச்சினையை மேலும் வலுப்படுத்திவருகிறது என்கிறார்கள். நேரடிப் பணப் பரிவர்த்தனையைக் குறைக்கும் விதமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் அமைப்புசாராப் பொருளாதாரத்தைப் பெரும் அளவில் கொண்ட இந்தியாவின் வாங்கும் திறனில் பெரிய ஓட்டையை உண்டாக்கிவிட்டது. உளவியல்ரீதியாக மக்கள் ஒரு பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்குள் சிக்கியிருக்கின்றனர். தேவையற்ற அல்லது ஆடம்பர நுகர்வைக் குறைத்துக்கொண்டுவருகின்றனர்.
  • 2018-ல் 13.8% ஆக இருந்த ‘விரைவு விற்பனை நுகர்பொருள் சந்தை’ 2019-ல் 11% ஆக சரிந்திருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் மீதான நுகர்வே குறைந்துவரும் நிலையில், ஏதோ ஒருவிதத்தில் ஆடம்பரப் பொருளாகவே கருதப்படும் மோட்டார் வாகனங்களைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை.
  • மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பார்வையை அரசு கொண்டிருக்கிறது. காற்று மாசைக் குறைக்க சுற்றுச்சூழலோடு இயைந்த கொள்கையை அரசு வரித்துக்கொள்வதில் குறை கூற முடியாது. ஆனால், பணமதிப்புநீக்கம், பொதுச் சரக்கு சேவை வரி அமலாக்கத்தைப் போலவே உரிய கலந்தாலோசனை, முன்னேற்பாடுகள், போதிய கால அவகாசம் இன்றி அது முன்னெடுக்கும் தடாலடி முடிவுகள் பெரும் பிரச்சினையாக மாறிவருகின்றன. கடந்த மாதங்களில் மோட்டார் உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் நடத்திய கூட்டத்திலேயே இந்த விஷயம் மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதை அரசுத் தரப்புக்கு அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.
  • மின்சக்தி வாகனங்களை ஊக்குவிப்பதற்காக அதன் மீதான வரி 12% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது; அதேபோல, மின் வாகன சார்ஜர்கள் மீதான வரியும் 18% என்பதிலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மோட்டார் வாகனங்கள் மீதான வரி 28% ஆக உயரிய நிலையில் இருக்கிறது. ஏற்கெனவே காற்று மாசைக் குறைக்கும் வகையில், அரசு கொண்டுவந்திருக்கும் சில கட்டுப்பாடுகள் வாகனங்களின் விலையை 8% அளவுக்கு உயர்த்திவிட்டிருக்கின்றன. இந்தியாவில் 60-70% வாகனங்கள் நிதியுதவியால் வாங்கப்படும் நிலையில், வாகனங்கள் வாங்க நிதியுதவி அளித்துவரும் நிறுவனங்கள் காட்டிவரும் சுணக்கமும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.
  • ஆக, எல்லாமும் சேர்ந்து மோட்டார் வாகன உற்பத்தித் துறையை வீழ்ச்சி நோக்கித் தள்ளுகிறது. ஏற்கெனவே, சுணக்கத்தில் இருக்கும் பொருளாதாரத்தை இந்த வீழ்ச்சி மேலும் பின்னோக்கித் தள்ளுகிறது என்ற குரல்கள் ஒலிக்கின்றன. இப்போதைக்கு அரசின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது. ஆனால், அரசு எடுக்கும் முடிவுகள் வெறுமனே மோட்டார் உற்பத்தித் துறையை மட்டும் முடுக்கிவிடுவதாக அல்லாமல், மக்களுடைய வாங்கும் சக்தியைத் தூண்டுவதாகவும் அமைய வேண்டும். ஏனென்றால், மக்களுடைய வாங்கும் சக்தியின் திறனையும் சேர்த்துதான் மோட்டார் உற்பத்தித் துறை ஒருவகையில் பிரதிபலிக்கிறது!

நன்றி: இந்து தமிழ் திசை(09-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories