- இந்தியப் பொருளாதாரம் இந்தப் பத்தாண்டின் எஞ்சிய காலங்களில் ஆண்டுக்கு 6.5% என்ற அளவுக்கே மிதமான வளர்ச்சி காணும் என்று நாட்டின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் கணித்திருக்கிறார்; மோடி அரசின் ஆடம்பரமான அறிவிப்புகளுக்கும் அபார சாதனை மார்தட்டல்களுக்கும் இடையில் இப்படியொரு அடக்கமான ஒப்புதல் வாக்குமூலமும் வழக்கத்துக்கு மாறாக வெளிப்பட்டிருக்கிறது. முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் இருந்து எவருடைய கவனத்தையும் ஈர்த்துவிடாமல் கவனமாகச் செயல்படும் நாகேஸ்வரன், எப்போதாவதுதான் (பொருளாதாரம் பற்றி) பேசுகிறார்.
- கொச்சி நகரில் கடந்த திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமான தகவலை அவர் தெரிவித்திருக்கிறார்: “இந்தப் பத்தாண்டின் எஞ்சிய ஆண்டுகளில் ஆண்டுக்கு 6.5% என்ற அளவிலேயே இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இருக்கும்; உலக அளவில் பொருளாதாரத் துறையில் கொந்தளிப்புகளும், வளர்ச்சியடைய விடாமல் தடுக்கும் எதிர்காற்றுகள் வீசினாலும் இது தொடரும். எண்ம (டிஜிட்டல்) பொருளாதார நடவடிக்கைகளாலும் முதலீடுகளாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் கூடுதலாக 0.5% முதல் 1% வரையில் கொண்டு செல்லக்கூடும்…” என்றார்.
- ‘கோவிட் - 19’ பெருந்தொற்றுக்கு முன்னதாக பீற்றிக்கொண்டதைப் போல, இனி இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்று அரசு உணர்ந்திருக்கிறது; அரசு அதை எதிர்பார்க்கவில்லை என்பதையே இந்த அறிவிப்பு உணர்த்துகிறது. 2004 முதல் 2010 வரையிலான ‘பொற்கால ஆட்சி’ வளர்ச்சியையும் இந்த அரசு பின்பற்றப்போவதில்லை. நிலையான விலைகள் அடிப்படையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2022 - 2023 இறுதியில் 3.75 பில்லியன் (375 கோடி) அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 6.5% என்ற அளவில்தான் வளரும் என்றால், 500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சியை எட்டும் ஆண்டு ஏற்கெனவே 2023 - 2024லிருந்து 2025 - 2026க்கு ஒத்திவைக்கப்பட்டது - இப்போது 2027 - 2028க்கு மேலும் தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.
யார் இதற்குக் காரணம்?
- மிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டுக் காரணங்களும் புறவுலகச் சூழல்களும் காரணங்கள். இந்தியாவுக்கு வெளியே அல்லது உலகச் சூழலில் நிகழும் நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, அப்படி நேருவதை உரிய எதிர் நடவடிக்கைகள் மூலம் சமாளிக்கப் பார்க்கலாம். உதாரணத்துக்கு ரஷ்யா - உக்ரைன் போரையோ, பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை வேண்டுமென்றே குறைப்பதென்று முடிவெடுத்த எண்ணெய் உற்பத்தி நாடுகளையோ நம்மால் ஏதும் செய்ய முடியாது. இந்தப் போர் மேலும் நீடித்தாலோ அல்லது சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலோ அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி பாதிப்புகளுக்கு இந்த அரசை யாரும் குறை சொல்லப்போவதில்லை.
- ஆனால், உள்நாட்டு நிகழ்வுகள் அல்லது போக்குகள் இந்த அரசின் நிர்வாகப் பொறுப்புக்கு உள்பட்டவை. இப்படிப்பட்ட தருணங்களில் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் சரிவிலிருந்து மீட்கவும் அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டாக வேண்டும், துள்ளிக் குதிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சிக்கு விசை கூட்ட வேண்டும். பொருளாதார வளர்ச்சி வேகம், 2016 நவம்பரில் எடுக்கப்பட்ட ‘உயர் பணமதிப்பு நீக்கம்’ என்ற தவறான நடவடிக்கையால் இழக்கப்பட்டது.
- வளர்ச்சி வேகம் 2017 - 2018, 2018 - 2019, 2019 - 2020 ஆகிய ஆண்டுகளில் சரிந்தது. அதற்குப் பிறகு யாருமே எதிர்பாராத – யாராலும் தடுத்திருக்க முடியாத ‘கோவிட்-19’ என்ற கொடிய தொற்றுநோய் உலகமெங்கும் பரவியது. அதனால் தொடர்ச்சியாக பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் முடங்கும் வகையில் ‘பொது முடக்கம்’ அறிவிக்க நேர்ந்தது. அந்த முடக்கமும் நீண்ட காலம் தொடர்ந்தது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியும் அதற்கு ஆதரவாக முடிவெடுக்க அரசு நீண்ட கால தாமதம் செய்தது.
- தொடர்ந்து மூடப்பட்டதால் தவித்த சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு அரசு அளித்த நிதியுதவிகளும் சலுகைகளும் போதவேயில்லை. பெருந்தொற்றால் வேலையும் வருமானமும் இழந்து வறுமையில் வாடிய ஏழைகளின் வங்கிக் கணக்குக்கு அடிப்படை வாழ்க்கைக்கான ஆதாரச் செலவுகளுக்காக சிறிது பணத்தைப் போடுங்கள் என்ற யோசனையையும் ஏற்பதற்கு அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. இவற்றால் ஆயிரக்கணக்கான தொழில் உற்பத்திப் பிரிவுகள் மூடப்பட்டன, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் நிரந்தரமாக இழக்கப்பட்டன.
- பெருந்தொற்றுக் காலத்தில் வேலைக்காக சென்ற ஊர்களில் வாழ முடியாது என்பதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப போக்குவரத்து வசதி செய்து தரப்படாததால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுகளை நடந்தும் சைக்கிள் போன்ற சிறு வாகனங்களிலும் கடந்தனர், நூற்றுக்கணக்கானவர்கள் வழியிலேயே பசியாலும் நோயாலும் இறந்தனர். இருந்தாலும் அரசு பொருளாதார வளர்ச்சிக்கு ‘அளிப்புத் துறை’ (சப்ளை சைடு) நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தியது, பொருள்கள் – சேவைகளுக்கான தேவையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க பிடிவாதமாக மறுத்துவிட்டது. அதாவது பொருள்களும் சேவைகளும் கிடைக்க உதவியது, ஆனால் அவற்றின் பெருக்கத்துக்கு ஊக்குவிப்பு தரவில்லை.
ஆறுதல்படக்கூட முடியாத மீட்சி!
- இவற்றின் விளைவாக, பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு பொருளாதாரத்தில் ஏற்பட்ட மீட்சி வலிமையற்றதாகவும் மிகவும் குறுகியதாகவும்தான் இருந்தது. பின்வரும் அட்டவணை அதைக் காட்டுகிறது:
நிலையான விலையில் (ரூபாய் கோடிகளில்)
- அரசு, தனியார் இரண்டும் சேர்ந்து செய்த மொத்த நுகர்வுச் செலவு 6.3% அளவுக்கு வளர்ந்தது. மொத்த நிரந்தர மூலதனச் செலவு 1.3% அதிகரித்தபோது, ஜிடிபி வளர்ச்சி வீதம் முழு ஆண்டுக்கும் 9.1%லிருந்து (2021 – 2022இல்) 7.2%ஆக (2022 – 2023இல்) சரிந்தது. அரசு செய்யும் மூலதனச் செலவைவிட நுகர்வுச் செலவுதான் இந்தியாவின் பொருளாாதார வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது என்பது அனுபவப்பூர்வ உண்மை. நுகர்வு வேகம் வளராததற்குக் காரணம் மக்களிடம் செலவழிக்கப் பணம் இல்லை, அல்லது செலவழிக்க யோசிக்கும் அளவுக்குப் பொருள்களின் விலை அதிகமாக இருந்தது, அல்லது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் நிலவியது, அல்லது இந்த மூன்று காரணங்களும் சேர்ந்தும்கூட நுகர்வைக் குறைத்தது என்று கொள்ளலாம்.
- மொத்த ‘பொருளாதார மதிப்பு கூட்டப்பட்ட’ (ஜிவிஏ) செயல்களைப் பார்த்தால், வேளாண்மை, நிதி மற்றும் தனித் தொழில் சார்ந்த சேவைகள் தவிர மற்றவற்றில் வளர்ச்சி வீதமானது 2021 - 2022ஐவிட அடுத்த ஆண்டான 2022 – 2023இல் குறைந்துவிட்டது. கனிமம் – குவாரித் தொழில்களில் வளர்ச்சி 4.6%ஆக 2022 – 2023இல் இருந்தது (முந்தைய ஆண்டில் அது 7.1%), தொழிற்சாலை உற்பத்தித் துறையில் அது 1.3% (முந்தைய ஆண்டு 11.1%) ஆகவும், கட்டிட கட்டுமானத் துறையில் 10.0% (முந்தைய ஆண்டு 14.8%) ஆகவும் சரிந்தது. இந்த மூன்றும் தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்தும் துறைகளாகும்.
- சில்லறைப் பணவீக்கம் (விலைவாசி உயர்வு) 4.3% என்ற மிதமான அளவில் இருந்தாலும் நாம் இன்னும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிடவில்லை. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரித்திருக்கிறார்: “நம்முடைய கணிப்புப்படி விலையுயர்வு அற்ற நிலை (டிஸ்ஃபிளேஷன்) மிக நிதானமாகவும் – நீடித்தும் இருக்கும், நடுத்தர காலகட்டத்துக்குள் விலைவாசியை 4% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் இலக்கும் இதில் இணையும்; ஒவ்வோர் ஆண்டும் படித்து முடித்துவிட்டும் 18 வயது நிரம்பியதாலும் வேலை தேடி வரும் இளைஞர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருப்பதால், பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள், வளர்ச்சி போதாது என்பதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது.” அனைத்திந்திய அளவில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 2023 ஏப்ரலில் 8.11% என்று சிஎம்ஐஇ அறிக்கை தெரிவிக்கிறது. உற்பத்தியில் தொழிலாளர்கள் பங்கேற்பது 42%ஆகத் தொடரும் நிலையிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது.
6-5-8 போக்கு
- ஒரு காலத்தில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பொருளாதார வளர்ச்சி 5%ஆகவும், வேலையில்லாத் திண்டாட்டம் 5%ஆகவும் இருக்கும் என்ற முடிவோடு செயல்பட்டார்கள். அதனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் ஆழ்ந்தார்கள், சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைவிட இந்தியா வளர்ச்சியில் பின்தங்கியது. அதேபோன்ற நிலைமைதான் இப்போதும் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அஞ்சுகிறேன். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் ‘அமிர்த காலம்’ குறித்து பெருமைபடப் பேசுகிறார்கள் ஆனால், ஆண்டுக்கு 8% முதல் 9% வரையில் ஜிடிபி இருக்கும் என்று பேசுவதைத் தவிர்க்கிறார்கள். 6% பொருளாதார வளர்ச்சி, 5% பணவீக்கம், 8% வேலையில்லாத் திண்டாட்டம் என்ற எண்களால் திருப்திப்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது.
- இந்த எண்ணிக்கை, பொருளாதாரப் பேரழிவை எதிர்நோக்கி இருக்கிறது இந்தியா என்பதையே உணர்த்துகிறது. கோடிக்கணக்கான மக்கள் மேலும் வறுமையில் சிக்கப்போகிறார்கள், இப்போதிருப்பதைவிட மேலும் பல கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கப்போகிறார்கள், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி மேலும் பல மடங்கு அதிகமாகப் போகிறது. அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்தியாவால் நடுத்தர வருவாயுள்ள நாடாகக்கூட ஆக முடியாது.
- நம்முடைய இலக்குகளை உயர்த்தியும் திருத்தியும் அமைக்க வேண்டிய நேரம் இது. ஆண்டுக்கு 8% முதல் 9% வரையில் ஜிடிபி வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்க வேண்டும், அந்த வளர்ச்சியையும் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற துடிப்பும் செயல்திட்டங்களும் அவசியம். ஆனால், இந்த இலக்குகள் எல்லாம் இப்போதைய ஆட்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களின் செயல்திறமைக்கு அப்பாற்பட்டவை என்றே தோன்றுகிறது.
நன்றி: அருஞ்சொல் (19 – 06 – 2023)