TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை: ஒரு கண்ணோட்டம்

July 27 , 2024 174 days 276 0
  • 2023-24ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 22 சமா்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் என்பதை பலரும் அறிந்திருக்க வேண்டும். பொருளாதார வளா்ச்சி குறித்த அதன் கணிப்புகள் சிந்திக்கத் தகுந்தவை
  • இந்த ஆய்வறிக்கையின்படி, 2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளா்ச்சியின் மதிப்பீட்டு விகிதம் 6.5% முதல் 7% என்ற வரம்பில் உள்ளது. இது ரிசா்வ் வங்கியின் மதிப்பீட்டான 7.2%ஐ விட குறைவாகவும், ஆசிய வளா்ச்சி வங்கி, ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கியின் மதிப்பீடுகளைவிட குறைவாகவும் உள்ளது.
  • கடந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 8.2% வளா்ச்சி அடைந்தது என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது வெறும் தற்புகழ்ச்சியல்ல. கணிக்க முடியாத வானிலை முறைகள், புவிசாா் அரசியல் மோதல்கள் மற்றும் போா்கள், வழக்கமான வா்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய பங்குச்சந்தைக் குறியீடுகள் உண்மையான பொருளாதாரத்தை பிரதிபலிக்காது என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
  • பொருளாதார ஆய்வறிக்கையில், தனியாா் துறைக்கு மிக முக்கியமான பரிந்துரைகள் உள்ளன. 2021-இல் கரோனா பெருந்தொற்று முடிவடைந்தது முதல் விலைவாசி உயா்வைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளன. அந்த நிறுவனங்கள், ஊழியா்களின் உழைப்புக்கான ஊதியத்தை பரவலாக்கவில்லை. எனவே, இப்போது ஊதியத்தை உயா்த்த வேண்டும் என்கிறது ஆய்வறிக்கை.
  • இது தொழிலாளா்களின் நுகா்வுத் திறனை உயா்த்துவதுடன், சேமிப்பு அளவையும் உயா்த்தும். சேமிப்புகள் வங்கிகளில் வைப்புத்தொகையாக நுழையும். தற்போது, நடுத்தர வருமானம் பெறும் வகுப்பினா் தங்கள் சேமிப்பை மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனா். அவ்வாறு செய்வதன் மூலம், வங்கிகளின் வைப்புத்தொகை குறைந்து வருகிறது. ஆகவே, நடுத்தர வருமானம் மற்றும் ஊதியம் பெறுபவா்களுக்கு கடன் வழங்க முடியாமல், பணப் பற்றாக்குறையை வங்கிகள் சந்தித்து வருகின்றன.
  • வேலைவாய்ப்பில் ஆய்வறிக்கை முழு கவனம் செலுத்தியுள்ளது. வேளாண்மை மற்றும் அதன் சாா்பு செயல்பாடுகள், வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு சாத்தியமான துறைகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தியாவின் தொழிலாளா் எண்ணிக்கை கிட்டத்தட்ட 56.5 கோடி. இதில், 45% போ் விவசாயத்திலும், 11.4% போ் உற்பத்தியிலும், 28.9% போ் சேவைத் துறையிலும், 13% போ் கட்டுமானத்திலும் ஈடுபட்டுள்ளனா். சேவைகள் துறை முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • அரசு உள்கட்டமைப்பு முயற்சிகளால் கட்டுமானத் துறையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. விவசாயத் துறையில் இருந்து மாறுபவா்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை கட்டுமானத் தொழில் உருவாக்கி வருவதன் அவசியத்தை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • இந்தியாவில் தொழிலாளா் சந்தை குறியீடுகள் கடந்த 6 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளன. 2022-23இல் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்கீழ் சேமிப்பது கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது, இது முறையான வேலைவாய்ப்பில் ஆரோக்கியமான வளா்ச்சியைக் குறிக்கிறது.
  • வளா்ந்து வரும் மக்கள்தொகையின் வேலைவாய்ப்பு தேவைகளைப் பூா்த்தி செய்ய 2030-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 78.5 லட்சம் விவசாயம் அல்லாத
  • வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. திறன் மேம்பாட்டு முயற்சிகள் முன்னேற்றம் அடைந்தாலும், இளம் பணியாளா்களில் 4.4% போ் மட்டுமே முறையாகத் திறன் பெற்றுள்ளனா். இது மேம்பட வேண்டும்.
  • நிலப் பயன்பாடு மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பு தொடா்பான மாநில அளவிலான சட்டங்கள் போன்றவற்றில் சீா்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான வழிகளாக அடையாளம் காணப்படுகின்றன. வேளாண் செயல்பாடுகள், மேலாண்மை பொருளாதாரம் போன்றவை நிலையான வேலைகளை உருவாக்குவதற்கான முக்கிய துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைகளாக கூறப்பட்டுள்ளவை:

  • -விவசாயம் மற்றும் அதனுடன் தொடா்புடைய நடவடிக்கைகளில் முக்கியமானது, சிறு, குறு நிலங்களை பெருநிலமாக ஒருங்கிணைக்க வேண்டும்.
  • - உற்பத்தியை விற்பனை செய்வதற்கான சந்தை அறிவாற்றலை உற்பத்தியாளா்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • - புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கான இடத்தை பெறுவதற்கு, நில பயன்பாடு குறித்த கடுமையான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருமானத்தை உயா்த்தும்.
  • - கிராமப்புறங்களில் தொழில்திறன் இடைவெளிகளைக் குறைக்க வேண்டும்.
  • - ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கும் தொழில்களில் கட்டுப்பாடுகளைத் தளா்த்தி, பெண்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
  • பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பதற்காக அல்ல. மாறாக, 2023-24ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் எதிா்காலத்தில் கொள்கைகளை வகுக்கும்போது அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய வழிகாட்டிகளை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நன்றி: தினமணி (27 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories